ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் சார்பில் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து எதிரணியின் பிரச்சாரக்குழு 140 பிரதான கூட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளது.
இந்தக் கூட்டங்களில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
அத்தோடு, கிராமிய மட்டங்களில் 12 ஆயிரம் சிறிய கூட்டங்களை நடத்துவதற்கும் எதிரணி உத்தேசித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் பிரதான கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.
எதிரணியின் பொது வேட்பாளரின் முதலாவது பிரசாரக் கூட்டம் கடந்த 30 ஆம் திகதி பொலனறுவையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஆளும் கட்சியின் வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது பிரசாரக் கூட்டம் வட மத்திய மாகாணத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது. அத்தோடு, சிறிய, மத்திய தர கூட்டங்கள் நாடு பூராவும் இடம்பெற்று வருகின்றன.