Breaking
Sat. Jan 11th, 2025

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஓரிரு வாரங்களுக்குள் இலங்கை அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள், கட்சித் தாவல்கள், விமர்சனங்கள் மற்றும் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான சூழ்ச்சிகள் போன்றவை நாளாந்தம் இடம்பெற்று வருகின்றன.

அண்மையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் சென்றவர்களை எச்சரிக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறிய ‘அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்றவர்கள் பற்றிய கோப்புகள் தன்னிடமிருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக தான் அவற்றைப் பயன்படுத்தப் போவதில்லை’ எனும் கூற்றானது இந்நாட்டு மக்கள் மத்தியில் பல்வேறு அதிர்வலைகளையும் கேள்விகளையும் எழச்செய்துள்ளது.

இவ்வாறு கோப்புகளைக் காட்டி எச்சரிக்கை செய்வதற்கு அக்கோப்புகளுக்குள் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? கடந்த காலங்களில் அரசாங்கத்தில் இருந்த, இருக்கின்ற அமைச்சர்களினதும் பாராளுமன்ற மற்றும் அதிகாரிகளினதும் நிதி மோசடிகள், அதிகார துஸ்பிரயோகங்கள், தனிப்பட்ட விடயங்கள் மற்றும் ஊழல்கள் போன்றவற்றை இக்கோப்புகள் கொண்டிருப்பதாகவே நம்பப்படுகிறது.

அதிலொரு அங்கமாக சில தினங்களுக்கு முன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு எதிராக மூன்று கோப்புக்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது.

நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி நாட்டை சீரிய பாதையில் இட்டுச் செல்ல வேண்டிய அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளும் விடுகின்ற தவறுகளை மூடி மறைத்து, அவர்கள் அரசாங்கத்திற்கெதிராக அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்கின்ற போது, அவர்களை தன் பக்கம் தக்கவைப்பதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய கோப்புகளும் குற்றச்சாட்டுகளும் அரசாங்கத்தில் பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழக்கச் செய்யும் நடவடிக்கைகளாகும்.

அதுமட்டுமல்லாது நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் சுரண்டி அதிபாதாளத்திற்கு இட்டுச் செல்லும் காரியங்களில் ஈடுபடுகின்ற அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் போன்றவர்களின் தவறுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, சட்டத்திற்கு முன்னிறுத்தி, தண்டனை வழங்கும் பொறுப்பும் கடப்பாடும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கு உண்டு என்பது மறந்துவிடலாகாது. (z)

Related Post