Breaking
Mon. Dec 23rd, 2024

நிறைவேற்று அதிகாரத்தின் தொடுவாயிலிருந்து சில சந்தர்ப்பங்களை மீட்டிப்பார்க்கும் நிர்ப்பந்தங்களை இரண்டு மாத அரசியல் இழுபறி எனக்குள் ஏற்படுத்திற்று. இதனால் ஒப்பீட்டு ஆய்வுக்குள் நான் திணிக்கப்பட்டுள்ளேன். 1978 பெப்ரவரி 04 இல் நடைமுறைக்கு வந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை யாரைப் பாதுகாக்கும்? எவரைப் பாதுகாத்தது? ஏன் தேவைப்பட்டது?

சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு வியாக்கியானம் வழங்கும் சட்டாம்பிள்ளைகளுக்கு சத்திய வாக்காகப் பதிலுரைக்க இதற்குத் தெளிவு தேவை. ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகளும் நிறைவேற்று அதிகாரத்தின் நிஜம் என்ன, நிழல் எதுவென்பதற்கு விளக்கம் வேண்டுகின்றனர். பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலத்துடனிருந்த ஜெயவர்தனவுக்கு, தனது எம்பிக்களே தன்னைக் கட்டுப்படுத்துவதா? 161எம்பிக்களில் 140 பேர் ஐக்கிய தேசிய கட்சியைச் சார்ந்தவர்கள். கட்சியின் தலைவரும் நானே! .பாராளுமன்றப் பலமும் எனதே! இந்நிலையில் இச்சபைக்கும், தனது எம்.பிக்களுக்கும் ஏன் கட்டுப்பட வேண்டும்? வெளியேறி விடுதலை பெற்றால் என்ன? இச் சிந்தனைகளே பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறும் ஜனாதிபதி முறைமையை இல்லாமாக்கியது.

எடுத்த தீர்மானம் அத்தனையும் நிறைவேற வேண்டும், எவரையும் கேட்காமல் தீர்மானம் எடுக்க வேண்டும். இதற்கு என்ன வழி? பாராளுமன்றத்திலிருந்து விலகிச் செயற்படுதல், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக உருமாறல், இவ்வாறு உருமாறிய கையோடு இதுவே பொருத்தமான பதவி என்பதை மக்களுக்கு உணர்த்துதல், இதுதான் உள்ள வழி. இனியென்ன? உத்தரவிட்டார் எம்பிக்களுக்கு, உடன் இணங்கினர் ஐ.தே.க.எம்பிக்கள் ஜேஆரின் நம்பிக்கைக்கு. எனினும் ஜெயவர்தனவின் ஆட்சிக்காலங்கள் நிறைவேற்று அதிகாரத்துக்கான தகுதிகாண்காலமாகவே confirmation period கொள்ளப்பட்டன. எவருக்கும் எந்த உத்தரவாதமும் வழங்காமல், அறிமுகமான இந்த அதிகாரத்தில் எவ்வாறு நம்பிக்கை ஏற்படும்? ஆனால் யாரோ சிலர் இவ்வதிகாரம் சிறுபான்மைச் சமூகங்களுக்கான பாதுகாப்பு வேலி என்ற நம்பிக்கையை அரசியல் நோக்கிற்காக விதைத்து விட்டனர். எனினும் நிறைவேற்று அதிகாரம் சிறுபான்மை சமூகங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை ஜேஆரின் காலம் ஏற்படுத்தியிருக்காது.

பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெறாமல் தனிமனிதரால் எடுக்கப்பட்ட அத்தனை முடிவுகளும் சமூகங்களின் நம்பிக்கையை மட்டும் அழிக்கவில்லை? தமிழ் மொழியினரின் இருப்புக்களையும் இருட்டுக்குள் வீழ்த்தியிருந்தது. தமிழர்களின் அஹிம்சைப் போராட்டத்தை, ஆயுதப்போராக பரிணமிக்கச் செய்ததும் இந்த அதிகாரத்தின் அளவுகடந்த எல்லைகளே! “போரென்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம்”. தனிநபரின் இந்த இடாம்பீகப் பேச்சுக்கு வித்திட்டதும் இந்த அதிகாரமே.

