Breaking
Sat. Jan 11th, 2025
(நேர்காணல்:- ஆர்.ராம்)
ஐ.நாவை நாடுவது என்பது ஜனநாயக விரோதமான செயற்பாடொன்றல்ல. குண்டுத்தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் திட்டமிட்ட தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இன்னமும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை. தண்டிக்கப்படவுமில்லை. இவ்வாறான மோசமான நிலைமை தொடருமாக இருந்தால் நிச்சயமாக ஐ.நாவினை நாடவேண்டிய நிலைமையே ஏற்படும்
என கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழுமையான வடிவம் வருமாறு,
கேள்வி:- உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து உங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியமளித்துள்ள நிலையில் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாக கருதுகின்றீர்களா?
பதில்:- என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்பது ஒப்புவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலும், பாதுகாப்பு தரப்புக்களின் ஊடாகவும் அவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்குப் பின்னரும் என் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுமாயின் முஸ்லிம் சமூகத்தின் மீதும், என்மீதும் உள்ள காழ்ப்புணர்ச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளில் ஒன்றாகவே கருத முடியும்.
கேள்வி:- ஐக்கிய நாடுகள் சபையை நாடுவோம் என்று கூறியமைக்கான காரணம் என்ன?
பதில்:- உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் சமூகம் இலக்குவைக்கப்பட்டது. ஆரம்பத்தில் அச்சமூகத்தின் மக்கள் பிரதிநிதிகள் மீது குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டன. சம்பவம் நடைபெற்று 21நாட்களுக்கு பின்னர் முஸ்லிம்களின் சொத்துக்கள், வியாபார நிலையங்கள், பள்ளிவாயல்கள் என அனைத்தும் திட்டமிட்டு தாக்கப்பட்டன. அதுமட்டுமன்றி பௌத்த தேரர்கள் நினைத்தபடியான செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.
தேரர் ஒருவர் உண்ணாவிரதம் இருந்தமையும் மற்றைய தேரரொருவர் காலக்கெடு விதித்ததையும் சொற்ப காலப்பகுதியில் இந்த நாடு மீண்டும் பற்றி எரிந்துவிடும் என்ற நிலைமைகளே காணப்பட்டிருந்தன. இந்த சூழல் மாற வேண்டும் என்றுதான் முயற்சிகளை எடுக்கின்றோம். அதற்காகவே முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் கூட்டாக பதவிகளிலிருந்து இராஜினாமா செய்திருந்தோம். இனவாதம் தலைவிரித்தாட வேண்டும் என்ற தேரர்களின் ஆசை நிராசையாக்கப்பட்டு இந்நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக வாழும் அதேநேரம், நாட்டின் கீர்த்திக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலும் கவனத்தினை கொள்கின்றோம்.
எனினும், முஸ்லிம் இனத்திற்கு எதிராக மிகமோசமான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பதனால் தொடர்ந்தும் பொறுமைகாக்க முடியாத காரணத்தினால் எதிர்காலத்தில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம். அதனைத்தவிர எமக்கு வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை. எமது ஜனநாயக போராட்டத்தின் ஒரு அங்கமாகவே ஐ.நாவை நாடுவதையும் கொண்டுள்ளோம்.
கேள்வி:- ஐ.நாவை நாடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா?
பதில்:- ஐ.நாவை நாடுவது என்பது ஜனநாயக விரோதமான செயற்பாடொன்றல்ல. ஐ.நாவின் உறுப்பு நாடாக இலங்கையும் உள்ளது. அவ்வாறிருக்க, குண்டுத்தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் மினுவாங்கொடை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற திட்டமிட்ட தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இன்னமும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை. தண்டிக்கப்படவுமில்லை. இவ்வாறான மோசமான நிலைமை தொடருமாக இருந்தால் நிச்சயமாக ஐ.நாவினை நாடவேண்டிய நிலைமையே ஏற்படும்.
