ஏ.எச்.எம்.பூமுதீன்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் எவருக்கு ஆதரவளிக்க அமைச்சர் ரிசாத் பதயுதீன் முடிவு செய்கிறாரோ அந்த முடிவுக்கு நாம் தலைவணங்குவோம் என வவுனியா தமிழ் மக்கள் இன்று அறிவித்துள்ளனர்.
வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று (29) காலை இடம்பெற்ற தேர்தல் தொடர்பில் மக்களின் கருத்தை அறியும் கலந்துரையாடலின் போதே இந்த அறிவிப்பை தமி;ழ் மக்கள் விடுத்தனர்.
வவுனியா மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும் பல்வேறு துறைசார்ந்தோர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.
இதன்போது அவர்கள் அனைவரும் கலந்துரையாடலின் முடிவில் எழுந்து நின்று கைகளை உயர்த்தி அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் மேற்படி அறிவிப்பை விடுத்தனர்.
கலந்துரையாடலின் முடிவில் உரையாற்றிய அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து நானும் எனது கட்சியும் எடுக்கும் முடிவு வன்னி மாவட்டத்தில் வாழும் ஒவ்வொருவரினதும் சுபீட்சமான எதிர்காலத்திற்கான தீர்மானமாகவே அமையும் என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று தேசிய ரீதியாக மக்களின் பெரும் செல்வாக்கை பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் வேளையில் தேசிய ரீதியாக உள்ள கட்சிப் போராளிகளின் கருத்தறியும் முதல் கூட்டமே இதுவாகும்.
நாடு பூராகவுமுள்ள மூவின மக்களில் தனிப்பட்ட ரீதியாக ஒவ்வொருவரினதும் நிம்மதியான வாழ்வு ,கௌரவான இருப்பு, சுபீட்சமான பொருளாதார முன்னேற்றம் என்பனவற்றை முன்நிறுத்தியே நானும் எமது கட்சியும் தேர்தல் தொடர்பில் முடிவினை எடுப்போம்.
நான் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவும் நாடு பூராகவும் உள்ள எமது கட்சிப் போராளிகளுக்கும் கட்சியி;ன் அபிமானிகளுக்கும் நன்மை பயப்பதாகவே அமையும் என்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குறிப்பிட்டார்.
அமைச்சருக்கு முன்பாக உரையாற்றிய வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பிரமுகர்களும் யுவதிகளும் கடந்த காலங்களில் அமைச்சர் இம்மாவட்டத்திற்கு செய்த தனிப்பட்ட உதவிகள் அபிவிருத்திப்பணிகள் மற்றும் வேலை வாய்ப்புக்கள் என்பனவற்றிற்கு நன்றி கூறும் சந்தர்ப்பமாக அமைச்சர் எடுக்கும் தீர்மானத்தை பயன்படுத்துவோம் என்றும் தெரிவித்தனர்.