பாராளுமன்றத் தேர்தலை நடத்தாது சர்வஜன வாக்கெடுப்பால் ஆயுளை நீட்டிக்கொண்ட ஜெயவர்தன, தனி நபராக “நானே முடிவெடுக்கையில் பாராளுமன்றம் எதற்கு? கட்சித் தீர்மானங்கள் யாருக்கு?” என்ற யதார்த்தத்தை தனது போக்கினால் புலப்படுத்தினார். அவசரகாலச் சட்டத்தைக் கையிலெடுத்து கிளர்ச்சியாளர்கள் அனைவரையும் கிள்ளியெறிந்தார். இதனால் தமிழ் எம்.பிக்கள் நம்பிக்கையிழந்து தப்பிச் சென்றனர் இந்தியாவுக்கு.

மடியிலேதான் பாதுகாப்பு வந்துள்ளதே! இனியென்ன மனக்கலக்கம் என்றிருந்தனர் முஸ்லிம் எம்.பிக்கள். கூடாராத்துக்குள் கழுத்தை நுழைக்க இடம் கேட்டு, உடல் முழுவதையும் நுழைத்துக் கொண்ட ஒட்டகத்தின் திமில் போல ஜெயவர்தனவின் நிறைவேற்று அதிகாரம் உச்சத்திற்குச் சென்று முஸ்லிம்களின் மத உணர்வுகளையும் சீண்டிப்பார்த்தது.

இஸ்ரேலுக்கு வரவேற்பா? விடக்கூடாது ஜே ஆரை. வீண்டெழுந்த முஸ்லிம் எம்பிக்களை “விரும்பினால் இருக்கவும். வெறுப்பென்றால் வெளியேறவும்” என்று விரட்டியதும் நிறைவேற்று அதிகாரத்தின் கொடிய கரங்களே. இக்கொடிய கரங்களுக்குள் அகப்பட்டால் ஆபத்து என்றுணர்ந்து புற்றுக்குள் போய் ஒழிந்தனர் முஸ்லிம் எம்பிக்கள்.இதற்குப்பின்னரும் நிறைவேற்று அதிகாரமே எமக்குத் தேவை என்று எந்தச் சிறுபான்மை சமூகம் சொல்லும்?

இத்தனையும் அனுபவித்த பின்னரும் இரண்டாவது நிறைவேற்று ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசவை முஸ்லிம் காங்கிரஸ் ஏன் ஆதரித்தது? இதற்கான பரிசாகவே 12 வீத வெட்டுப் புள்ளி ஐந்தாகக் குறைக்கப்பட்டு, முஸ்லிம்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டதாம்? ஆறுதலான வார்த்தைகள்தான் என்றாலும் ஜேஆர் காலத்து அநீதிகள் இன்னும் நீறுபூத்த நெருப்பாகவுள்ளதே! இதற்குப் பின்னர் இடம்பெற்ற ஐந்து ஜனாதிபதித் தேர்தல்களை 1994,2000,2005,2010,2015 சிறுபான்மைக் கட்சிகள் யுக்தியுடன் கையாண்டதா? பேரம் பேசும் சக்தியைப் பலப்படுத்தியதா? இந்தக் கேள்விக் கணைகள் நெஞ்சுக்குள்ளிருக்கும் நெருப்பை ஊதிப் பெரிதாக்குவதாலே இந்த ஆய்வுக்கட்டுரைக்குள் நெருப்பை அணைக்க விழைகின்றேன்.

