Breaking
Fri. Dec 27th, 2024

எங்களுக்கு கிழக்கிஸ்தான் தர வேண்டும் என்று நாங்கள் கோர தயாரில்லை என்பதை சிங்கள அரசியல் தலைவர்களிடத்தில் சொல்லிக் கொள்கின்றேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் இருந்து சமுர்த்தி முத்திரை பெறுவதற்கு தெரிவானவர்களுக்கான உரித்துப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு மீராவோடை அமீர் அலி மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

நாங்கள் சண்டை பிடிக்க வேண்டும், போராட்டம் செய்ய வேண்டும், எங்களுக்கு கிழக்கிஸ்தான் தர வேண்டும் என்று நாங்கள் கோர தயார் இல்லை. இந்த நாட்டிலுள்ள சிங்கள அரசியல் தலைவர்களுக்கு இதனை தெளிவாக சொல்லுகின்றோம்.

இந்த நாட்டிலுள்ள பேரினவாத சக்திகளுக்கும், இந்த நாட்டிலுள்ள காவியுடை தரித்த வெறியர்களுக்கு சொல்லுகின்ற செய்தி நாங்கள் இந்த நாட்டை விட்டு எங்கும் போகமாட்டோம். அதற்காக கிழக்கிஸ்தானை தாருங்கள் என்று போராட்டத்தை ஆரம்பிப்பதற்கும் நாங்கள் தயாரில்லை.

ஏனெனில் இந்த நாடு எல்லோருக்கும் பொதுவான நாடு என்கின்ற அடிப்படையில் நாங்கள் மரணிக்கும் வரையும், எங்களது பரம்பரைகள் இந்த நாட்டில் வாழும் வரை முஸ்லிம் சமூகம் நிம்மதியாக வாழ வேண்டும். உங்களோடு ஒற்றுமைப்பட்டு செயலாற்றுவதற்கு தயாராக இருக்கின்றோம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ அல்லது அவர்கள் விரும்புகின்ற வேறு ஒரு அரசியல் தலைவரை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும், தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒற்றுமைப்பட்டு இருந்தால் அந்த வாக்கை எடுக்க முடியாது என்ற காரணத்திற்காக இந்த திட்டமிட்ட சதியை முஸ்லிம்களுக்கு செய்திருக்கின்றார்கள், அதோடு மாபெரும் அநியாயம், துரோகத்தை செய்திருக்கின்றார்கள்.

வாக்குகளை பெறுவதற்கு, கதிரையில் ஆட்சி பீடம் ஏற வேண்டும் என்பதற்காக எங்கையோ கிடைத்த சஹ்ரானை வைத்து, மூன்று குடும்பத்தோடு சம்பந்தப்பட்ட விடயத்தை வைத்து ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கேவலப்படுத்தியவர்கள் எதிர் தரப்பிலே இன்னும் ஓரிரு மாதத்திலே நாங்கள் ஜனாதிபதியாக போகின்றோம். எங்களுக்கும் அதிகாரங்களை தாருங்கள் என்று கேட்பார்கள். நமது பிரதேசத்திலும் ஓரிரு கூஜாக்கள் வரத்தான் போகின்றது.

இவர்கள் வந்து கொண்டு இவர்கள் இப்படிப்பட்டவர்கள் அல்ல. பணத்திற்காக காட்டிக்கொடுப்புக்காக அவர்கள் இருப்பார்கள். இறுதிநாள் வரையும் முஸ்லிம் சமூகத்திற்குள் இருந்து கொண்டு தான் இருக்கும். இதிலும் நீங்கள் தெளிவாக இருந்து கொள்ள வேண்டும்.

மாற்றம், தலைமை நீங்கள் தருவது, ஆட்சி அதிகாரம் இறைவன் தருவது அதிகாரம் கிடைத்தால் அதனை எந்த இடத்தில் எப்படி செய்து காட்ட வேண்டுமோ, அதனை செய்து காட்டும் தலைவர்களாக நாங்கள் இருப்போம். எனவே எதிர்காலத்தில் இந்த நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இதற்காக இந்த நாட்டை விட்டு ஓடி விட முடியாது.

இது நாங்கள் பிறந்த மண், வாழ வேண்டும், மரணிக்கும் வரை இந்த நாட்டுக்கு விசுவாசமானவர்கள் என்பதை எதிர்காலத்தில் இன்னும் அதிகம் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு எங்களிடத்தில் இருக்கின்றது. அரசியல் தலைவர்கள், பாமர மக்கள், எமது இஸ்லாத்திற்குள் மதத்தின் பிரிவினவாதத்தினை பற்றி பேசிக் கொண்டிருக்கின்ற, ஒவ்வொரு மத வழிகாட்டல் செய்கின்றவர்களுக்கும் இந்த பொறுப்பு இருக்கின்றது.

இதனை எதிர்காலங்களில் நீங்களும், நாங்களும் திறம்பட செய்ய வேண்டும். இல்லையேல் முஸ்லிம் சமூகம் திக்கிமுக்காடி போகின்ற சமூகமாக, இரவில் ஒழிந்து திரிகின்ற சமூகமாக, பகலில் மாத்திரம் வீடுகளில் இருக்கின்ற சமூகமாக, இரவில் வீட்டில் தூங்க முடியாத சமூகமாக மாற்றப்பட்டு விடுவோம் என்ற அச்சம் என்னிடத்தில் உள்ளது என்றார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அமிஸ்டீன், பிரதேச சபை உறுப்பினர்கள், உதவி திட்ட பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஏ.எல்.அப்துல் மஜீட், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் இருந்து சமுர்த்தி முத்திரை பெறுவதற்கு தெரிவான 1190 பேருக்கு உரித்துப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Related Post