Breaking
Fri. Nov 15th, 2024

கல்விக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் இந்த அரசு மேற்கொண்டு வரும் செயல் திட்டத்தில் மேலுமொரு படியாக “ அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை “ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள கல்லூரிகளில் இன்றைய தினம்  200  பாடசாலை கட்டிடங்கள் திறந்து வைக்கப்படுவது பாராட்டத்தக்க விடயமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா சூடுவந்த புலவு ரிஷாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் இரண்டு மாடி ஆரம்ப கற்றல் வள நிலையத்தை இன்று (01) திறந்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அதிபர் ஹிபத்துல்லா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் ராதா கிருஷ்ணன், அமைச்சரின் இணைப்பாளர்களான முத்து முஹம்மது, அப்துல் பாரி, பொதுசன தொடர்பு அதிகாரி தாஹிர் மௌலவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் இங்கு உரையாற்றிய போது கூறியதாவது,

இன்றைய தினம் நாட்டின் பல பாகங்களிலும் இந்த திட்டத்தின் கீழ் இருநூறு பாடசாலைக்கட்டிடங்கள் திறந்து வைக்கப்படுகின்றன. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் அவர்களின் தொகுதியான குளியாபிட்டியவில் பிரதமர் ரணில் விக்ரம சிங்க இவ்வாறான கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கின்றார். இதன் மூலம் கல்விக்காக இந்த அரசு பாரிய பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றது. வளங்களை பெற்றுக்கொள்ளுவது மாத்திரமே நமது நோக்கமாகவும் ஏக்கமாகவும் இருக்க கூடாது. அந்த வளங்களை கொண்டு உங்கள் பிள்ளைகளின் எதிர் காலத்தை நல்ல முறையில் அமைப்பதற்கும் சீர் செய்வதற்கும் நீங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

வன்னி  மாவட்டத்திலே மாணவர்களின் கல்வித்தேவையை கருத்திற்கொண்டு கடந்த காலங்களில் பல கட்டிடங்களை அமைத்து கொடுத்துள்ளோம். அதே போன்று வீட்டுத்திட்டங்களின் மூலம் முடிந்தளவு வீடுகளை வழங்கி உள்ளோம். எனினும் இன்னும் வீடில்லாத  பிரச்சினை தொடர் கதையாகவே  உள்ளது. என்னிடம் இன்றைய தினம்  பல தாய்மார்கள் தமக்கு வீடு இல்லை என்று கோரிக்கை விடுத்தனர். அதே போன்று இந்த பாடசாலை அமைந்துள்ள ரஹுமத் நகர் ஒரு பழைய மாதிரிக்கிராமம் ஆகும். இங்குள்ள வீடுகள் பல உடைந்தும் தகர்ந்தும் கிடக்கின்றன. இந்த கிராமம் உட்பட ஏனைய கிராமங்களிலும் உள்ள வீடற்றோர் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி அதனை ஒரு மதிப்பீட்டு அறிக்கையாக பிரதேச செயலாளரின் மூலம் எனது அமைச்சுக்கு அனுப்பி வைத்தால் உரிய நடவடிக்கை எடுக்க முடியும். தேவையை சரியாக இனங்கண்டு தாருங்கள். தொடர்ந்தும் இந்த பிரச்சினையை வைத்துக்கொண்டிருக்காமல் சுமூகமான தீர்வொன்றை காண வேண்டும் நேர்மையான முறையிலும் நியாயமான முறையிலும் இந்த மதிப்பீட்டை செய்து தருமாறு உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Related Post