Breaking
Wed. Dec 25th, 2024
பயங்கரவாதி சஹ்ரானோடு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்பு பட்டதாகக் கூறி சம்பந்தமே இல்லாத பழையதொரு ஒளி நாடாவினை வைத்துக் கொண்டு   அவரை கைது செய்ய வேண்டும் என நாசகாரச் செயற்பாட்டாளர்கள் சதித் திட்டமொன்றை தீட்டி அவர் மீது    வேண்டுமென்றே குற்றச்சாட்டொன்றை சுமத்துகின்றார்கள். அவ்வாறான அநாகரீகம் மிக்கவர்களின் செயற்பாடுகளை எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மிக வன்மையாக கண்டிப்பதுடன், சகோதரர் ரவூப் ஹக்கீமுக்கு எந்தவொரு பிரச்சினை வருவதற்கும் நாம் எந்தவொரு விட்டுக் கொடுப்புக்களையும் புரியப் போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவினை ஆதரித்து சம்மாந்துரைப் பிரதேசத்தில் நேற்று(20) இரவு இடம்பெற்ற தேர்தற் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் மகாண சபை உறுப்பினர் எம்.எல்.அமீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், எமது சமூகத்திற்கு வீணாண பழி சுமத்தப்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. எமது சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் எதிராக நின்று நாம் ஒற்றுமைப்பட்டு குரல் கொடுப்பதற்காக  எந்த ஒரு சக்திக்கும் நாம் அஞ்சி விடப் போவதில்லை.
குறிப்பிட்ட ஓர் சாரார் புரிந்த குற்றத்திற்காக எம்மை வஞ்சித்தார்கள். எமது சமூக்தின் மீது பழிகளைச் சுமத்தினார்கள். அரசியல் தலைமைகள் நாம் ஒற்றுமைப்பட்டு நமது முஸ்லிம் சமூகத்திற்காக ஒருமித்து நின்று குரல் கொடுத்தோம். அந்த ஒற்றுமையினால் பல்வேறு நன்மையான விடயங்களை எமது சமூகத்தின் பால் மேற்கொள்ள முடிந்தது.
கட்சி ரீதியாக கருத்து முரண்பாடு எமக்குள் இருந்தபோதிலும் எமது சமூகத்தின் நலனுக்காக உறுதியாகவும் ஒற்றுமையாகவும் இருந்து பல விட்டுக் கொடுப்புகளுடன் ஒன்றுபட்டும்  தைரியமாக நாம் நின்று செயற்பட்டு வருகின்றோம்.
அந்த வகையில் கட்சி ரீதியாக எம் மத்தியில் சில கருத்து முரண்பாடுகள் இருப்பினும் சமூகம் ரீதியாக முரண்பாடுகள்  மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வருகின்றபோது அதனை நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்க போவதில்லை.
இந்த தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை எவ்வாறு சிதறடிக்கலாம், இந்த சமுதாயத்தினை எவ்வாறு ஏமாற்றலாம் என்ற சதி நடந்து கொண்டிருக்கின்றது. சஜித் பிரேமதாசாவிற்கு செல்லவுள்ள வாக்குகளை எவ்வாறு திசை திருப்பி அவரை எவ்வாறு தோற்கடிக்கலாம் என்று திட்டமிட்ட சதி முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஜனாதிபதித் தேர்தலின்போது போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் பௌத்த மதத்தனைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுள் யார் எமது சமுதாயத்திற்கு நன்மைகளைப் புரியக் கூடியவர் என அடையாளம் கண்டு செயற்பட வேண்டிய தார்மீகப் பொறுப்பு எமக்குள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ஷ பொதுபலசேனா போன்ற சேனாக்களை எமது நாட்டுக்குள் ஊடுருவுதற்கும் இனவாத நஞ்சை இந்த நாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் பிரதான காரண கர்த்தாவாக செயற்பட்டார் என்தனை இந்த சமூகம் மறந்து விடாது.
பொதுபலசேனாவின் பிரதான காரியாலயத்தினை திறந்து வைக்கும் நிகழ்விற்கு தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அக்காரியாலயத்தினை திறந்து வைத்தார். அந்நிகழ்விற்கு அவர் செல்வதை தடுக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டோம்.
அப்போதைய ஜனாதிபதியைக் கொண்டும் நாம் அம்முயற்சியில் ஈடுபட்ட போதிலும் தான் வாக்களித்த விடயத்தினை யார் கூறினாலும் நான் கேட்க முடியாது என கூறி அந்நிகழ்விற்கு அவர் சமூகமளித்தார். ஜனாதிபதி ஒருவரின் வார்த்தைக்கு கட்டுப்படாமல் அன்று செயற்பட்ட ஒருவர் இந்நாட்டில் ஜனாதிபதியாக வருவாரேயாக இருந்தால் இந்நாட்டில் எவ்வாறு ஆட்சி அமையும் என்பதனை நமது மக்கள் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கோத்தாபாய ராஜபக்ஷவிற்கு வாக்களித்து இந்த நாட்டை இன்னோர் மியன்மாராகவும், பர்மாவாகவும் மாற்றி விடாதீர்கள்.
