Breaking
Thu. Dec 26th, 2024
கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்கச் சொன்னால் காத்தான்குடி சமூகம் வாக்களிக்காது என்பதனால் ஹிஸ்புல்லாஹ்வை மறைமுகமாக பஷீல் ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கியுள்ளார் என்று விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
நாம் யாரை ஆதரிக்க வேண்டும் எனும் கருப்பொருளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடா கிளை ஏற்பாடு செய்த நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு ஓட்டமாவடி மன்னூ ஸல்வா வளாகத்தில் இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் அமீர் அலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில், காத்தான்குடி மக்களும் முஸ்லிம் சமூகமும் சஜீத் பிரேமதாசாவுக்கு போடுகின்ற வாக்கை இல்லாமற் செய்கின்ற ஒரு தந்திரோபாயமான நாடகம்தான் ஹிஸ்புல்லாஹ்வை அவர்கள் ஒட்டகச் சின்னத்தில் களமிறக்கியுள்ளார்கள்.
பொய் சொல்வதிலும் சத்தியம் பண்ணுவதிலும் நான் கண்ட அரசியல்வாதிகளில் ஹிஸ்புல்லாஹ்வை மிஞ்ச யாருமே கிடையாது. அவர் அரசியல் அதிகாரத்திற்காக எந்தப் பலியைச் செய்வதற்கும் தயங்கமாட்டார். அவருடைய பிள்ளையைத்தான் அறுத்துப் பலியிட வந்தாலும் இஸ்மாயில் நபி அவர்களின் கதீஸை சொல்லி அறுப்பார் அப்படிப்பட்ட ஒருவர்தான் ஹிஸ்புல்லாஹ் என்று தெரிவித்தார்.
அவர் நேரடியாக கோத்தபாயவை ஆதரிப்பது என்று சொல்வது வேறுவிடயம் ஆனால் முஸ்லிம் சமூகத்தை, காத்தான்குடி சமூகத்தை, கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற முஸ்லிம்களை ஒரு கேவலப்பட்ட ஒரு சமூகமாக அவர்கள் திட்டமிட்டுக் கொடுக்கின்ற அந்த சமிக்கைக்கு இவர்கள் கண்சிமிட்டுகின்ற ஒரு அமைப்பாளராக இருந்து செயற்படுவதென்பது அதுவொரு பிழையான விடயமாகும்.
எனவே முஸ்லிம் சமூகத்தை இப்படியான கபடத்தனத்திற்குள் சிக்க வைக்க வேண்டாம் என்று நாங்கள் சொல்கின்றோம். ஆட்சி அதிகாரம் தருபவன் இறைவன் அதற்காக அவர்கள் சொல்லுகின்ற, ஏவுகின்ற செயல்படி அவர்களின் நேரசூசியின் படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் கூறுகின்றோம் என்றார்

Related Post