Breaking
Wed. Jan 8th, 2025

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து தான் என்றைக்கும் விலகப் போவதில்லை என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைய தளங்களினூடாக பொய்யான, பொறுப்பற்ற தகவல்கள் கட்சி தாவல்கள் தொடர்பில் பரப்பப்படுகின்றன. இதனால் மோசமான நிலைமையே ஏற்படும். தன்னைப் பற்றி தெரிவிக்கப்படும் செய்திகளை தூசளவேனும் தான் பொருட்படுத்த வில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாவது உறுதியாகியுள்ளதால் எதிர்த்தரப்பின் பைத்தியம் உக்கிரமடைந்துள்ளது. இதனால் இணையத்தளங்கள் ஊடாக பொய்ப் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. ‘பேஸ் புக்’ தகவல்களை மக்கள் நம்புவதில்லை. ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாவதை விரும்பாத சக்திகளே இவ்வாறு பொய்ப் பிரசாரம் செய்கின்றன.

மைத்திரிபால சிறிசேனவை விட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் தோற்கடிக்க வேண்டும். மேலைத்தேயத்துக்கு தலைசாய்க்காது அணிசேரா கொள்கையுடன் ஐக்கிய நாடுகளில் தைரியமாக பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்த சக்திகளால் தோற்கடிக்க முடியாது.” என்றுள்ளார்.

Related Post