Breaking
Mon. Dec 23rd, 2024

சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்வதன் மூலமே தமிழர்களும் முஸ்லிம்களும் நிரந்தரமாக ஒற்றுமையாக வாழும் சூழலை உறுதிப்படுத்த முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சஜித்தை ஆதரித்து ஓட்டமாவடியில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தலைமையில் இடம்பெற்றபிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், தயாகமகே, இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, முன்னாள் ஆளுநர்களான ஆசாத் சாலி, ரோஹித்த போகொல்லாகம, மற்றும் முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் உட்பட பலர் உரையாற்றினர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியதாவது,
அரசியல் விரிசல்களுக்கு அப்பால் கட்சியின் நலனைக்காட்டிலும் சமூகத்தினதும், நாட்டினதும் நன்மை கருதி சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க ஒரே குடையின் கீழ் அணி திரண்டுள்ளோம். இந்த நாட்டை மீண்டும் இனவாதத் தீ கருக்கி விடக் கூடாது என்பதற்காகவும் பரம்பரை ஆட்சியொன்று மீண்டும் உருவாக இடமளிக்கக் கூடாது என்பதற்காகவுமே இத்தனை பிரயத்தனங்கள் எடுத்துள்ளோம்.

கடந்த காலங்களில் நாம் பட்ட துன்பங்கள் மீண்டும் ஏற்படக் கூடாது. பேரினவாதிகள் அப்பாவித் தமிழர்களையும், அப்பாவி முஸ்லிம்களையும் கொடுமைப்படுத்திய யுகத்தை உருவாக்க நீங்கள் எவருமே துணை போகக் கூடாது. நாம் இழப்பதற்கு எதுவுமே இல்லை. கடந்த காலம் நமக்கு ஒரு படிப்பினையாக அமைந்து விட்டது. மதவாதத்தையும், இனவாதத்தையும் கிளறி எங்களை அடக்கி ஒடுக்க முயன்ற சக்திகளுக்கு இந்த தேர்தலின் மூலம் சரியான கடிவாளம் போடப்பட வேண்டும். மீண்டும் ஆட்சிக்கு வரத்துடிக்கும் இனவாதக் கூட்டம் சிங்கள மக்களின் வாக்குகளை அதிகரிப்பதிலும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை குறைப்பதிலும் குறியாக நின்று பல்வேறு யுக்திகளை வகுத்துள்ளனர். இதற்காகவே இந்தப் பிரதேசங்களில் ஏஜண்டுகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கில் பிள்ளையான் கருணா கும்பல் வாக்காளர்களை அச்சமூட்டி வாக்குகளை பெறமுயற்சிக்கின்றது. கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முஸ்லிம் ஏஜண்டுகள் கோட்டாபற்றிய ஒரு வகையான பீதியைக் கிளப்பி வாக்குகளை பறிக்கப் பார்க்கின்றது. இவர்களின் அச்சுறுத்தல்களுக்கு நீங்கள் யாருமே பயப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் வாக்குகளை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கி அவரை வெற்றி பெறச் செய்யுங்கள் என தெரிவித்தார்.

Related Post