கேள்வி:- முஸ்லிம் அரசியல் தரப்புக்கள், சமூகத்திற்கு எதிராக குறிப்பிட்ட பௌத்த தேரர்கள் செயற்படுவதாக கூறும் நீங்கள் அதற்கான பொறுப்புக்கூறலை செய்ய வேண்டியது யார் எனக் கருதுகின்றீர்கள்?
பதில்:- சிறையிலிருந்து ஜனாதிபதியின் மன்னிப்பில் விடுதலையான தேரருக்கு எவ்விதமான நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை. அவர் விடுதலையான நாள் முதல் முஸ்லிம்களின் மனதை புண்படுத்துகின்ற வகையிலும், முஸ்லிம்களை வலிய சண்டைக்கு இழுக்கின்ற செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றார். ஆகவே அவருக்கு விடுதலையளித்த ஜனாதிபதி தான் அதற்கான பதிலை அளிக்க வேண்டும்.
கேள்வி:- முஸ்லிம் சமூகம் முகங்கொடுத்துவரும் நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினீர்களா?
பதில்:- ஆம், அனைத்து விடயங்களையும் பகிரங்கப்படுத்த முடியாது விட்டாலும், ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புத்தரப்பினர் என அனைவரையும் தொடர்ச்சியாக சந்தித்து கலந்துரையாடி வருகின்றோம். குற்றங்களுடன் தொடர்பில்லாது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்பாவி சகோதரர்களின் விடுதலை தொடர்பில் இப்பேச்சுக்களின் போது அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றோம். குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எமக்கும் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.
ஆனால் மதத்தலைவர்களின் பெயரால் முன்னெடுக்கப்படும் அராஜகங்களை முடிவுக்கு கொண்டுவருமாறும், ஒருசில அரசியல்வாதிகள் தமது அடுத்த தேர்தல் வெற்றிக்காக கக்கிவரும் தீயை கட்டுப்படுத்துமாறும், முஸ்லிம்களுக்காகவே அவசரகாலச் சட்டம் என்ற வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கைவிடுமாறும் விசேடமாக ஜனாதிபதியிடத்தில் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம்.
கேள்வி:- அச்சமயத்தல்; ஜனாதிபதியின் பிரதிபலிப்பு எவ்வாறு இருந்தது? நடைமுறையில் மாற்றங்கள் இருக்கின்றனவா?
பதில்:- நாம் கூறிய விடயங்களை கவனத்தில் கொள்வதாக தான் கூறினார். ஆனால் நடைமுறையில் அவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
கேள்வி:- ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு இடையிலான முரண்பாடுகள் நாட்டின் தேசிய பாதுகாப்பு பலவீனமடைவதற்கு காரணமாக உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
பதில்:- அதுவும் ஒருகாரணமாக இருக்கலாம்.
கேள்வி:- இருவருக்குமான இந்த முரண்பாடுகளே குண்டுத்தாக்குதலை தடுக்க முடியாது போனமைக்கான காரணமாக இருக்கின்றது எனக் கருதுகிறீர்களா?
பதில்:- தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக முன்கூட்டியே அறியப்பட்டிருக்கின்றன. சஹ்ரான் உள்ளிட்டவர்களின் பெயர்கள், தொலைபேசி விபரங்கள் கையளிக்கப்பட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்படுவதற்கு ஏன் இடமளிக்கப்பட்டது என்பது தொடர்பில் எமக்கு இன்னமும் சந்தேகம் உள்ளது. எனினும் தற்போதைய விசாரணைகள் மூலம் உண்மையான விடயங்கள் விரைவில் வெளியாகும். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளும் உண்மைகளை வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கையும் எமக்கு உள்ளது.
கேள்வி:- உங்களுடைய பாதுகாப்புத்தரப்பினர் இவ்விடயம் தொடர்பில் முன்கூட்டியே தங்களுக்கு அறிவுறுத்தியிருந்தனரா?
