Breaking
Wed. Dec 25th, 2024

முஸ்லிம் வாக்குகளை சிதைப்பதன் மூலம் முஸ்லிம் அரசியல் தளத்தினை இல்லாமல் செய்வதே இனவாத மொட்டு கட்சியின் நோக்கம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடா தொகுதி இளைஞர் அமைப்பினர் வருடாந்தம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2019) இரவு ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

இனவாத கட்சியான மொட்டுக் கட்சி ஆட்சி அமைத்தால் சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்குவது மாத்திரமின்றி அவர்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல் தலைமைகளை சிறையில் அடைப்பதற்கும் தயங்கமாட்டார்கள்.

தென்பகுதியில் தேர்தல் பிரச்சார மேடைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமையை சொல்லி வாக்கு கேட்கும் அளவிற்கு இனவாதிகள், மதவாதிகள் கூட்டமாக இருந்து கோட்டாபாயவை வெற்றி பெறச் செய்வதற்கான
கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எமது முஸ்லிம் சமூகத்தினை வாழ வைப்பதற்கான தலைமைத்துவம் எங்கே உள்ளது என்பதை தேட வேண்டும். அரசியலிலே நாங்கள் மடமை சமூகங்களாக இருந்து விட்டால் பல்லாயிரக் கணக்கான வரலாறுகளை கொண்ட எமது சமூதாயம் இந்த நாட்டின் எமது இருப்பை, பாதுகாப்பை, எதிர்காலத்தை தொலைத்து விடும்

எமது மக்களுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையும் எதையும் செய்யக் கூடியவர்களாக, பதவிகளை தூக்கி எறியக் கூடியவர்களாக, எந்த தியாகத்தையும் செய்து கொள்பவர்களாக கடந்த வரலாறுகள் காட்டித் தந்தது.

ஜனாதிபதி தேர்தலில் கருத்து பேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. தேர்தலில் சிறுபான்மை சமூகம் ஒன்றுபடவில்லை என்று சொன்னால் நாளை அடிமைச் சமூகமாக எங்களது வரலாறு எழுதப்பட்டு விடும். எங்கள் மீது அடிமைச் சங்கிலி இடப்படும். எங்களது குரல் நசுக்கப்படும். சிறுபான்மை சமூகத்திற்காக பேசுவதற்கு இருக்கின்றவர்கள் கைது செய்யப்பட்டு அடைக்கப்படுகின்ற நிலைமை இடம்பெறும்.

எமது சமூகத்திற்கு அவர்கள் அநியாயம் செய்ய முயற்சி செய்கின்ற பொழுது அந்த அநியாங்களை தட்டிக் கேட்கின்ற பொழுதெல்லாம் பேசமுடியாமல் சிறையில் அடைக்கின்ற சதி நடைபெறும். முப்பது வருட யுத்தத்தினை முடிவு செய்த சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு மக்கள் வாக்களித்தனர். இவரை நியாயம் இல்லாமல், நீதிமன்ற உத்தரவில்லாமல் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரை அனுப்பி பலவந்தமாக தூக்கி கொண்டு போய் சிறையில் அடைத்த வரலாறு இருக்கின்றது.

சிறையிலடைத்த பின்னர் தான் குற்றங்கள் சுமத்தப்பட்டு இரண்டு வருடங்கள் சிறையில் அடைத்தனர். வைத்தியர் சாபி தான் செய்யாத குற்றத்திற்காக பழி சுமத்தப்பட்ட வரலாறு இருக்கின்றது. வைத்தியர் சாபி குற்றவாளி இல்லை என்று நிரூபிக்கப்படாமல் இருந்திருந்தால் முஸ்லிம் வைத்தியர்கள் தங்களுடைய பணியை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருக்கும்.

வைத்தியர் சாபியை கைது செய், தண்டனை வழங்கு என்று நீதிமன்றம் முன்னால் கோட்டபாயவிற்கு வால் பிடிக்கின்ற ரத்ண தேரர், விமல் வீரவன்ச ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள். இந்த இனவாதிகளை மகிந்த ராஜபக்ஷ, கோட்டபாய ராஜபக்ஷ ஏன் தடுத்திருக்கவில்லை.? இவர்கள் சொல்லியிருந்தால் ரத்ண தேரர், விமல் வீரவன்ச சென்றிருப்பார்களா?, ஒரு பொய்யை சொல்லி வைத்தியரை சிறையில் அடைந்து ஒட்டுமொத்த முஸ்லிம் வைத்தியர்களையும் அவமானப்படுத்தி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினை அடக்கி ஒடுக்கின்ற சதியை செய்ய முற்பட்டனர்.

முஸ்லிம்களின் பொருளாதாரத்தை, கல்வியை அடக்க சதி, சிறுபான்மை சமூகத்திற்கு அநியாயம் நடக்கின்ற போது பேசுகின்ற எங்களை சஹரானோடு சேர்த்து பார்த்தார்கள். சஹரானோடு பேசியது கிடையாது, கண்டதும் கிடையாது என்று சொல்லியும் கூட என்னையும் சேர்த்து பார்த்தார்கள்.

முஸ்லிம் தலைமைத்துவத்தை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி, பதவிகளைப் பறித்து சிறையில் அடைத்தால் முஸ்லிம் தலைமைத்துவத்தை இந்த நாட்டில் இல்லாமல் செய்யலாம் என்று பார்த்தார்கள். இவ்வாறு செய்த கூட்டம் தற்போது பள்ளிவாயல்களுக்கு வருகின்றது. தற்போது சிலர் கோட்டாபாயவை வெல்ல வைப்பதற்காக அதனை நேரடியாக கேட்பதற்கு முதுகெலும்பு இல்லாததால் வேறு சின்னத்தில் வந்து ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி என்று சொல்கின்றார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் மக்களை ஏமாற்றுவதற்காக பலர் வந்துள்ளனர். பலவகையான சதிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், பிரதேச சபைத் தலைவர் அஸ்மி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Related Post