Breaking
Fri. Jan 10th, 2025

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தை ஒரு போதும் தனியாருக்கோ வெளிநாடுகளுக்கோ விற்பனை செய்ய மாட்டோம் எனவும் தன்னைப்பற்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும்  போலிப் பிரசாரங்களில் இதுவும் ஒன்றெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கான “பங்கிலாப பகிர்வு”  இன்று (08) காலை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற போது, பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் இந்த விடயத்தை மீள உறுதிப்படுத்தினார்.

“நாங்கள் ஊழியர்களுக்கு போனஸ் தருவோமென உறுதியளித்திருந்தோம்  எனினும் நிறுவனத்திற்குள்ளே அரசியல் செய்பவர்களும் சொந்த லாபங்களுக்காக நிறுவனங்களை பயன்படுத்துவோரும் எமக்கெதிராக காழ்ப்புணர்வுடன் செயற்படுவோரும் எம்மீது பழி சுமத்தினர். ஊழியர்களை தவறாக வழி நடத்தி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர். அவசர புத்தியினால் அதிகாரிகளை அச்சுறுத்தினர். எனினும் போனஸ் விடயத்தில் நாங்கள் ஏற்கனவே உறுதியளித்தவாறு மிக  நேர்மையாக நடந்துகொண்டோம்.இந்த போனஸை பெற்றுக்கொடுப்பதில் பல பிரயத்தனங்களை மேற்கொண்டிருக்கின்றோம். நிதியமைச்சு  அதிகாரிகளின் எதிர்ப்புக்களையும் தாண்டி, விடாப்பிடியாக நின்று தற்றுணிவில் எம்மை பலி கொடுத்தே  இதனை வழங்குகின்றோம் “ என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

ஆர்ப்பாட்டதிற்கோ எதிர்ப்புகளுக்கோ நாம் பயந்து இந்த நிறுவனத்தை ஒரு போதும் வழிநடத்தபோவதில்லை. எமது பக்கம் நியாயம் இருப்பதால் நாம் எதையும் அலட்டிக்கொள்ளவும் மாட்டோம். என்னைப்பொறுத்த வரையில் எதிர்ப்புகள் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. அதனை ஒரு படிக்கல்லாக எடுத்து சவால்களுக்கு மத்தியிலே தடைகளை தாண்டி வெற்றி பெறுகின்றோம். உயர்ச்சிகளை அடைந்தும்  வருகின்றோம். எனக்கு எது சரி என்று மிக துல்லியமாக தெரிகின்றதோ அதனை மேற்கொள்வேன். எதிர்ப்புகளையும் மீறி முயற்சி செய்து வெற்றி பெறக்கூடிய  சக்தியை  இறைவன் தந்துள்ளான்.

ஆட்சியை பொறுப்பேற்ற போது எனது அமைச்சின் கீழ் 13 நிறுவனங்களை ஒப்படைத்தார்கள். அதில் 10 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கியவை . இந்த நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு காரணங்களை கண்டு இலாபகரமானதாக மாற்றினோம். அதே போன்று அண்மையில் எமக்கு வழங்கப்பட்ட திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் கீழ் 12 நிறுவனங்களை இப்போது  வழங்கி இருகின்றார்கள். இந்த நிறுவனங்களிலே சுமார் 1இலட்சத்து 26ஆயிரம் மாணவர்கள் பல்வேறு துறைகளிலே கல்வி கற்கின்றார்கள். இந்த நிறுவனங்களிலும் உரிய பயன் கிடைக்க திட்டமிட்டு செயற்படுவோம். அதற்கான முன் ஆயத்தங்களை எடுத்துள்ளோம்.

இறைவன் வழங்கிய  இயற்கை வளத்தை நிரம்ப கொண்ட புல்மோட்டையை நாங்கள் பல வழிகளிலும்  கட்டியெழுப்ப முயற்சிகளை மேற்கொண்ட போதும் இங்குள்ளவர்கள் ஒத்துழைப்பு வழங்காததால் அதனை முறையாக  முன்னெடுக்க முடியவில்லை. எம்மை சரியாக பயன்படுத்த இந்த பிரதேச மக்கள் தவறி விட்டனர் . சாதாரண ஒரு அரசியல் வாதியாக, போட்டி அரசியல் வாதியாகவே அவர்கள் என்னையும் எண்ணியதே இதற்கு காரணம்.

எனினும் நாம் நிறுவனத்தை பொறுப்பெடுத்த போது இந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் சிலர் விடுத்த வேண்டுகோளை ஏற்று பிரதேசத்திலுள்ள கணிசமானவர்களை நிறுவனத்தில் உள்வாங்கி இருகின்றோம். அதே போன்று நீண்டகாலமாக பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கியுமுள்ளோம்.

நிறுவனம் தொடர்பில் நாங்கள் வெளிப்படைத்தன்மையை பின்பற்றி வருகின்றோம். மூன்று மொழிகளிலும் முறையான கேள்வி பத்திரம் கோரியே கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றோம். புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான நிலத்தில் களவாக மண்  கொள்ளையில் ஈடுபடும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்காகவே இந்த பகுதியை சூழ தற்காலிக காப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் சிலர் ஊடகங்கள் வாயிலாக எமது தடுப்பு நடவடிக்கையை பூதாகரப்படுத்தி நிறுவனத்தின் பெயரை  கொச்சைப்படுத்தினர். அதே போன்று எனக்கு எதிராகவும் செயற்பட்டனர். என்னை எவ்வாறாவது தொலைத்து விடவேண்டுமென கங்கணங்கட்டிச்  செயற்படும்  போலி இணையத்தளங்கள், முகநூல்கள் மற்றும் சில ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்தேர்ச்சியாக அபாண்டங்களை பரப்பி வருகின்றனர்.

இந்த நிறுவனம் தொடர்பில் எந்த சந்தேகம் ஏற்பட்டாலும் உயர் அதிகாரிகளிடம்  கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள் , அது சாத்தியப்படாத பட்சத்தில் எனக்கு அறிய தாருங்கள் , இதை விடுத்து உங்கள் சுய நலன்களை நிறுவனத்திற்குள் பிரயோகிக்க வேண்டாம். உங்கள் அரசியல் நடவடிக்கைளை வெளியிலே வைத்துக்கொள்ளுங்கள் , கடமை நேரங்களில் கடமைகளை செய்யாது உங்கள் சொந்த வேலைக்காக கண்டபடி வெளியில் செல்வதை நிறுத்துங்கள் . இதனை உங்கள் சொந்த நிறுவனம் போல் நினைத்து தொழில் புரிந்தால் நாடும், பிரதேச மக்களும் நீங்களும் பயன்பெற முடியும்  இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் இந்திகா ரணதுங்க,  நிறைவேற்று பணிப்பாளர்  அப்துல் ரசாக் உட்பட பலர் பேசினர். இராஜாங்க அமைச்சர் அப்துல்லா மஹ்ரூபின் பிரதிநிதியாக அவரது பிரத்தியேக செயலாளர் ஹில்மி பங்கேற்றிருந்தார்.

Related Post