பிரான்ஸ் நாட்டில் விவசாயப் பண்ணைகளில் வளர்ந்து வரும் செம்மறியாடுகளை ஓநாய்கள் தாக்கி வருகின்றன. அவற்றை காப்பதற்கு பிரான்ஸ் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து நேற்று பாரீஸ் நகரில் ஈபிள் கோபுரத்தின் முன் விவசாயிகள் ஆடுகளுடன் போராட்டம் நடத்தினார்கள்.பிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியான அவுவர்ஜின் மாநிலத்தில் ஏராளமான விவசாய பண்ணைகள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் விவசாயத்துடன் ஏராளமான செம்மறியாடுகளையும் வளர்த்து வருகின்றனர்.இங்கு வளரும் செம்மறியாடுகளை, அப்பகுதி காடுகளில் பெரும் எண்ணிக்கையில் உலவி வரும் ஓநாய்கள் கொன்று வருகின்றன. இந்த ஓநாய்கள் கடந்த 1930-ம் ஆண்டு வேட்டையாடி அழிக்கப்பட்டன.
எனினும், கடநத 1990-ம் ஆண்டு முதல் இத்தாலி நாட்டு எல்லை வழியாக 300-க்கும் மேற்பட்ட ஓநாய்கள் நுழைந்துவிட்டன. தற்போது அதன் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.அந்த ஓநாய்கள் இன்றுவரை விவசாயப் பண்ணைகளில் இருக்கும் 4,800-க்கும் மேற்பட்ட செம்மறியாடுகளை கொன்றுவிட்டன. இந்த ஓநாய்களை அழிப்பதற்கு பிரான்ஸ் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதற்கு மேலும் பிரான்ஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இன்றைய விவசாயிகள் நாளை வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் என்று பிரான்ஸ் ஆட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் கிளாட் பான்ட் கூறினார்.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியை சேர்ந்த பண்ணை விவசாயிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறியாடுகளுடன் நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஈபிள் கோபுரத்தின் முன் போராட்டம் நடத்தினார்கள்.விவசாயிகளை அச்சுறுத்தும் ஓநாய்களை அழிப்பதற்கு பிரான்ஸ் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.விவசாயத்துக்கும் செம்மறியாடுகளின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் ஓநாய்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த விரைவில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் செகோலின் ராயல் உறுதி கூறினார்.