Breaking
Fri. Jan 24th, 2025

நமது சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்க முற்படுபவர்களுக்கு, நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தகுந்தபாடம் புகட்ட வேண்டுமென்றும்  சிறுபான்மை மக்கள் உரிமைகளோடும் நிம்மதியாகவும் வாழ, சிந்தித்து வாக்களிக்க வேண்டுமெனவும் முன்னாள் திருகோணமலை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.

கிண்ணியா, பொது நூலக மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை (14) இடம்பெற்ற, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் உட்பட கட்சியின் ஆதரவாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

அவர் தொடர்ந்தும் அங்கு கருத்துரைக்கையில்,

“கொரோணா என்கின்ற போர்வையில், மட்டக்களப்பு கெம்பஸை அபகரிக்க முற்படுகின்றனர். இது கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகளைப் பறித்தெடுக்கும் முயற்சியாகும். இன்னும் ஒரு சில மாதங்களில் மட்டக்களப்பு கெம்பஸ், இராணுவப் பயிற்சி முகாமாக மாற்றப்படவுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளின் மூலம், முஸ்லிம்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தப் போகின்றார்கள்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது, பெரும்பான்மை ஆசனங்களைப்  பெறமுடியாத நிலையில், முஸ்லிம் விவாக சட்டத்தைக் கொண்டு வந்து, பெரும்பான்மையின மக்கள் மத்தியில் துவேசங்களை விதைக்கப் பார்த்த அத்துரலிய ரத்ன தேரர் போன்றோர்களிடம், மீண்டும் அதிகாரத்தைக் கொடுத்தால், எமது இருப்பு நிச்சயம் கேள்விக்குறியாகிவிடும். ஆங்கிலேயர்களால் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் விவாக சட்டத்தை இவர்கள் குழப்ப முற்படுவதானது, சமூகத்தின் மீதான அடக்கு முறையையே எடுத்துக்காட்டுகின்றது.

எமது சமூகத்தின் பாதுகாப்பை நாமே உறுதி செய்ய வேண்டும்.  ஆகவே, எமது இருப்பைக் கேள்விக்குறியாக்க நினைப்பவர்களுக்கு, இம்முறை தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவதோடு, சிறுப்பான்மைச் சமூகம் உரிமைகளோடும் நிம்மதியாகவும் வாழ, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்றார்.

Related Post