Breaking
Wed. Jan 15th, 2025
புத்தளம் தொகுதியில் நாம் இழந்து நிற்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் தூய எண்ணத்திலேயே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய, நாம் புத்தளம் மாவட்டத்தின் அனைத்து கட்சிகளினதும் உயர்பீட உறுப்பினர்களை, அவர்களின் இல்லங்களுக்கும் அலுவலகங்களுக்கும் சென்று, சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம் எனவும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் கூட்டணியாக களமிறங்குவதையே மக்களும் எதிர்பார்க்கின்றனர் என்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற, கரம்பை வட்டார இளைஞர் அமைப்பினருடனான கலந்துரையாடலின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,
“நாம் மக்கள் மத்தியில் செல்கின்றபோது, மக்கள் எங்களிடம் அபிவிருத்திகளை கோரிய காலம் மாறி, மாவட்டப் பிரதிநிதித்துவத்தை வெல்வதற்காக, இணைந்து பயணிக்குமாறு எம்மை வலியுறுத்துகின்றனர். புத்தளத்தில் உள்ள அரசியல் தலைமைகளுக்கு, மக்களின் கோரிக்கையை ஏற்கவேண்டிய கடப்பாடு உள்ளது. அதேநேரம், இது விடாப்பிடியாக நிற்பதற்கும் பலம்பார்ப்பதற்குமான தேர்தல் அல்ல. மாறாக விட்டுக்கொடுத்து, பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்கான சூழல் தற்சமயம் உருவாகியுள்ளது .
கடந்த பொதுத்தேர்தலில், முதன்முதலாக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தோல்வியைத் தழுவி பின்னர் ஆய்வினை நடாத்தி, கூட்டமைப்பினால் மாத்திரம்தான் பிரதிநிதித்துவத்தை பெறமுடியும் என்ற கோட்பாட்டில், கட்சியின் கிளைகளை நிறுவி, மத்தியகுழுவை அமைத்து, பாராளுமன்ற தேர்தலுக்கான அடித்தளத்தையிட்டது. இன்று இரு கட்சிகளின் போராளிகளும் ஒன்றிணைந்துள்ளனர்” என்றார் கூறினார்.
இந்த நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான பயிஸர் மரைக்கார், ஆஷிக் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான தவ்பீக், தன்வீர், தஸ்மிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Post