சந்திரிக்காவின் நிறைவேற்று அதிகாரம் தமிழர்களுக்கு நேசக்கரம் நீட்டி, “சமாதானத்துக்கான போரென” புலிகளுடன் போர் முரசு கொட்டினாலும், தீர்வு தருமளவுக்கு மனம் தளரவில்லையே!. நினைத்ததைச் செய்யும் அதிகாரம் இவ்விடயத்தில் எதையும் நினைக்கவில்லையோ? இந்த அதிகாரத்திலா சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு? இதைப் பாதுகாக்கவா தமிழரும் முஸ்லிம்களும் வாக்களிப்பது? புலிகளுடன் ஒப்பந்தம் செய்த ரணிலின் அரசாங்கத்தைக் கலைத்து, நாட்டைப் பிளவிலிருந்து காப்பாற்றிய அதிகாரத்தில் முஸ்லிம்களுக்கு நலவிருந்ததா?

நலவிருந்ததோ இல்லையோ! இவ்விடயத்தில் முஸ்லிம்களுக்கு நன்றியிருந்தது என்பது உண்மையே.

பெரும்பான்மையின் அடக்கு முறைக்கு எதிராகப் போராடிய புலிகள் வடக்கு – கிழக்கில் தமிழ் பெரும்பான்மையை திணிக்க முனைந்ததால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட திகைப்பு, இந்த ஆட்சிக் கலைப்பில் தகைந்து, புலிகளின் ஒடுக்கு முறையும் ஒழிந்தது. இந்தத் திகைப்புத் தகைந்த நன்றிக்கடன் சந்திரிக்காவின் நிறைவேற்று அதிகாரத்தையே சாரும். எனினும், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் நலனுக்கா இது செய்யப்பட்டது? இல்லை.2004 பொதுத் தேர்தலுக்கு தெற்கின் விளை நிலத்தை தயார் படுத்திய தந்திரமா? தந்திரமேதான். இல்லாவிட்டால் சந்திரிக்கா தீர்வைத் தந்திருப்பாரே! சந்திரிக்காவின் அன்றைய தந்திரம், ரணிலுக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லியிருக்கும். நிறைவேற்று அதிகாரத்தின் அகலமான சிறகுகளை ஒடுக்கி, பாராளுமன்றத்தின் ஆயுளை நீட்டுதல். ஆஹா! அற்புதமான தத்துவம். அருமையான சந்தர்ப்பத்தைக் காத்திருந்தார் ரணில்.

நிறைவேற்று அதிகாரத்தால் புலிகளை ஒழித்த பின்னரே அடுத்த கட்ட அபிவிருத்திகள். ஆணை கோரினார் மஹிந்த. அள்ளி வழங்கியது சிங்களச் மூகம். இந்த ஆணையில்தான் இதன் அசல் வெளிப்பட்டது. யுத்த வெற்றிக்களிப்பில் திளைத்த மஹிந்தவுக்கு பாராளுமன்றத்திலே பதிலளிப்பது. இதற்காக சிறுபான்மையினரை வளைத்துப் போடுவது, இதுதான் ரணிலின் திட்டம்.

“நிறைவேற்று அதிகாரமும், தனிமனித மமதையும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை”. பந்தை எறிந்து பாராளுமன்றத்தில் வாய் திறந்தார் ரணில். 19 நிறைவேறி பதவியில் அமர்ந்த மைத்திரிக்குப் பத்தினிப் பெண்ணாக மட்டுமே பரிணமிக்க முடிந்தது. அன்று வந்த ஆசை இன்று நிறைவேறியதில் ரணிலுக்குப் பெருமையே. நீண்டகாலப் பொறுமையே இந்தப் பெருமையைத் தேடித்தந்தது. ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மட்டுமே மாற்ற முடியாத அதிகாரத்தை மட்டுப்படுத்தியாச்சு. விஷப்பல் பிடுங்கிய பாம்புக்குப் பல்லியும் பயப்படாதே. இனி எம்பிக்களை அதிகரித்து பேரம்பேசும் சக்தியை அதிகரிப்பதே சிறுபான்மைக் கட்சிகளுக்கு உள்ள ஒரே தெரிவு.

-சுஐப் எம்.காசிம்-

Related Post