Breaking
Wed. Dec 25th, 2024

முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகளும் இன்னல்களும் ஏற்பட்ட போது அவர்களை எட்டியும் பார்க்காதவர்களும் நாசகார சம்பவங்கள் நடைபெற்ற குறிப்பிட்ட  இடங்களுக்கு என்றுமே செல்லாதவர்களும் இன்று மொட்டுக்கட்சியின் ஏஜெண்டுகளாக அலைந்து மக்களிடம் வாக்கு கேட்பதாக அகில இலங்கை மக்கள் கங்கிரஸின் தலைவரும்,  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

கிண்ணியாவில் நேற்று (24) சஜித் பிரேமதாஸவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏறுபாடு செய்ய பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

சமூகத்தைப் பற்றி இதுவரை காலமும் எந்த விதமான அக்கறையும் கொள்ளாத இவர்கள் இப்போது அக்கறை கொள்ளாத இவர்கள் தமது சொந்த இருப்புக்காகவும் சுகபோகங்களுக்காகவும் சுயநலங்களுக்காகவும், முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு வந்து வெட்கம் இல்லாமல் வாக்குக்காக அலைந்து திரிவது வேதனையாகவும் வேடிக்கையாகவும் இருக்கின்றது.

மொட்டுக்கட்சியினர் சிறுபான்மை மக்களை ஏமாற்றி வாக்குகளை வசீகரிப்பதற்காக பல்வேறு யுக்திகளையும் ஏமாற்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். பிரதேசத்திற்கு பிரதேசம், இனத்திற்கு இனம்,  ஊருக்கு ஊர்,  அவர்கள்  வித்தியாசமான பாணியில் தமது பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ளனர். பெரும்பான்மை மக்கள் வாழ்கின்ற இடங்களில் இனவாதத்தை கக்கி, மக்களை உசுப்பேற்றி வாக்கு கேட்கின்றார்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வேண்டுமென்றே என்னையும், டாக்டர் ஷாபி போன்றவர்களையும் பயங்கரவாத்துடன்  வேண்டுமென்றே முடிச்சிப் போட்டு  பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வந்த இந்த நாசகாரக் கூட்டம் இப்போது தேர்தலுக்காக அதனை மீண்டும் கையில் எடுத்து ஆடுகிறார்கள்.   இப்போது புதிதாக ஹக்கீமையும் இந்த பட்டியலில் இணைத்துக்கொண்டு வீட்டுக்கு வீடு சென்று பழைய வீடியோக்களையும், முன்னர் எடுத்த படங்களையும் காட்டி சிங்கள மக்கள் மத்தியிலேயே எப்படியாவது இனவாதத்தை  விதைத்து அவர்களின் மனதை மாற்றப்பார்க்கிறார்கள். கோட்டாபாய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக எத்தனையோ திருகுதாளங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

முஸ்லிம் சமூகம் பயங்கவாதத்துடன் துளியளவும் தொடர்பு கொண்ட ஒன்றல்ல என்பதை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாம் துல்லியமாக நிரூபித்துக்காட்டியுள்ளோம். அது மாத்திரமின்றி பயங்கரவாதத்தை துடைத்தெறிய முழு ஒத்துழையப்பையும் பாதுகாப்பு படைக்கு வழங்கி எமது நாட்டுப் பற்றை  உலகுக்கு உணர்த்தியுள்ளோம். எனினும் இந்த நன்றிகெட்ட ஜென்மங்கள் தமது அரசியல் சுயநலத்திற்காகவும் அதிகாரத்தை பெறுவதற்காகவும் வெறி கொண்டு அலைகின்றார்கள். அதற்காக எம்மை பலிக்கடாவாக  பயன்படுத்து வருகின்றனர். அதுமாத்திரமின்று  சிறுபான்மை இன மக்களான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கு மத்தியிலும் பிளவுகளையும் பிரிவினைகளையும் உருவாக்கி தமது கைங்கரியத்தை மேற்கொள்கின்றார்கள்.

