நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காகவே பொது எதிரணியாக எதிர்க்கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்துள்ளதாக சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளரும், கோட்டை நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நாட்டில் பயங்கரவாதத்தினை வளர்க்கவோ, இனவாதத்தினை தூண்டவோ சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கவில்லை. அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தினை மாற்றியமைக்கவே நாம் கைகோர்த்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் பொது எதிரணி தனி நிபந்தனைகளுடன் உடன்படிக்கை செய்துள்ளதாக பொது பல சேனா குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றிடம் பேசும் போதே மாதுலுவாவே சோபித தேரர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதுள்ள அதிருப்தியும், அரசாங்கத்தின் பாதையினை மாற்றி அமைக்கவுமே நாம் ஆரம்பத்தில் இருந்து செயற்பட்டு வந்தோம். இப்போதும் நாங்கள் சகல எதிர்கட்சிகளையும் ஒன்றிணைத்திருப்பதும் நாட்டையும் மக்களையும் காப்பாற்றவே, தவிர நாட்டிற்கு எதிராண தீவிரவாதத்தினை ஏற்படுத்தவோ அல்லது இந்த நாட்டினை அழிவுப் பாதையில் கொண்டு செல்லவோ அல்ல.
பொது எதிரணியில் சகல கட்சிகளும் சகல இன மக்களை பிரதிபளிக்கும் தலைவர்களும் உள்ளனர். பௌத்த மதத்தலைவர்கள், சிங்கள அரசியல் கட்சிகள், தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகள் என பலரும் உள்ளனர். எனவே, இந்த எதிரணி இனவாதத்தினையோ, பிரிவினை வாதத்தினையோ தூண்டப் போவதில்லை.
அதேபோல் தான் சகல கட்சிகளையும் ஒரு அணியில் ஒன்றினைத்துள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழிக்க வேண்டும் என்பதற்காகவே தவிர சர்வாதிகார ஆட்சி நடத்துவதற்காக அல்ல. எனவே, புரிந்துணர்வுடனும் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள பொது நிகழ்ச்சி நிரழுக்கு அமையவே எமது சகல நடவடிக்கைகளும் அமையப் பெற்றுள்ளது
மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் நாங்கள் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளவில்லை. அவர்கள் இதுவரையில் பொது எதிரணியுடன் கைகோர்ப்பதாக தெரிவிக்கவும் இல்லை. எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருடனான சந்திப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட போது தனி நிபந்தனைகளையோ, கொள்கைகளையோ முன்வைக்கவில்லை.
அவர்கள் அனைவரும் பொது கொள்கையொன்றில் நாட்டை மீட்டெடுக்கும் முயற்சியினையே மேற்கொள்கின்றனர். எனவே இதில் எவரினதும் தனி நிபந்தனைகளுக்கு இடமில்லை என்பதை சகல கட்சிகளும் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளன” என்றுள்ளார்.