யாருடைய அச்சுறுத்தல் காரணமாகவும், பணத்திற்காக சோரம் போயும் நமது முஸ்லிம் மக்களின் வாக்குகளை சஜித் பிரேமதாசாவினைத் தவிர வேறு எவருக்கும் அளித்து விடாதீர்கள். அச்சம் காரணமாக நாம் சோரம் போபவர்களாக இருந்தால் இந்த நாட்டில் 52 நாள் அரசியல் சூழ்ச்சி இடம்பெற்றபோது நாம் சோரம் போயிருக்க வேண்டும். நமது சமூகத்தின் நன்மைகளை மதித்து முஸ்லிம் அரசியல்வாதிகளான நாம் ஒற்றுமைப்பட்டிருக்க முடியாது.
இந்த சமுதாயத்தின்பால் துன்பவியல் செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது என்பதற்காக வரலாற்று தவறுகளை செய்த அரசியல் தலைமைகளாக நாம் இருந்து விடக் கூடாது என்பதற்காக நாம் செயற்பட்டு வருகின்றோம்.
முஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளர்கள் நம் முன்னே தோன்றி வெட்கம் இல்லாமல் பொய் வார்த்தைகள் பேசி வருகின்றார்கள். ஜனாதிபதியினை தீர்மானிக்கின்ற சக்தி மிக்க வேட்பாளர்கள் நாம் தான் என்று அவர்கள் வாய் கூசாமல் பொய் பேசித்திரிகின்றார்கள்.
நமது சமூகத்தினை ஏமாற்றி கபட நாடகம் ஆடுகின்ற சதி பல்வேறுபட்ட கோணங்களில் எம்மத்தியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவற்றுக்கெல்லாம் நாம் சோரம் போகாமல் யார் ஆட்சி பீடம் ஏறினால் எமது சமுதாயத்தின் இருப்பு உறுதியாகும், யார் ஆட்சி செய்தால் எமது பொருளாதாரம் பாதுகாக்கப்படும், எமது சமுதாயம் யார் பக்கம் நின்றால் நிம்மதியாக வாழ முடியும், எதிர்கால சந்ததியினரின் வாழ்வு கேள்விக்குறியாக இருக்காமல் இருக்க நாம் எந்த அணியில் இணைய வேண்டும் என்று தூர நோக்கோடு சிந்தித்து செயற்பட வேண்டிய பாரியதோர் தார்மீகப் பொறுப்பு இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் உள்ளது என்பதை மறந்து விடவேண்டாம்.
ஏனைய தேர்தல்கள் போல் இந்த ஜனாதிபதித் தேர்தல் அல்ல. இத்தேர்தலில் நமது முஸ்லிம் சமூகம் பிழையான முடிவொன்றை எடுக்குமாக இருந்தால் இந்த சமுதயாயம் சீரழிந்த சமுதாயமாக அச்சத்தோடு வாழ்கின்ற சமுதாயமாக அடிமைத்தனத்தோடு வாழ்கின்ற சமுதாயமாக நமது மக்கள் மாறிவிடுவார்கள். இந்த நாட்டை மியன்மார்போல் ஆக்குவதற்கான துரோகிகள் போலாகிவிடுவோம்.
மக்கள் பிரதிநிதிகளை பழி தீர்ப்பதற்காக வாக்களிக்கும் தேர்தலாக இத்தேர்தலினை யாரும் கருதி விடக்கூடாது. சாதாரண தேர்தலாக இதனை பார்த்து விட வேண்டாம். எமது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழச் செய்வதற்காக பொறுப்பு வாய்ந்த தேர்தலாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் உள்ளது என்பதை சிந்தித்து செயலாற்றுகின்ற தேர்தலாக இத்தேர்தல் உள்ளது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டிய தேர்தலாகும்.
எமது அச்ச நிலை களையப்பட வேண்டுமாக இருந்தால், உண்மையான பௌத்த மகன் இன்னொருவரின் மத ஸ்தானத்தினை அழிப்பதற்கும் தாக்குவதற்கும் முன்வர மாட்டான் என எந்தவொரு பௌத்த மகனும் பிற மதத்தவர்களை நிந்திக்கும் செயற்பாட்டில் ஈடுபட மாட்டார்கள். இந்த நாட்டில் யார் சட்டத்தினை தன் கையில் எடுத்து செயற்படுகின்றாரோ அவரை எந்த தயவும் இன்றி அதிக பட்ச தண்டனையினை வழங்குவதற்கு ஓர் இரும்பு மனிதன் போல் நின்று இந்நாட்டின் ஆட்சியினை தூயதோர் பாதையில் நின்;று கொண்டு செல்வேன் என குறிப்பிடும் சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களியுங்கள என நான் பகிரங்கமாக கூறிவைக்க விரும்புகின்றேன்.
எமது தலைகளைக் கொடுத்தாவது அல்லது எமது பதவிகளைப் பறிகொடுத்தாவது இந்தச் சமூதாயத்தினை பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு நாம் பல்வேறு முயற்சிகளினல் ஈடுபட்டு வருகின்றோம். நாம் உயிரை துச்சமென எண்ணி பகிரங்கமாக செயற்பட்டு வருவதை யாரும் மறந்துவிடமாட்டார்கள்.
இத்தேர்தலானது நியாயத்திற்கும் அநியாயத்திற்குமான போராட்டம். எஞ்சியிருக்கின்ற நாட்களை மிக கவனமாக பயன்படுத்தி சஜித் பிரேமதாசாவிற்கு செல்லவுள்ள வாக்குகளின் எண்ணிக்கையினை அதிகப்படுத்துவதற்காக முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

Related Post