Breaking
Sat. Jan 11th, 2025
900 பேரை கொன்ற வழக்கில் இருந்து எகிப்தின் முன்னால் அதிபர் ஹோஸ்னி முபாரக் இன்று விடுவிக்கப்பட்டார்.
அராபிய வசந்தம் என்ற பெயரில் வளைகுடா நாடுகளில் நிகழ்ந்த மக்கள் புரட்சி, அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எகிப்தில் அந்நாட்டின் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தெழுந்தபோது ராணுவம் கையாண்ட அடக்குமுறை நடவடிக்கையில் போராட்டக்காரர்களில் சுமார் 900 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த படுகொலை தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் முபாரக்கிற்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கெய்ரோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த முபாரக்கிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கோமா நிலைக்கு சென்றுவிட்ட அவர், இறந்துவிட்டதாக கூட வதந்திகள் பரவின. தற்போது 86 வயதாகும் முபாரக்கிற்கு கெய்ரோ ராணுவ ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு முறையாக விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கின் மீது மறுவிசாரணை நடத்த வேண்டும் என முபாரக் சார்பில் அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது.
முபாரக்கிற்கு பிறகு எகிப்தின் அதிபராக பதவியேற்ற முஹம்மது மோர்சி இந்த கோரிக்கையை ஏற்று மறுவிசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, முபாரக், அவரது உள்துறை மந்திரி ஹபீப் அல்-அட்லி மற்றும் 6 ராணுவ உயரதிகாரிகள் மீது கெய்ரோ கோர்ட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மறுவிசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
சுமார் 900 போராட்டக்காரர்களை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கில் இருந்து ஹோஸ்னி முபாரக், அவரது மந்திரிசபையில் உள்துறை மந்திரியாக இருந்த ஹபிப் அல்-அட்லி மற்றும் 6 ராணுவ உயரதிகாரிகள்
ஆகியோரை விடுதலை செய்வதாக நீதிபதி மஹ்முட் கமெல் அல் ரஷிடி உத்தரவிட்டார்.
மேலும், இஸ்ரேலுக்கு எரிவாயு ஏற்றுமதி செய்ததில் ஊழல் நடந்ததாக குற்றம் சுமத்தி தொடரப்பட்ட மற்றொரு ஊழல் வழக்கில் இருந்தும் முபாரக்கை விடுவிப்பதாக நீதிபதி இன்று அறிவித்தார்.
அரசுப் பணத்தை தனிப்பட்ட முறையில் ஆடம்பரமாக செலவு செய்த மற்றொரு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முபாரக்கை இன்றைய தீர்ப்பின்போது சக்கரப்படுக்கையில் கிடத்தி, நீதி மன்றத்துக்கு சிறை ஊழியர்கள் அழைத்து வந்தனர்.

Related Post