மியன்மார் நாட்டில் முஸ்லிம் சமூகம் நசுக்கப்பட்டு அழிக்கப்படுவது போல் இலங்கையிலும் நடைபெறாமலிருக்க அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஓட்டமாவடியிலுள்ள அரபுக் கல்லூரி ஒன்றுடன் அமைச்சர் இல்லத்தில் சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது அதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு பேசுகையில்,
இதில் விசேடமாக அரபுக் கல்லூரிகள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஏனென்றால் அதில் கல்வி கற்கும் ஒருவர் போதும் முஸ்லிம் சமூகத்தை தேவையற்ற சிக்கல்களில் தள்ளிவிடுவதற்கு.
இந்த நாட்டில் மிகவும் போராட்டத்திற்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் வாழ வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் அகில இலங்கை ஜம்இய்யது உலமா இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் தேவையற்ற சிக்கல்களில் மாட்டிக் கொள்ளாத வகையில் வாழ்வதற்கு நாடளாவிய ரீதியிலுள்ள அரபுக் கலாசாலைகளின் நிருவாகத்தினர்களை சந்திக்கவுள்ளனர்.
அண்மையில் மாவனெல்லையில் இடம்பெற்ற புத்தர் சிலை உடைப்பு சம்பவத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள் அதில் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த விடயத்தில் தாங்கள் செய்து கொண்ட விடயத்தை ஒப்புக் கொண்டும் உள்ளனர். இவ்வாறான விடயங்கள் முஸ்லிம் சமூகத்தை பாரிய சிக்கல்களுக்குள் தள்ளிவிடும்.
எனவே இவ்விடயத்தில் அரபுக் கல்லூரிகள் மற்றும் உலமாக்கள் கூடுதல் கவனமெடுத்து இந் நாட்டில் முஸ்லிம் சமூகம் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வதற்கு செயற்பட வேண்டும் என்றார்.