ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தமை தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் தனது பேஸ்புக் கணக்கில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழ்த்துக்கள் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று 01/12/2014 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மீண்டும் எனது அரசியல் தாய் வீட்டுக்கு வந்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். நுவரெலியா மாவட்டத்திற்கு தேவையான வசதிகளை வழங்குமாறு நான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரிடம் விடுத்த கோரிக்கை கவனத்தில் எடுத்து கொள்ளப்படவில்லை என்பதால், நான் மன குழப்பத்தில் இருந்தேன் எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியிலிருந்து இன்னும் பலர் எதிர்க்கட்சியில் இணைந்துகொள்ள உள்ளதாக, அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்து எதிர்க் கட்சியில் இணைந்து கொண்ட நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.
வெளிப்படைத்தன்மையுடைய ஜனாதிபதி முறைமை ஒன்று உருவாக்கப்படும். என்னைப் பற்றிய கோவைகள் ஏதேனும் இருந்தால் அதனை 24 மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றேன் என தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நவீன் திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.