பணத்திற்காக கட்சி தாவுவோரின் நடவடிக்கைகளினால் வெட்கித் தலை குணிய நேரிட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இன்றைய தினம் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டார்.
இது குறித்து இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சரத்பொன்சேகா கருத்து வெளிடியிட்டிருந்தார்.
பண ஆசை காரணமாக கட்சியின் சில உறுப்பினர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கட்சித் தலைவர்கள் என்ற ரீதியில் எம்மை வெட்கப்பட வகையில் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அதிகபடியான வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பாராளுமன்றிற்கு தெரிவான சரத் பொன்சேகாவிற்கு நீதிமன்ற தண்டனை விதிக்கப்பட்ட காரணமாக, ஜயந்த கெட்டகொட அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
2010ம்ஆண்டு பொதுத் தேர்தலில் ஜே.வி.பி கட்சி ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து போட்யிட்டிருந்தது.
விருப்பு வாக்கு அடிப்படையில் சரத் பொன்சேகாவிற்கு அடுத்த படியாக ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் லக்ஸ்மன் நிபுணாரச்சியே காணப்பட்டார்.
எனினும், கட்சிக் கொள்கைகளின் அடிப்படையில் ஜயந்த கெட்டகொடவிற்கு பாராளமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
இவ்வாறான ஓர் பின்னணியிலேயே ஜயந்த கெட்டகொட ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.