“இரத்தம் வழங்கி உயிரைப் பாதுகாத்தல்” (Give Blood Save Life) என்பது உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கோஷமாக மட்டுமன்றி, அதனை ஒட்டியதாக இரத்ததானம் எனும் உயிர்காக்கும் செயற்றிட்டம் உலகெங்கும் அரசாங்கங்களாலும் நிறுவனங்களாலும் நடத்தப்பட்டு வருகின்றது.
ஜூன் 14ஆம் திகதி சர்வதேச இரத்தான தினம் பிரகடனப்படுத்தப்பட்டு இந்நிகழ்ச்சித் திட்டத்துக்கான ஊக்குவிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இயற்கை அனர்த்தங்கள், போர்ச்சூழல், விபத்துக்கள், குருதி தொடர்பான நோய்கள் முதலானவை இரத்த தானத்தை அதிகம் வேண்டி நிற்கும் சந்தர்ப்பங்களாகும். இச்சந்தர்ப்பங்களில் ஆயிரக்கணக்கானோரை சாவின் விளிம்பிலிருந்து பாதுகாத்த அரும் பணியை இரத்ததான முகாம்கள் நிறைவேற்றியுள்ளன.
நமது நாட்டிலும் இரத்த வங்கிகளின் (Blood Bank) கதவுகள் இருபத்து நான்கு மணிநேரமும் தட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கால சூழலை நாம் இலகுவில் மறந்து விட முடியாது. நமது நாட்டு மக்கள் இன, மத பேதமின்றி இரத்ததான முகாம்களில் கலந்து கொண்டு மனித உயிர காக்கும் பணிக்கு தமது ஆதரவை முழுமனதோடு வழங்கியுள்ளனர்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை இத்தகைய மனித நலப் பணிகளுக்கு அவர்களின் வேதமான அல்குர்ஆன் ஊக்குவிப்பும் ஆர்வமூட்டலும் வழங்குகிறது.
“எவர் ஒருவர் ஒரு ஆத்மாவை வாழவைக்கின்றாரோ அவர் மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் ஆவார்” (அல்குர்ஆன் 5:32) எனும் அல்குர்ஆன் வசனம் மனித நலன் காக்கும் பணிகளில் உழைப்பது எத்தகைய பாரிய பணி என்பதை தெளிவாக உணர்த்துகின்றது.
ஊடகப்பிரிவு,
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி,
மாவனல்லைக் கிளை.