Breaking
Sat. Nov 23rd, 2024

திருகோணமலை மாவட்டத்துக்கு மின் சக்தி, எரிசக்தி மற்றும் தொழில் துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச தலைமையிலான குழுவினர் விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த விஜயத்தை (27) புதன் கிழமை  மேற்கொண்டுள்ள அமைச்சர் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இலங்கை மின்சார சபை உயரதிகாரிகளுடனான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் உரையாற்றிய அமைச்சர் ரவி கருணாநாயக்க

கொழும்பு மாத்திரம் அபிவிருத்தி அடைய வேண்டும் என்பது எமது இலக்கல்ல திருகோணமலை போன்ற மாவட்டமும் அபிவிருத்தி அடைய வேண்டும்.

மின்சாரத்தை சேமித்து வைக்கக் கூடிய சிக்கனமாக பாவித்து கையாளக்கூடிய வகையில் பொது மக்கள் உட்பட நானும் செயற்பட வேண்டும்.
குறைந்தளவிலான மின்சாரக் கட்டணத்தை நடை முறைப்படுத்துவதற்கு மக்களது ஒத்துழைப்பும் எமக்குத் தேவை சம்பூரில் காணப்படும் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான நிலப்பரப்பில் பாரிய மின்சக்தி திட்டம் ஒன்றை எதிர்காலத்தில் ஆரம்பிக்கவுள்ளோம் என்றார்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்

கிண்ணியாவில் இயங்கும் இலங்கை மின்சார சபை பிரதேச காரியாலயம் எவ்வித வசதிகளுமின்றி பல குறைபாடுகளுடன் இயங்கி வருகிறது இது போன்று தம்பலகாமத்தில் உள்ள மின்சார சபை காரியாலயம் இயங்கி வந்த நிலையில் செயலற்று காணப்படுகிறது இத்தனை விடயங்களையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து திருகோணமலையில் உள்ள  கிழக்கு மாகாண இலங்கை மின்சார சபை பிரதிப் பொது முகாமையாளர் காரியாலயத்துக்கும் விஜயம் செய்த அமைச்சர் தலைமையிலான குழுவினர் அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

குறித்த விஜயத்தில் அமைச்சின் செயலாளர்  கலாநிதி பட்டகொட, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூபின் பிரத்தியேகச் செயலாளர் சதாத் கரீம்,பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், மின்சார சபையின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

Related Post