ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறை ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன.
இலங்கை அரசியல் யாப்பின்படி ஜனநாயக தேர்தல் ஒன்றின் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் 6 வருடங்கள் பதவி வகிக்க முடியும் என்பதோடு பதவி காலத்தில் நான்கு வருடங்கள் பூர்த்தியான பின் மக்கள் கருத்தரிய ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்க முடியும் என்றும் ஏற்பாடுகள் உள்ளன.
2005 நவம்பர் 19 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ முதல் முறையாக இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
தனது 6 வருட பதவி காலம் முடிவதற்கு முன்னரே 2009 நவம்பர் 23ம் திகதி மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு 2010 ஜனவரி 26ம் திகதி தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றார்.
எனினும் 2010 நவம்பர் 19ம் திகதியே ஜனாதிபதி இரண்டாவது முறைக்காக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இரண்டாவது முறை பதவி காலம் நிறைவடைய இன்னும் 2 வருடங்கள் இருக்கும் நிலையில் ஜனாதிபதி மீண்டும் ஒரு தேர்தல் அறிவிப்பை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (19) நள்ளிரவு ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வர்த்தமானி மூலம் அறிவிப்பார் என தெரியவந்துள்ளது.