Breaking
Wed. Jan 15th, 2025

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில், நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானார் என்று வெளிவந்துள்ள செய்தியில், எவ்வித உண்மையும் இல்லை என்று, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஓட்டமாவடி வர்த்தக நிலைய கடைத்தொகுதி ஒன்றில், வெளிப்பிரதேசத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டு, அவரை பொதுச் சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் பொலிசாரினால் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அவர் வைத்திய பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்.

குறித்த நபருக்கு எவ்வித நோய்த் தொற்றும் இல்லை என்று வைத்திய அறிக்கையின் பின்னர் அந் நபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா அச்சம் நிறைந்த இச் சூழ்நிலையில், குறித்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிகழ்வைப் பார்த்த சிலர், கொரோனா தொற்றுக்குள்ளானவரை அடையாளம் கண்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்கின்றனர் என்று தவறாகப் புரிந்துகொண்டதினால், மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, இவ்விடயம் தொடர்பில் வீண் அச்சம் கொள்ளாமல், அரசாங்கம் அறிவித்துள்ள பிரகாரம் குறித்த வைரஸை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி வேண்டிக் கொண்டார்.

Related Post