Breaking
Wed. Jan 15th, 2025
COVID-19 (கொரோணா) வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளை பரிசோதிக்கும் நிலையமாக கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்ட, புணானை, மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தையும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையையும் பயன்படுத்துவதற்கு, அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிராக, நிந்தவூர் பிரதேச சபையில் ஏகமனதாக கண்டன பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த சபை கூட்டமும், 2020 / பிரதேச சபையின் 24 வது சபை அமர்வும்  இன்று காலை  (12) 10.20 மணியளவில், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் சபை கூட்ட மண்டபத்தில்  நடைபெற்றது.
தவிசாளர் எம் . ஏ . எம் . தாஹிர்  தலைமையில், ஏகமனதாக குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இங்கு உரையாற்றிய தவிசாளர் கூறியதாவது,
“30 வருட யுத்தம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களினால் அதிகளவு பாதிக்கப்பட்டு, வறுமைக்கோட்டின் கீழ் அதிகமான மக்கள் வாழும் பிரதேசமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. தற்போது உலகையே உலுக்கும் உயிர் கொல்லி தொற்று நோயாக “கொரோனா வைரஸ்” காணப்படுகிறது. வளர்ச்சி அடைந்த நாடுகளே இவ் வைரஸினை எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், பொருளாதார நிலையிலும், மருத்துவ வசதியிலும், வாழ்க்கைத் தரத்திலும் மிகவும் பின் தங்கிய நிலையில் காணப்படும் மட்டக்களப்பு பிரதேசத்தில் அதிலும் குறிப்பாக, மக்கள் சனத்தொகை அதிகமாக காணப்படும் புணானை போன்ற பிரதேசங்களில், மிகவும் அபாயகரமான கொரோனா வைரஸினால் பாதிகப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மக்களை தடுத்து வைத்து, பரிசோதிப்பது மிகவும் அபாயகரமான செயற்பாடாகும்.
உலக சுகாதார நிறுவனமான WHO இந்த கொரோனா வைரஸை ஆட்கொல்லி தோற்று நோயாக அறிவித்திருக்கும் நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நூற்றுக்கணக்கான நபர்களை, எவ்வித நவீன வசதிகளையும் கொண்டிராத மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு அழைத்து வந்து, அவர்களை 14 நாட்களுக்கு அங்கு தங்க வைத்து பரிசோதிப்பதற்கும், மேலதிக மருத்துவ வசதிகள் தேவைப்படுபவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவருவதுமான அரசின் இந்த திட்டமானது, மட்டக்களப்பு மாவட்டம் உட்பட முழு கிழக்கு மாகாணத்தையும் பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாகி, தனிமைப்படுத்தும் நிகழ்வாகவே எம்மால் பார்க்கப்படுகிறது.
எனவே, இச் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு, அரசு உடனடியாக இது தொடர்பில் மீள்பரிசீலனை செய்து இம் மாவட்ட, மாகாண மக்களின் உள அச்சத்தை நீக்கி, உயிர்கொல்லி கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இம் மக்கள் பாதுகாப்பாக வாழ, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, எமது நிந்தவூர் பிரதேச சபை சார்பாக வேண்டிக்கொள்கின்றோம்”  எனத் தெரிவித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Post