2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 08, 2014) இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
வேட்புமனுக்கள் இன்று காலை 08.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் செயலகம் பூர்த்தி செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவது முடிவுக்கு வந்தது. இதற்கிணங்க 19 வேட்பாளர்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
தேர்தலில் போட்டியிடவுள்ள 19 வேட்பாளர்களும் இன்றைய தினம் சுப நேரத்தில் தேர்தல்கள் செயலகத்திற்கு நேரில் வருகை தந்து தமது வேட்பு மனுக்களை கையளிக்கவுள்ளனர்.
இவர்களுள் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பிரதான போட்டியாளர்களாவர்.
வேட்புமனுக்கள் கையேற்பினை முன்னிட்டு இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகப் பிரதேசம் பாதுகாப்புப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அப்பகுதியெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் ராஜகிரிய பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வேட்புமனு கையளிக்கப்பட்டதை தொடர்ந்து அப் பிரதேசத்திலும் ஊர்வலங்களை நடாத்துவதற்கு பொலிஸ் திணைக்களம் முற்றாக தடை விதித்துள்ளதுடன் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாமெனவும் அரசியல் கட்சி ஆதரவாளர்களிடம் பொலிஸ் பேச்சாளர் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களும் கட்சிகளின் செயலாளர்களும் அனுமதிக்கப்பட்ட பிரதிநிதிகளும் மாத்திரமே தேர்தல்கள் செயலக வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர். பொது மக்கள் எவரும் தேர்தல்கள் செயலக வளாகப் பகுதிக்குள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கட்டுப்பணம் செலுத்தியிருப்பவர்களுள் 17 வேட்பாளர்கள் அங்கீகரிக்ப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பிலும் ஏனைய இருவர் சுயேட்சைகள் சார்பிலும் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
இவர்களுள் இரு முஸ்லிம் வேட்பாளர்களும், ஒரு தமிழ் வேட்பாளரும் அடங்குகின்றனர்.