முஸ்லிம் பிரதேசங்களுக்குள் தற்போது ஊடுறுவியுள்ள மொட்டுக்கட்சி ஏஜெண்டுகள், கோட்டாவை வெல்ல வைக்க வேண்டும் என்பதற்காக மேடை போட்டு கோஷமிடுகின்றனர். சமூகத்தின் மீது பற்றும் பாசமும் கொண்டவர்கள் போல நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்கள். நடிக்கின்றார்கள்.  முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்ட போது இவர்கள் எங்கிருந்தார்கள்? நமது பிரதேசங்களுக்கு எப்போதாவது வந்திருக்கின்றார்களா? எட்டியும் பார்த்தார்களா? முஸ்லிம் பெண்களின் பர்தாக்களை நீக்க வேண்டும் என்று இவர்கள் கூடிக்குலாவும் இனவாத மதவாத மதகுரு மார்களும் இனவாத அரசியல் வாதிகளும் அப்போதும், இப்போதும் கொக்கரித்த  போதும் எப்போதவாது எதிர்த்து வாய் திறந்தார்களா? தட்டிக்கேட்டார்களா? முஸ்லிம் மக்களை ஆசுவாசப்படுத்தினார்களா? இப்போது இனவாத அரசியல் தலைமைகளுக்கு வால் பிடித்துக்கொண்டு சிறுபான்மை மக்களின் வாக்குகளை எப்படியாவது சுருட்டிக்கொள்ள வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள், மக்களின் ஏழ்மையையும் வறுமையையும் இயலாமையையும் இதற்காக பயன்படுத்துகின்றார்கள்.

வடக்கு- கிழக்குக்கு வெளியேயுள்ள முஸ்லிம் பிரதேசங்களுக்குச் சென்று, பெரமுன வெற்றி பெறுவது உறுதியானதென்றும் கோட்டாவுக்கு வாக்களிக்காவிட்டால் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஒரு வகையான அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி வாக்குகளை கொள்ளையடிக்கும் ஒரு புதிய யுக்தி கையாள தொடங்கியுள்ளார்கள். பெரும்பான்மை மக்களால் ஆதரிக்கப்படும் கோட்டாவுக்கு வாக்களிக்காவிட்டால் நிம்மதியாக வாழ முடியாது என்றும் வியாபாரங்களை சரி வர செய்ய முடியாது என்றும் அச்சமூட்டுகின்றார்கள். மொட்டுக்கு வாக்களிக்காமல் விட்டாலும் பரவாயில்லை அன்னத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என்ற பயமுறுத்தல்களும் சில பிரதேசங்களில் இடம்பெற்றுவருகிறது. அதிகார வெறியும் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டுமென்ற துடிப்புமே இவர்களின் இந்த நடவடிக்கைக்கு பிரதானம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது  இதனை ஒரு சாதரண தேர்தலாக நீங்கள் எண்ண வேண்டாம் சமுதாயத்தின் பாதுகாப்பு, இருப்பு பிள்ளைகளின் எதிர்காலம் எல்லாமே இதில் தான் தங்கியுள்ளது. இந்த தேர்தலில் நாம் ஒரு தீர்க்கமான முடிவை மேற்கொள்ள வேண்டும். காசுக்காகவும் அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும்  நீங்கள் விலைபோகிவிடக்கூடாது. இவர்களின் மாய வலையிலும் பசப்பு வார்த்தைகளிலும் நீங்கள் ஏமாறிட வேண்டாம். எனவே, சஜித் பிரேமதாஸவின் அன்னச்சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலமே சிறுபான்மை மக்களின்  நிம்மதியும் சுதந்திரமான  வாழ்வும் தங்கியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்..

டாக்டர். ஹில்மி கரீம் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் இராஜாங்க அமைச்சருமான அமீர் அலி, கட்சியின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஜவாத், கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷாராப் , கட்சியின் முக்கியஸ்தர்களான அன்ஸில்,  தெளபீக், நிசார்டீன்  , வைகே. ரஹ்மான், நெளபர் மற்றும் பிரதேச சபை நகர சபை உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள்  பங்கேற்று உரையாற்றினார்கள்.

Related Post