Breaking
Sun. Jan 12th, 2025

வில்பத்து வன எல்லைக்குள் எந்தவொரு முஸ்லிம் குடும்பமும் குடியமர்த்தப்படவில்லை. சில தீயசக்திகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது என,  முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா தெரிவித்தார். வில்பத்து வனப்பகுதியில் எந்தவித காடழிப்பும் இடம்பெறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சி அரசியல் பேதம் பார்க்காது அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனுக்கு கை கொடுத்து அவரைப் பாதுகாக்க  முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

    கொழும்பிலுள்ள சினமன் லேக் சிட்டி ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின்போதே பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.     பைஸர் முஸ்தபா எம்.பி. மேலும் இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது,

முஸ்லிம் குடியேற்றங்கள், வில்பத்து வன எல்லைக்கு வெளியிலேயே இடம்பெற்றிருப்பது, தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ரிஷாத் பதியுத்தீன் மீது வீண் பழி சுமத்தப்பட்டிருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமான பொய்யாகும். சில சக்திகள் வில்பத்து விவகாரத்தை தமது அரசியல் சுய நலன் கருதி  கையில் எடுத்து,  தென்னிலங்கை பெரும்பான்மைச் சிங்கள மக்களைத்  தூண்டி விடுகின்றனர். உண்மையிலேயே, வில்பத்து வன எல்லைக்குள் ஒரு முஸ்லிம் குடும்பமாவது குடியேற்றப்படவில்லை என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

   இந்த நிலையிலும் கூட,  இந்த இனவாதச் சக்திகள் சில சிங்கள ஊடகங்கள் மூலம் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன.

   அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனை,  நேர்மையான அரசியல்வாதியாக நான் காண்கின்றேன். அவர் தனது சமூகத்தின் விடியலுக்காகப் பாடுபடுகின்றார். அவர்களுக்காகக் குரல்கொடுத்தும்  வருகின்றார். இதனைத்  தவறெனக் கொள்ள முடியாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப்  ஹக்கீமிடம் நான் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகின்றேன்.

   வில்பத்து விவகாரத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனுக்குக்  கைகொடுத்து உதவ வேண்டும். அவரைப் பாதுகாக்க முன்வர வேண்டும். இந்த விடயத்தில் கட்சி அரசியல் பேதம் பார்க்க முற்பட வேண்டாம். ரிஷாத்தின் நல்ல பணிக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருமாறும் நான் அமைச்சர் ரவூப் ஹக்கீமைக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Related Post