Breaking
Sat. Nov 2nd, 2024

இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் இரண்டாவது சிறுபான்மை இனமாக வாழ்கின்றோம் என்பதை சில சமயங்களில் முஸ்லீம்களாகிய நாம் மறந்து விடுகிறோம் என விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பாத்திமா ஸஹ்ரா அறபுக்கல்லூரியின் முப்பெரும் விழா நேற்று (23.02.2019) ஓட்டமாவடி தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற போது, அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாம் செய்கின்ற சில தவறுகள் தேசியத்திலும் சர்வதேசத்திலும் முஸ்லீம்களைப்பற்றி அவர்கள் பிழையாகப் பேசுகின்றார்கள். அதனால் தான் முஸ்லீம் பாடசாலைகள், அறபுக்கலாசாலைகள் போன்றவற்றில் மற்ற மதத்தவர்கள் வணக்கஸ்தலங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? அவர்களது புராதனச்சின்னங்கள் எவ்வாறு மதிக்கப்பட வேண்டுமென்பவற்றை மாணவர்களுக்கு அடிக்கடி நினைவூட்டுகின்ற நிருவாகங்களாக அதன் நிருவாகிகள் இருக்க வேண்டும்.

எமது நாட்டின் சகோதர மதத்தவர்களின் வணக்கஸ்தலங்களையும் அவர்களது நினைவுச் சின்னங்களையும் மதிக்கின்ற கௌரவப்படுத்துகின்றளவுக்கு எமது மாணவர்களை நாம் வழி நடத்த வேண்டியது காலத்தின் தேவையாகுமென்றும் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பாத்திமா ஸஹ்ரா அறபுக்கல்லூரியின் தலைவரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்வு இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றது. முதலாவது அமர்வுக்கு இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாகவும் இரண்டாவது அமர்வுக்கு இலங்கை ஜமாஅதே இஸ்லாமயின் தலைவர் எம்.எச்.எம்.உஸைர் கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், இலங்கை ஜமாஅதே இஸ்லாமயின் பெண்கள் பகுதிப் பொறுப்பாளர் டாக்டர் நஸீஹா அமீன், கல்குடா உலமா சபைத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.இஸ்மாயில் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

மூன்றாவது பட்டமளிப்பு விழா, மலர் வெளியீடு, கௌரவிப்பு நிகழ்வு என்று முப்பெரும் விழாவாக இடம்பெற்ற நிகழ்வில் குர்ஆனை மனனஞ்செய்த 43 ஹாபிழ்களும் மௌலவியாப் பட்டத்தைப்பெற்ற 153 பேருமாக 195 பேர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், அதிதிகளும் கல்லூரி நிருவாகத்தினரும் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

Related Post