தாம் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் சில மணித்தியாலங்களில் முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் அகற்றப்பட்ட அனைத்து தரங்களையும், வரப்பிரசாதங்களை மீளளிக்கவுள்ளதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பதற்கு ஜனநாயக கட்சி எடுத்த தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றிய பொது வேட்பாளர், 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சரத் பொன்சேகாவுக்கு முகம்கொடுக்க நேர்ந்த சம்பவங்கள் தொடர்பாக அரசாங்க அமைச்சர் என்ற வகையில் தாம் வருத்தமடைந்திருந்ததாக தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் ஜனநாயக கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களும் தொகுதிய அமைப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, ஜனநாயக கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் அருண தீபால், பொது வேட்பாளரிடம் வினாவொன்றை முன்வைத்தார்.
பொதுவேட்பாளர் பதவியேற்கும் பட்சத்தில் சரத் பொன்சேகாவுக்கு அனுகூலம் கிடைக்குமா என அவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர், தமது உறுதிமொழியை வழங்கினார்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, கட்சி என்றவகையில் பொதுவேட்பாளருக்கு ஆதரவளித்து, பக்கபலமாக செயற்படவுள்ளதாக தெரிவித்தார்.
அன்று முறையற்ற ஆட்சியாளருக்கு எதிராக தனித்து முன்நின்று குரல் கொடுத்தது அவரது ராணுவ தளபதி, ஆனால் இன்று அவரின் செயலாளர் நாயகமே எதிராக போட்டியிடுகிறார்.
எமது கட்சியின் நிலைப்பாட்டை பாதுகாத்து பொதுவேட்பாளருடன் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.