பதில்:- எனக்கு அவர்கள் எதனையும் கூறவில்லை.
கேள்வி:- ஆனால் சஹ்ரான் அணியினரின் தாக்குதல் பற்றிய எச்சரிக்கை அவர்களுக்கு முன்கூட்டியே கிடைத்திருந்ததா?
பதில்:- தாக்குதல் இடம்பெற்ற பின்னர் அவர்களை வினவியபோது அவர்கள் எனது பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துமாறே அறிவிக்கப்பட்டிருந்ததாக கூறினார்கள்.
கேள்வி:- முஸ்லிம் பிரதிநிதிகள் கூட்டாக இராஜினாமாச் செய்திருக்கும் நிலையில் அடுத்துவரும் காலப்பகுதியில் “முஸ்லிம் கூட்டமைப்பு” உருவாக்கப்போவதாக கூறப்படுகின்றதே?
பதில்:- பல்வேறு கருத்துக்கள் வெளிவருகின்றன, ஆனால் அத்தகைய பேச்சுக்கள் எதுவும் உத்தியோக பூர்வமானதாக நடைபெற்றிருக்கவில்லை. எமது கூட்டு இராஜினாமா அரசியல் நோக்கம் கொண்டதல்ல. பதற்றமான நிலைமையில் காடையர்களை ஒருங்கிணைத்து பௌத்த தேரர்கள் மேற்கொண்ட செயற்பாடுகளால் மீண்டும் இந்த நாட்டில் சிங்கள, முஸ்லிம் இனக்கலவரம் வெடிக்கும் நிலைமையே ஏற்பட்டிருந்தது. நாட்டை குட்டிச்சுவராக்குவதற்கு தேரர்கள் சதிசெய்திருந்தனர்.
காடைத்தனத்தினை தடுப்பதற்கான வல்லமை அற்று முதுகெலும்பில்லாத அரசாங்கமாக இருந்தது. இதனால் தான் நாம் கூட்டாக இராஜினாமாச் செய்து இனக்கலவரத்தை தடுத்தோம். கலவரம் நடைபெற்றிருந்தால் முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி இந்த நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கும். அத்தகையதொரு சூழல் ஏற்படாதிருக்கவே நாம் அனைவரும் ஒற்றுமையாக இராஜினாமாச் செய்திருந்தோம். தற்போதும் நாம் ஒற்றுமையாகவே சமூகம் சார்ந்தும், நாடு சார்ந்தும் செயற்படுகின்றோம். மேலும் தேர்தலொன்று அறிவிக்கப்படுகின்றபோது தான் அதுபற்றி (கூட்டமைப்பு) சிந்திக்கலாம்.
கேள்வி:- மீண்டும் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பீர்களா?
பதில்:- ஒரு இக்கட்டான கட்டத்தில் தான் அமைச்சுப்பதவிகளை தூக்கியெறிந்திருந்தோம். அதன் பின்னர் அரசாங்கத்திடத்தில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அக்கோரிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறுகின்றன. அவை பூரணத்துவம் அடைகின்றபோது தான் அதுபற்றி சிந்திக்கலாம்.
கேள்வி:- தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்கால நிறைவுக்குள் அமைச்சுப்பதவியை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?
பதில்:- இது எனது தனிப்பட்ட தீர்மானம் அல்ல. எமது கட்சியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இணைந்து தான் தீர்மானங்களை எடுத்திருந்தோம். ஆகவே எடுத்த எடுப்பில் என்னால் பதிலளிக்க முடியாது. கட்சிகளே கூடி ஆராய்ந்து தீர்மானிக்கும்.
கேள்வி:- உங்கள் மீதும், உங்களின் சகோதரர் மற்றும் மனைவி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையுமே மறுதலிக்கின்றீர்களா?
