Breaking
Thu. Dec 26th, 2024

கணவர் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்று மனைவி தெரிந்திருக்க வேண்டும். மனைவி எங்கிருக்கின்றாள் என்ற செய்தி கணவனுக்கு தெரிய வேண்டும். தங்களுடைய பிள்ளை என்ன செய்கின்றது என்று தாய் தந்தையருக்கு தெரிய வேண்டும். இல்லையென்றால் ஒரு முட்டாளுடைய செயலுக்காக நீங்களும் வெடிக்க வைக்கின்ற ஒரு பொருளாக எதிர்காலத்தில் மாற்றப்படலாம் என விவாசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தையல் பயிற்சி முடித்த 144 யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மண்டபத்தில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்

இந்தவிடயத்தில் அனைவரும் தெளிவில்லாமல் இருந்தால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எவ்வளவு கேவலாமாக பேசப்படுகின்றது என்பது உங்களுக்கு தெரியாது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரதேசம் நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் பிரதேசம் என்பதால் அதன் பின்புலங்கள் உங்களுக்கு விளங்குவதில்லை.

கிழக்கு மாகாணத்திற்கு அப்பால் சிங்கள மற்றும் தமிழ் பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள் வெடகித்து தலைகுனிந்து நிற்கின்றார்கள். வெளியில் தலையை காட்ட முடியாமல் உள்ளனர். அவசரத்திற்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத துர்பாக்கிய நிலையில் உள்ளார்கள். அன்றாட வேலைத் தி;டங்களை செய்வதற்கு அச்சப்படுகின்றார்கள்.

கர்த்தினால் மல்கம் ரஞ்சித் பேராயருக்கு எதிர்வரும் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்ற வேலைத் திட்டத்தினை முன்னெடுக்கின்றேன் நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்ற வேலைத் திட்டத்தினை உயிரிழந்தவர்களின் பெயருக்காக அல்ல, காயமடைந்தவர்களின் உடலுக்காக அல்ல. அநியாயம் செய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாதம் என்கின்ற விடயம் எந்தவொரு நாட்டிலும் இதற்கு பிறகு முஸ்லிம் சமூகத்தின் பெயரால் இடம்பெறக் கூடாது. அதாவது தற்கொலை என்கின்ற விடயம் எந்தவொரு நாட்டிலும் இருக்கக் கூடாது.

இருநூற்றி ஐம்பதுக்கு மேல் உயிர்களை காவுகொண்டதுடன், ஐநூறுக்கு மேல் காயப்படுத்தி தினம் தினம் உயிரிழப்பு இடம்பெறுகின்ற நிலைமைக்கு இந்த குண்டுத் தாக்குதல் வெறியாட்டம் உள்ளது. அதுவும் முஸ்லிம் சமூகத்தின் பெயரை சுமந்து செய்யப்பட்டு இருப்பது இந்த நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தலைகுனிய வைத்துள்ளது என்பதிலே யாரும் இரண்டாம் கருத்து பேச முடியாது.

என்னைப் பொறுத்தவரையில் பாராளுமன்றத்திலும், வெளியிலும் முஸ்லிம் பயங்கரவாதம் இருக்கின்றது இவர்கள் குண்டு தற்கொலைகாரர்களாக வருவார்கள் என்றெல்லாம் பேசிய போதெல்லாம் அதனை நான் எந்தவொரு கணப்பொழுதிலும் ஏற்கவில்லை ஏன் என்றால் ஒரு உண்மையான முஸ்லிம் தற்கொலை செய்து கொள்ள மாட்டான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் பேசினோம்.

இஸ்லாத்தினை சரியாக புரிந்து கொண்டு ஈமானியத்தோடு வாழ்க்கை நடாத்த வேண்டும் என்று என்னுகின்ற எந்தவொரு முஸ்லிமும் தற்கொலை என்கின்ற விடயத்திற்கு போக முடியாது. ஏனெனில் தற்கொலையில் அவன் சுவர்க்கம் அடைய முடியாது.

