Breaking
Tue. Dec 24th, 2024

பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபயவின் வெள்ளை வேன் கலாச்சாரத்தை மீண்டும் ஊடுருவச் செய்வதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்று (02) மாலை மன்னார் தாராபுரத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அலிகான் சரிப் தலைமையில் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். அமைச்சர்களான ரவி கருனாணாயக்க, ராஜித சேனாரத்ன ஆகியோரும் பங்கேற்றனர்.

பிரதமர் மேலும் கூறியதாவது,

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பிறந்த கிராமமான தாரபுரத்தில் உரையாற்றக் கிடைக்கதமை மகிழ்ச்சி தருகிறது. நாங்கள் பணத்தை செலவளிப்பது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு மட்டுமே, நீங்கள் பணத்திற்காக ஏமாற வேண்டாம். எவராவது இந்தக் காலத்தில் பணம் தந்தால் வாங்கி, அதனை சட்டைப் பைகளில் போடுங்கள்.

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கும், அப்போது வெள்ளை வேன் கலச்சாரம் இருந்தது. 2015ஆம் ஆண்டு தேர்தலில் சுதந்திரத்திற்காகவும் ஜனநாயக விழுமியங்களுக்காகவும் வாக்களித்தீர்கள். வீதிகளில் நடமாட முடியாத நிலைலை நாங்கள் இல்லாமலாக்கினோம். அந்த நிலையை தொடர வேண்டுமானால் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து அவரை வெல்லச் செய்யுங்கள்.

மன்னார் மாவட்டத்தில், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கொண்ட அபிவிருத்தி பணிகள் உங்களுக்குத் தெரியும். மன்னார் நகரை அபிவிருத்தி செய்தார். வீடுகளை அமைத்தார், பாதைகளை புனரமைத்தார். கிராமங்களில் அபிவிருத்தியை மேற்கொண்டார். பல்வேறு செயற்திட்டங்களை உருவாக்கினார். இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவியுடன் இந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்திருக்கின்றோம். தொழில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜித சேனாரட்னவின் ஒத்துழைப்புடன் சுகாதர சேவைகளை மேம்படுத்தியுள்ளோம். தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டிலிருந்து நாம் ஆரம்பித்த அபிவிருத்தி செயற்பாடுகளை முன்கொண்டு செல்ல உதவுங்கள். மன்னார்- பூநகரி ஊடாக யாழ்ப்பாணத்திற்கான தரை வழிப் பாதையை நவீனமயப்படுத்தவுள்ளோம், தலைமன்னார் துறையை விருத்தி செய்து பயணிகள், கால்நடைகளுடன் வாகனங்களையும் கப்பலின் ஊடாக கொண்டு வரும் திட்டங்களை மேற்கொள்வோம்.

மன்னார், வவுனியா – திருமலை நெடுஞ்சாலையை அபிவிருத்தி செய்வோம். மீன்பிடித்துறையில் நவீனத்துவங்களை உருவாக்கி, மீன் வளர்ப்பை அறிமுகப்படுத்தி, மீன் ஏற்றுமதியில் அதிகரிப்பை ஏற்படுத்துவோம். அதே போன்று கால்நடை வளர்ப்பிலும் கவனம் செலுத்துவோம். ஏற்கனவே மல்வத்து ஓயா நீர் வழங்கல் திட்டத்தை தொடக்கியுள்ளோம். நவீனமயப்படுத்தலின் ஊடாக இந்த பிரதேசங்களில் தனியார் துறையினருக்கும் ஊக்குவிப்பை வழங்குவோம். குளிரூட்டல் மத்திய நிலையம் ஒன்றை உருவாக்கி மரக்கறி, மீன்களை களஞ்சியப்படுத்தும் வசதிகளைச் செய்வோம். சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பிரதேச சபைத் தலைவர்களான செல்லத்தம்பு, முஜாஹிர் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் மார்க் உட்பட பலர் உரையாற்றினர்.

 

Related Post