பதில்:- குறுகிய காலத்தில் எமது கட்சியின் வளர்ச்சியால் பலருக்கு அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சி எம்மீதுள்ளது. ஆகவே உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் என்னையும் என்சார்ந்தவர்களையும் தொடர்புபடுத்தி அனைத்தையும் முடக்கவே முனைந்தார்கள். ஆனால் இறைவனின் நாட்டத்தாலும், பாதுகாப்புத்துறையின் நேர்மையான செயற்பாடுகளாலும் எந்த பயங்கரவாத செயற்பாடுகளுடனும் எனக்கு தொடர்பில்லை என்பது வெளிப்பட்டுள்ளது. நான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவன். ஆகவே அதன் வலிகளை உணர்ந்த நான், இஸ்லாத்தின் பெயரால் பயங்கரவாதம் நாட்டிற்குள் உருவெடுக்க ஒருபோதும் இடமளிக்கப்போவதே இல்லை.
கேள்வி:- இப்ராஹிம் ஹாஜியாருக்கும் உங்களுக்கும் எத்தகைய உறவுகள் இருந்தன?
பதில்:- அவர் கொழும்பு வர்த்தக சங்கத்தின் தலைவராக இருந்தார். நான் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சராக இருந்தேன். அப்போது கொழும்பு வர்த்தக சங்கப் பிரச்சினைகள் பற்றி தீர்வுகளை வழங்குவதற்காக கூட்டங்களை நடத்துண்டு. அதன்போதான அறிமுகம் இருந்தது. அதனைவிட தனிப்பட்ட உறவுகள் எவையும் இருக்கவில்லை.
கேள்வி:- இப்ராஹிம் ஹாஜியாருக்கும் உங்களுடைய சகோதரருக்கும் இடையில் கூட்டு வர்த்தக உறவுகள் இருக்கின்றதல்லவா?
பதில்:- இல்லை. அவருடனோ அல்லது அவர்களின் புதல்வர்களுடனோ என்னுடைய சகோதரருக்கு எந்த வர்த்தக உறவுகளும் இல்லை.
கேள்வி:- உங்கள் மீதான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் விமர்சனங்களை எப்படி பார்க்கின்றீர்கள்?
பதில்:- கடந்த ஒக்டோபர் 26இல் சட்டவிரோத ஆட்சி உருவாக்கப்பட்டபோது அதற்கு எனது ஆதரவை வழங்குமாறு அவர் கோரினார். அந்தக் கோரிக்கையை நான் நிராகரித்திருந்தேன். இதன் காரணத்தாலேயே கற்பனைக்கு எட்டாத குற்றச்சாட்டுக்களையெல்லாம் முன்வைக்கின்றார். ஆனால் அவையெல்லாம் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எஞ்சியவையும் விரைவில் நிரூபணமாகும்.
கேள்வி:– பொதுஜன முன்னணியின் முதலாவது மாநாடு நடைபெறவுள்ள நிலையில் மீண்டும் கூட்டணிக்கான அழைப்பு உங்கள் தரப்புக்கு விடுக்கப்பட்டால் ஏற்பீர்களா?
பதில்:- நாம் சிறுபான்மை இனத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம். நாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. ஆனால் இந்த நாட்டில் வாழும் அனைத்து இனங்களுக்கும் உரிமைகளை சமமாக வழங்கும் ஒரு தலைவர் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். உரிய தருணத்தில் எமது கட்சி கூடி இறுதி தீர்மானங்களை எடுக்கும்.
கேள்வி:- பசில் ராஜபக்ஷவுக்கும் உங்களுக்குமான நட்பு தங்களின் எதிர்கால அரசியல் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்துமா?
