பழுலுல்லாஹ் பர்ஹான்
மார்கழி பத்தாம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். இவ்வாண்டின் கருப்பொருளாக ‘மனித உரிமைகள்-365′ என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வருடத்தில் சகல நாட்களும் மனித உரிமைகள்தான். ஒரு நாட்டில் அனைவர்களுக்கும் சமமான உரிமைகளை அனுபவிக்கும் வாய்ப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும்.
மனித உரிமைகள் அரசாங்கங்கள் விரும்பியவாறு வழங்கும் கொடைகள் அல்ல. அரசாங்கங்கள் அவற்றை மறுக்கவோ ஒரு சிலர் விடயத்தில் பிரயோகித்து ஏனையோருக்கு மறுக்கவோ முடியாது. அவ்வாறு செய்தால் அதற்கு பொறுப்புக் கூறுதல் வேண்டும்.
‘மானிடக் குடும்பத்தினர் உள்ளார்ந்த கௌரவத்தையும், அவர்களின் சமமான, பிரிக்க முடியாத உரிமைகளையும் அறிந்து ஏற்பதே உலகில் சுதந்திரம், நீதி மற்றும் சமாதானத்தின் அடித்தளம் ஆகும்’ என சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் முன்னுரை எடுத்துக் கூறுகிறது.
இரண்டாம் உலகப் போரின் போது ஏறத்தாள 6 கோடிப் பேருக்கு மேல் உயிரிழந்தனர். இவர்களில் பல்வேறு சிறுபான்மைக் குழுக்களைச் சேர்ந்த 90 இலட்சம் பேர் வேண்டுமென்றே அழித்து ஒழிக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தோடு கொல்லப்பட்டவர்கள். இந்தப் போரின் பேரழிவுக்குப் பிறகுதான் எல்லா இடங்களிலுமுள்ள மனிதர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான சர்வதேச முயற்சி தோன்றியது.
ஒருவரது தேசம், வாழ்விடம், பால், தேசியம் அல்லது இன அடிப்படை, நிறம், மதம், மொழி அல்லது பிற தகுதிகள் எப்படியிருப்பினும், பிறக்கும் போது எல்லா மனித உயிர்களுக்கும் இயல்பாக உள்ள உரிமைகள்தான் மனித உரிமைகள். இவை எவ்வித வேறுபாடுகளுமின்றி அனைவருக்கும் பொதுவானவை.
அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் எனப்படுவது 1945ம் ஆண்டு ‘சான்பிரான்சிஸ்கோ’ நகரில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் மனித உரிமைகள் சாசனம் ஒன்றை இயற்றுவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. 1946ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில், மனித உரிமைகள் சாசனம் ஒன்றை எழுதத் தொடங்கினர்.
1948ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் திகதி, சர்வதேச மனித உரிமைகள் சாசனம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு 48 நாடுகள் உடன்பாடாக வாக்களித்தனர். 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தில் 30 உறுப்புரைகள் உள்ளடக்கப்பட்டன. இப்பிரகடனத்தில் கையொப்பம் இட்டு தத்தமது நாடுகளில் செயற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் தாபனம் உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொண்டது.
மனித உரிமைகள் பிரகடனத்தின் முதலாவது உறுப்புரை ‘அனைத்து மனிதர்களும் கௌரவம் மற்றும் உரிமைகளோடு சுதந்திரமாகவும், சமமாகவும் பிறக்கிறார்கள். அவர்களுக்கு பகுத்தறிவும் மனட்சாட்சியும் உள்ளன. ஒருவருக்கொருவர் அவர்கள் சகோதர மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்’ என கூறுகிறது.
மனித சமுதாயம் எவ்வளவு நாகரிகமான சமுகமாக வளர்ச்சியடைந்து வருகின்றதோ, அதே அளவுக்கு மனித உரிமைகளும் மீறப்பட்டு வருவதை நாம் அறிகிறோம். மனித உரிமைகளின் மீது வெறுப்பும் அவற்றை மதிக்காமையும் நாடுகளுக்கிடையே வித்தியாசமான மனப்பாங்கும் காணப்படுகிறது.
நாடுகளின் ஒத்துழைப்போடு மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களின் உலகலாவிய மரியாதையை மேம்படு;த்தவும், கடைப்பிடிக்கவும் வேண்டும்.
மனித உரிமைகள் பிரகடனத்தின் சாரம்சம் என்னவெனில் ‘எல்லா மக்களும், குழுக்களும் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் எனவும், சுயநிர்ணய உரிமை இருப்பதால் அவர்கள் தமது அரசியலில் அந்தஸ்தினை சுயமாக தீர்மானி;ப்பதுடன் தமது சமூக. பொருளாதார கலாசார அபிவிருத்தியினையும் சுயமாக முன்னெடு;க்கலாம்’. என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் பிரகடனத்தில் உள்ள விடயங்களை உறுப்பு நாடுகள் முழுமையாக பின்பற்றவில்லை என்பதால் 1966ம் ஆண்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச ஒப்பந்தம், மற்றும் சமூக, பொருளாதார, கலாசார உரிமைகள் மீதான சர்வதேச ஒப்பந்தம் ஆகிய இரண்டும் ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டு வரப்பட்டன.
குடியியல், அரசியல் உரிமைகள் தனியாளின் சுதந்திரத்தின், பாதுகாப்போடு தொடர்புடையது. சமூக பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகள் தனியாளின் வாழ்க்கைத் தரத்துடன் தொடர்புடையது. இவை இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது. இரண்டும் அங்கீகரிக்கப்படாமல் ஒருவரின் சுதந்திரத்தை பாதுகாக்க முடியாது.
மனித உரிமைகள் பிரகடனம் உருவாக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் உலகலாவிய ரீதியில் அடிப்படை உரிமைகள் எந்த அளவிற்கு பாதுகாக்கப்படுகிறது என்பது விமர்சனத்திற்குரியது.
குறிப்பாக ஏட்டளவில் உள்ள மனித உரிமைகள் பிரகடனம் நடைமுறையில் அடக்கப்படும் சமுகத்திற்கு பகற் கனவாக அல்லது எட்டாக் கனியாகவே உள்ளதாக கண்காணிப்பாளர்கள் எடுத்துரைக்கின்றனர்.
எனினும் நாடுகளுக்கிடையிலான யுத்தம், உள்நாட்டு மோதல்கள், வர்த்தகப் போராட்டங்கள் போன்றவைகள் நிகழும் சந்தாப்பத்திலேயே அனேகமான மனித உரிமைகள் மீறப்படுகின்றன.
எனவே தனிப்பட்ட அளவில் நமக்கு நம் உரிமைகள் உரியவை. அதே போல பிறருடைய உரிமைகள் நாம் மதிக்க வேண்டும். இதற்கு சட்டங்களினால் மாத்திரம் பரிகாரம் காண முடியாது. அனைவரினது மனப்பாங்கிலும் மாற்றம் வந்தால் மாத்திமே உரிமைகளை பாதுகாக்க முடியும்.