தற்கொலையில் தான்; சுவர்க்கம் அடைய முடியும் என்று இருந்திருந்தால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பிறக்கின்ற பொழுது தற்கொலைக்கு தாய் அல்லது தந்தைமார் செய்து விட்டு எங்களது பிள்ளையை சுவர்க்கத்திற்கு அனுப்புகின்ற தீர்மானத்திற்கு வந்திருக்க முடியும்.

ஐ.எஸ்.ஐ.எஸ். என்கின்ற பயங்கரவாதத்தின் பெயரால் வெளிநாட்டில் இருக்கின்ற ஏகாதிபத்திய வாதிகள் செய்து கொண்ட ஒரு அமைப்பை குர்ஆனை சுமந்து அல்லாஹ்வை, நபியை நம்பிய நாங்கள் அவர்களின் பெயரால் அநியாயம் செய்யப்பட்டு இருக்கின்றது என்று சொன்னால் அதனை எந்த சமூகமும் மன்னிக்க முடியாது.

நியூசிலாந்து பள்ளிவாயலில் துப்பாக்கியால் சுட்ட போது நாங்கள் திகைத்துப் போய் நின்றவர்கள். மற்றைய மதத்தினை சார்ந்தவர்கள் பின்புலத்தில் நின்று அதனை எவ்வாறு அழகாக சீர்செய்து கொடுத்தார்கள் என்ற படிப்பினை எங்களுக்கு இருக்கின்றது.

மூன்று குடும்பத்தினர் செய்த கொலை. அவர்கள் இவ்வாறு யோசித்திருப்பார்களாக என்று எனக்கு தெரியாது. இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பள்ளிவாயல்;கள் மற்றும் வீடுகளில் பொலிஸ், இராணுவம் தேடுவார்கள், எங்களுடைய குர்ஆனை தூக்குவார்கள், கிதாப்புகளை, பள்ளிவாயல்களை அசீங்கப்படுத்துவார்கள், எமது சகோதரிகளை சங்கடப்படுத்தவார்கள் என்று ஏழு தற்கொலைதாரிகளும் தெரிந்திருப்பார்களாக இருந்தால், இன்று இருந்திருப்பர்களாக இருந்தால் இந்த விடயம் அவர்களுக்கு நன்றாக புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

எமது பிரதேசத்தில் மதத்தின் பெயரால் பணம் உழைக்கின்றவர்கள் விடயத்தில் நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டும்;. இந்த நாட்டில் இந்த பயங்கரவாதம் முற்றுமுழுதாக தொலைந்து எறியப்பட வேண்டும் என்று எல்லா அரசியல் தலைவர்களும், எல்லா மதப்பெரியார்களும், முஸ்லிம் மக்களும் விரும்புகின்றார்கள்.

இதனை நூற்றுக்கு நூறு வீதம் இதுவொரு அறுவருப்பான ஈனச் செயலாக பிரகடனப்படுத்த வேண்டும். இவ்வாறு எதிர்காலத்தில் செய்கின்றவர்களை இந்த நாட்டிலே அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால் இந்தவிடயத்தில் புலனாய்வு, இராணுவம், பொலிஸ் ஆகியோருக்கு காட்டிக் கொடுக்கின்ற செயல்திட்டத்தினை நீங்கள் செய்யவில்லை என்று சொன்னால் உங்கள் பிள்ளைகள் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியாமல் போகும் என்பதை அன்பாக எச்சரிக்கையாக சொல்கின்றேன் என்றார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடா இளைஞர் அமைப்பாளர் எம்.எப்.ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோறளைப் மத்தி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், பிரதேச சபை உறுப்பினர் திருமதி.எஸ்.நபீரா, ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வட்டார குழு தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

144 யுவதிகளின் தையல் பயிற்சி நெறிக்காக 5.4 மில்லியன் ரூபாய் நிதி விவாசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரால் ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Post