பதில்:- பசில் ராஜபக்ஷ என்னுடைய நல்ல நண்பர். பொருளாதார சிந்தனைவாதியும் கூட. சிறுபான்மை இனத்துடன் இணைந்து வாழ வேண்டும் என்ற சிந்தனையும் அவருக்கு உண்டு. இருப்பினும் அவருடைய அணி இனவாதம் கக்குகின்றதாக இருக்கின்றது. ஊயிர்த்த ஞாயிறு சம்பவத்தை பயன்படுத்தி ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்ற வேண்டும் என்ற சிந்தனையாளர்களும் அவ்வணியில் இருக்கின்றார்கள். எதிர்கால முடிவுகள் எவ்வாறு அமையும் என்று தற்போது கூறமுடியாது எனினும் எமது முடிவுகள் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் நன்மை பயப்பதாக இருக்கும். இதில் தனிப்பட்ட இருவருக்கு இடையிலான நட்பு அரசியல் ரீதியான முடிவுகளுக்கு காரணமாகாது.
கேள்வி:- வஹாப் சிந்தனைகள் முழுவீச்சில் உள்ள சவூதி அரேபியாவுடன் நீங்களும், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதோடு பாரியளவிலான நிதி உதவிகளைப் பெற்றுவருதாகவும் கூறப்படுகின்றதே?
பதில்:- மதரீதியாக எந்தவொரு அமைப்புக்கும் நிதியைப் பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளில் நான் ஈடுபட்டிருக்கவில்லை. ஆனால் சவுதி அரேபியா, கட்டார், டுபாய், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் உதவிகளைப் பெற்று யுத்தத்தால், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளோம். அதனைத்தவிர வேறெந்த தேவைகளுக்காகவும் நிதி உதவிகளை நாம் பெறவும் இல்லை. யாருக்கும் வழங்கவும் இல்லை.
கேள்வி:- பெரும்பான்மையினத்தின் ஏதேச்சாதிகாரத்தினால் தமிழ் மக்கள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில் முஸ்லிம் மக்களும் அத்தகையதொரு சூழலுக்குள் தற்போது தள்ளப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே இருதரப்பினரும் இணைந்து ஜனநாயக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் எதிர்காலத்தில் ஏற்படுமா?
பதில்:- முஸ்லிம்கள் வடக்கு கிழக்கிற்கு உள்ளே 1ஃ3பகுதியினரும் அதற்கு வெளியே 2ஃ3பகுதியினரும் வாழ்கின்றார்கள். கடந்தகாலத்தில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே சில கசப்பான விடயங்கள் இடம்பெற்றிருந்தாலும், தற்போதைய சூழலில் கடும்போக்கு பெரும்பான்மையினர் இரண்டு சிறுபான்மை சமூகங்களை மோதவிட்டு தமது இலக்குகளை அடைந்து கொள்வதற்கான சதிகளை செய்கின்றார்கள். இதனை புரிந்துகொண்டு புத்திசாதுரியமாக இருதரப்பு விட்டுக்கொடுப்புக்களின் அடிப்படையில் பொதுவான விடயங்களில் தமிழப்; பேசும் சமூகமாக இணைந்து செயற்பட வேண்டும்.
கேள்வி:- கல்முனை உபப்பிரிவை தரமுயர்த்துவது குறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்:- இந்த விடயத்தினை அரசியல் ரீதியாக கையாள முடியாதிருக்கின்ற நிலையில் இருதரப்பிலும் புத்திஜீவிகள் குழுக்களை அமைத்து அதன் ஊடாக பேச்சுக்கள் முன்னெடுத்து தீர்வினை எட்ட முடியும். ஆனால் இந்த விடயத்தினை இத்தனை தூரம் வளரவிட்டமை தவறாகும். இந்த விடயம் தொடர்பில் அண்ணன் சம்பந்தனும், சகோதரர் ரவூப் ஹக்கீமும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வினைக் கண்டிருக்கலாம் அல்லது சகோதரர் ஹரீஸ{ம், கோடீஸ்வரனும் பேச்சுக்களை நடத்தியிருக்க வேண்டும். இவற்றில் ஏற்பட்ட பின்னடைவுகள் தான் நிலைமைகள் மோசமடைந்து மூன்றாவது தரப்பிடத்தில் செல்வதற்கு காரணமாக இருக்கின்றன.
நன்றி : வீரகேசரி

Related Post