Breaking
Mon. Jan 13th, 2025

வன்னிச் சமூகம் கடந்த நான்கு தேர்தல்களிலும் தொடர்ச்சியாக பெற்றுத்தந்த அதிகாரங்களின் மூலம், நேர்மையாகவும் உண்மையாகவும் உச்சளவில் பணியாற்றியுள்ளோம் என்ற மனநிறைவு தமக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

 

மன்னார், கொண்டச்சி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் சஞ்சிகை வெளியீடு, மாணவர் கெளரவிப்பு, “ரிஷாட் பதியுதீன் பவுண்டேஷனினால்” தெரிவுசெய்யப்பட்ட 100 பல்கலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு மற்றும் 2019 உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பும் நேற்று மாலை (29) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, மேற்கண்டாவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

“காட்டிக்கொடுப்புக்கள், கழுத்தறுப்புக்கள் மற்றும் துரோகங்களுக்கு மத்தியிலே, துன்பங்களையும் துயரங்களையும் பொருட்படுத்தாது, பல்வேறு தடைகளைத் தாண்டி வன்னி மக்களின் மீள்குடியேற்றத்துக்காக இதயசுத்தியுடன் பாடுபட்டிருக்கின்றோம். அடுத்தவரின் விருப்புவெறுப்புகளுக்கு அப்பால், இறைவனுக்கு மட்டுமே பதில்சொல்ல வேண்டியவர்களாக, அவனுக்குப் பயந்தவர்களாக நாம் கருமமாற்றியிருக்கின்றோம்.

வடக்கு மீள்குடியேற்றம் ஓர் இலகுவான பணியாக இருக்கவில்லை. அதுவும் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக கைவிடப்பட்டு, வனாந்தரமாகியிருந்த, மரங்களால் பின்னப்பட்டு நிலங்களே தெரியாது கிடந்த ஒரு பூமியில், குடியேற்றம் என்பது மிகவும் கேள்விக்குறியாகவே அப்போது இருந்தது. ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருந்த முசலிப் பிரதேச  கிராமங்களை பிரித்தெடுத்து, எல்லையிட்டு, காடுகளை வெட்டி, கண்ணிவெடிகளை அகற்றி மீள்குடியேற்றத்தைத் தொடங்கினோம். அதுவும் அந்தக் கடினமான பணியை பூச்சியத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டியிருந்தது. சுயாதீனமாகவோ, சுதந்திரமாகவோ, நிம்மதியாகவோ மீள்குடியேற்றத்தைச் செய்ய முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டிருந்தது. எதிர்ப்புக்களுக்கு மத்தியில், பல முனைகளிலுமிருந்து எழுந்த எறிகணைகளைச் சமாளித்துக்கொண்டு, தன்னந்தனியான அரசியல்வாதியாகவே இந்தப் பணிகளை செய்திருக்கின்றேன்.

எதிர்வரும் தேர்தலை  ஒரு சாமானிய, சாதாரண  ஒன்றாக நீங்கள் கருதிவிட வேண்டாம். நமது சமூகத்துக்கு முன்னே பல்வேறு சவால்களும் பிரச்சினைகளும் குவிந்துகிடக்கின்றன. இதனை புத்திசாதுரியமாக வெற்றிகொள்ளக் கூடிய வகையில், இந்தத் தேர்தலை பயன்படுத்த வேண்டும். அதற்காக நம்மை தயார்படுத்தும் அவசியம் இருக்கின்றது.

இந்த அரசியலில் கோழைச்  சமூகமாக நாம் பயணிப்பதா? அல்லது நமக்கு வருகின்ற, வரவிருக்கின்ற ஆபத்துக்களை சாதுரியமாக முறியடிக்கும் அரசியல் பலத்தை நமக்குள் உருவாக்கிக்கொண்டு, தொடர்ச்சியாக தலைநிமிர்ந்து பயணிப்பதா? என்பதை சிந்திக்கத் தலைப்பட்டுள்ளீர்கள்.

நாங்கள் ‘இரண்டாந்தரப் பிரஜைகள்’ என்று, எவரும் கைகாட்டிக் கூறுமளவுக்கு நாம் பலவீனப்பட்டுவிட முடியாது. அவ்வாறான நிலையை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள வேண்டும். இறைவனும் நம்மைப் பாதுகாக்க வேண்டும். இந்த நாட்டிலே நமக்கும் சமத்துவமான உரிமைகள் இருக்கின்றன என்பதும், மற்றைய இனங்கள் அனுபவிக்கும் அத்தனையும் நமக்கும் இருக்க வேண்டும் என்பதும், நமது ஒற்றுமையின் மூலமே வெளிப்படுத்தப்பட வேண்டும். சரணாகதி அரசியல் செய்யப் போகின்றோமா? அல்லது அரசியல் பலத்துடன் கூடிய, சாதுரிய அரசியல் மேற்கொள்ளப்போகின்றோமா? என்பதே நமக்கு முன்னுள்ள கேள்வியாகும்.

இந்த 100 நாட்களில் நமக்கு கசப்பான அனுபவங்கள் பல கிடைத்துள்ளன. தொடரவிருக்கும் ஆபத்துக்கள் என நாம் அஞ்சுகின்ற விடயங்களுக்கு இப்போதே அடித்தளங்கள் போடப்பட்டுள்ளன. இருப்பதையும் பறிகொடுத்துவிட்டு வெறுமையான சமூகமாக நாம் வாழ, நமது செயற்பாடுகள் காரணமாக இருக்கவே கூடாது. பிரதேசவாதம், ஊர்வாதம் விதைக்கப்பட்டு, நமது ஒற்றுமை சிதறடிக்கப்படும் ஆபத்தும் இன்று ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்து, விழிப்புடன் செயலாற்றுவதோடு, எதிர்கால சந்ததியினரின் நன்மையைக் கருத்திற்கொண்டு செயற்படுவோம்” என்றார்.

Related Post