Breaking
Fri. Dec 27th, 2024

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறு, படையினருக்கு ஆலோசனை வழங்கும்படி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று   (03) ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் ரிஷாத்பதியுதீன். நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளில் படைத்தரப்பினர் சிலர் நடந்து கொள்ளும் முறைகளால் முஸ்லிம்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள். அசௌகரியங்கள் குறித்தும் எடுத்துத்துரைத்தார்.

பள்ளிவாசல்களுக்குள்  சப்பாத்துக் கால்களால் அங்குள்ள புனித குர்ஆன் பிரதிகள்,  அரபு கித்தாபுகளை உதைத்து வீசுவது, பள்ளிவாசல்களில் கடமைபுரியும் இமாம்கள், கத்தீப்மார்களுடன் தரக்குறைவாகப் பேசி சந்தேகத் தோரணையில் நடந்து கொள்ளும் செயற்பாடுகளால் முஸ்லிம்கள் மன வேதனைக்குள்ளாவதாகவும் விளக்கியுள்ளார். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழு முஸ்லிம் சமூகமும் சம்பூரணமாக ஒத்துழைக்கையில் சகலரையும் குற்ற உணர்வுடன் நோக்கும் ஒரு சில படையினரின் போக்குகள் ஒரு சமூகத்தையே ஓரங்கட்டும் முயற்சிகளாகவே உள்ளன. வீடுகளில் சமையலறைகளிலுள்ள சிறு,சிறு கத்திகள்  இரும்புகள், பாத்திரங்களைக் கூட சில இனவாத ஊடகங்கள் ஆயுதங்களாகச் சித்தரித்துக் காட்டுவதாலும். பேசுவதாலும் மாற்று சமூகங்கள் மத்தியில் முஸ்லிம்களை வன்முறையாளர்களாகக் காண்பிக்க முயற்சிக்கப்படுகிறது. இது சில வேளைகளில் சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வுகளை பாழ்படுத்திவிடும். இன உறவுகளிடையே இடைவெளியை ஏற்படுத்த முனையும் இவ்வூடகங்கள் சிங்கள,முஸ்லிம் முறுகல்களுக்குத் தூபமிடுவதாக உள்ளமை தமக்குப் பெரும் கவலையளிப்பதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்றைய சந்திப்பில் ஜனாதிபதிக்கு விளக்கினார்.

குற்றவாளிகளைப் பூண்டோடு அழிக்க முஸ்லிம்கள் வழங்கும் பூரண ஆதரவைப் படையினர் புரிந்து கொண்டு செயற்படுவதனூடாகவே அடிப்படைவாதத்தை  தனிமைப்படுத்தி அவர்களை  ஒழிக்க முடியும்.

எனவே தாடி, தொப்பி, ஜுப்பா போன்ற இஸ்லாமியக் கலாசார அடையாளத்துடன் தோன்றும் சகல முஸ்லிம்களையும் சந்தேகக் கண்ணுடன் நோக்குவதைத் தவிர்ந்து நடந்து கொள்ளுமாறு படையினருக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாத். தனது சமூகத்தின் சார்பாக ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Related Post