Breaking
Sun. Nov 24th, 2024

குருநாகல் பஸாரில் அமைந்துள்ள ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளிக்கு சொந்தமான மையவாடிக்காணியை குருநாகல் மாநகர சபை சுவீகரிக்க மேற்கொண்டுவரும் முயற்சிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

மாநகர சபையின் ஆளும் கட்சியான பொது ஜன பெரமுனவும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்தே இந்த தீர்மானத்தை மாநகர சபையில் கொண்டுவந்த போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர் மொயினுதீன் அசார்டீன் கடுமையாக எதிர்த்ததுடன் இந்த முயற்சியை கைவிடுமாறும் வலியுறுத்திப் பேசினார்.

குருநாகல் முத்தெட்டுகலவில் அமைந்துள்ள ஒன்பது ஏக்கர் விஸ்தீரணமுள்ள இந்த மையவாடியையும் அதற்கு அருகாமையில் உள்ள மலே ஜும்ஆ பள்ளிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விஸ்தீரணமுள்ள மையவாடியையும் குருநாகல் நகர அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் சுவீகரிக்கும் வகையிலேயே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது.

பள்ளிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டு உரித்தாக்கப்பட்ட இந்த காணியை மாநகர சபைக்கு சொந்தமாக்க முயல்வது எந்த வகையில் நியாயமானது என்று கேள்வி எழுப்பிய மாநகரசபை உறுப்பினர் அசாருதீன், இதனைக் கைவிடாத பட்சத்தில் ஆளும் கட்சிக்கான தமது ஆதரவை விலக்கப் போவதாக தெரிவித்தார்

இதனை அடுத்து குருநாகல் மேயர் துசார சஞ்சீவ, இது தொடர்பில் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவந்த பிறகு மேற்கொண்டு முடிவை அறியத்தருவதாக உறுதியளித்தார்.

-ஊடகப்பிரிவு-

Related Post