நாம் கடந்த காலங்களில் மேற்கொண்ட அபிவிருத்தித் திட்டங்களையும் நல்வாழ்வுப் பணிகளையும் மறைத்துவிட முடியுமென சிலர் சூழ்ச்சி செய்தாலும் மக்கள் மனங்களிலிருந்து, அவற்றை ஒருபோதும் அழித்துவிட முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அபிவிருத்திச் செயற்பாடுகளின் அங்குரார்ப்பண வைபவம் மற்றும் திறப்புவிழாக்களை தடுப்பதன் மூலம், மக்களிடமிருந்து எம்மை அந்நியப்படுத்த முடியுமென இன்று, நேற்று முளைத்த அரசியல்வாதிகள் கனவு காண்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எருக்கலம்பிட்டி மகளிர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று (01) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ரிஷாட் பதியுதீன் எம்.பி தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
“பாடசாலைகளின் வளர்ச்சியிலும் உயர்ச்சியிலும், பெற்றோர்களினதும் நலன்விரும்பிகளினதும் பங்களிப்பு இன்றியமையாதது.
இந்தப் பாடசாலைக்கு நாம் வழங்கிய நிதியுதவியின் மூலம், பல்வேறு அபிவிருத்திப்பணிகள் செயற்படுத்தப்பட்டன. அதேபோன்று, நாம் அமைத்துக்கொடுத்த இந்த பாடசாலை முகப்பை திறந்துவைப்பதில் முட்டுக்கட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள போதும், நாம் அவற்றை பொருட்படுத்தவில்லை. அதனை திறந்துவைப்பதன் மூலம், பாடசாலை நிருவாகத்துக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, அதனை தவிர்த்துக்கொண்டோம்.
எருக்கலம்பிட்டி கிராமத்துக்கு எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் பற்றி எல்லோருக்கும் தெரியும். எமது அரசியல் பயணத்தின் மூலம், மக்களுக்குக் கிடைக்கப்பெற்ற அபிவிருத்திகளே அவை. அதேபோன்று, மாணவர்களின் கல்விக்கும் மக்களின் வாழ்வாதார முயற்சிகளுக்கும் ஊரின் அபிவிருத்திப் பணிகளுக்கும் நாம் கடந்த காலங்களில் உதவியிருப்பது, அரசியல் நோக்கம் கொண்டதல்ல. மனித உள்ளங்களை அறிகின்ற இறைவனுக்கு மாத்திரமே இது தெரியும். இறை திருப்தியே எமது அரசியல் பணிகளின் பிரதான இலக்கு.
அரசியலில் விரும்பியோ, வலுக்கட்டாயமாகவோ, திட்டமிட்டோ, நாம் குதித்தவர்கள் அல்லர். எல்லாவற்றையும் இழந்து, எதுவுமே இல்லாத நிலையிலேதான், இந்த அரசியலை ஒரு புனிதப்பணியாக ஏற்றுக்கொண்டு, அகதி மக்களின் விடிவுக்காக இதில் கால்பதித்தோம். எமக்குக் கிடைத்த பதவியை மிகவும் நேர்த்தியாகவும் நீதமாகவும் மேற்கொண்டிருக்கின்றோம் என்ற திருப்தி எமக்கு இருக்கின்றது” இவ்வாறு அவர் தெரிவித்தார்