Breaking
Thu. Jan 16th, 2025
முஸ்லிம் சமூகத்திலுள்ள சிவில் செயற்பாட்டாளர் ஒருவரின் கருத்து?

க்கரைப்பற்று மண்ணின் மைந்தன் அஷ் ஷெய்க் எஸ். எல். எம். ஹனீபா மதனி மூத்த உலமாக்களில் ஒருவராக, ஆசிரியராக, மதீனா சர்வதேச பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாக, வர்த்தகராக, பதிவு செய்யப்பட்ட அரச ஒப்பந்தக்காரராக, சமூக சேவையாளராக பல்வேறு பரிமாணங்களை அடைந்து அதனால் அல்லாஹ்வின் உதவியினால் அம்பாறை மாவட்ட பள்ளிவாயல்களின் சம்மேளனத் தலைவராக 2005ல் தெரிவு செய்யப்பட்டு சிவில் சமூக செயற்பாட்டாளராக அடையாளப்படுத்தப்பட்டார்.

இத்தகைய இவரது பின்புலம், அறிவு, அனுபவம் என்பன இவர் மீது மக்களுக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியமையால் 2006 − 2008 காலப்பகுதியில் “மூதூர் பிரகடனம்” என்ற ஒன்றை முஸ்லிம் சமூகத்துக்காக அர்ப்பணிப்போடும், மிக தைரியத்தோடும் தலமை தாங்கி மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டார்.

இப்பிரகடன நிகழ்வு தேசியத்திலும், சர்வதேசத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் அன்றைய பேசுபொருளாகவும் மாறியது.
லண்டன் BBC வானொலி இலங்கையில் ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் துயரங்கள் பற்றி அஷ் ஷெய்க் எஸ். எல். எம். ஹனீபா மதனியிடம் நேர்காணல் ஒன்றை உடனடியாக ஏற்படுத்தியது. இவ் அரிய வாய்ப்பை அவர் மிக சாணக்கியமாகவும் துணிவாகவும் சமூகத்துக்காகப் பயன்படுத்தினார். இக்கால கட்டத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தராக செயற்பட்ட MWRAF (றெப்f) அமைப்பின் தலைவி தேசபந்து ஜெஸீமா இஸ்மாயிலின் அறிமுகமும் இவருக்கு கிட்டியது. இதனால் அம்பாறை மாவட்ட பள்ளிவாயல் சம்மேளனம், ஜம்இய்யத்துல் உலமா போன்ற சமய நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு மேற்படி MWRAF (றெப்f) சம்மேளனத்துடன் இணைந்து பின்வரும் நிகழ்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்தது.

1. பள்ளிவாயல்களில் கடமை புரியும் இமாம்களை வலுப்படுத்துதல்.2. அறபுக்கல்லூரிகளில் உஸ்தாதுமார்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்துதல்.

3. ஜும்ஆ குத்பாக்களை நெறிப்படுத்தி ஒழுங்குபடுத்துதல்.

4. மஸ்ஜித்களின் தர்மகர்த்தாக்களை (ட்றஸ்டிகளை) மசூதிகளின் திறன் மிக்க நிருவாகத்திற்காக தயார்படுத்துதல்.

இது தொடர்பான கருத்தரங்குகள் கல்முனை மஹ்மூத் பாலிகா மகளிர் மகா வித்தியாலயத்திலும், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும், காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்திலும், பதுளை YMMA கூட்ட மண்டபத்திலும் , கொழும்பு சாஹிரா கல்லூரியிலும் முறையே அஷ் ஷெய்க் ஹனீபா மதனி அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக நடந்தேறியமை மறக்க முடியாத வரலாறாகும்.மேற்படி நிகழ்ச்சித் திட்டங்களின் வளவாளர்களுள் ஒருவராக நான் செயற்பட்டமையினால் ஹனீபா மதனியின் தலைமைத்துவப் பண்பு, ஆளுமை, முகாமைத்துவம் போன்ற குணாம்சங்களை அனுபவ ரீதியாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. தான் பொறுப்பேற்ற சமூக, சமய செயற்பாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்யும் வரை அவர் ஓயவேமாட்டார், தூங்கவுமாட்டார். தொலைபேசி அழைப்புக்களை எடுத்து அக்காரியம் தொடர்பான முன்னேற்றம், மதிப்பீடு, கணிப்பீடு என்பவற்றை வினவிக் கொண்டே இருப்பார். அது எனக்கு சிலவேளை தொந்தரவாக இருந்தாலும் அதன் முடிவும், விளைவும் திருப்தியாகவே எனக்கும் ஏனைய வளவாளர்களுக்கும் அமைந்ததுண்டு.

அம்பாறை மாவட்ட பள்ளிவாயல் சம்மேளனத்தில் அவரது தலைமைப் பதவி முடிவுக்கு வந்து அவரின் பின் அதனைப் பொறுப்பேற்றவர்கள் சாதித்ததை விட சவால்களுக்குப் பயந்து ஒதுங்கியமையே அதிகம்.

இதனால் காலக்கிரமத்தில் சம்மேளனம் வீரியம் இழந்து முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாவட்டத்திற்கு காலங்கருதி செய்யப்பட வேண்டிய பல சமூக நற்பணிகள் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டன. அம்பாறை மாவட்ட பள்ளிவாயல் சம்மேளனம் உயிரோட்டத்துடன் இருந்திருப்பின் இன்று விஷ்வரூபமாக கொழுந்துவிட்டு எரிகின்ற சாய்ந்தமருது மக்களின் நகரசபை வேண்டுகோள் எப்போதோ மிக இலகுவாகவும் சுமூகமாகவும் பேசி சமூகத்திற்கு நன்மையானதாக தீர்க்கப்பட்டிருக்கும். இத்தியாதிய சந்தர்ப்பங்களே ஹனீபா மதனி அவர்கள் போன்ற ஒருவரின் சமூக, சமயத் தலைமைத்துவத்தின் தேவையை வெகுவாக உணர்த்தி நிற்கின்றன.

என்னைப் பொறுத்த வரையில் இவ்வாறான ஆளுமையும், சமூகப் பணியில் நீண்ட அனுபவமும், சாணக்கியமும் நிறைந்த ஹனீபா மதனி அவர்களை அவர் சார்ந்திருந்த முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் தேசியப்பட்டியலூடாகவே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்திருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அந்த நல்ல காரியம் பற்றி அத்தலைமைகள் கவனம் கொண்டிருக்காததே நம் எல்லோருக்கும் கவலை தரும் விடயமாகும்.

இன்ஷா அல்னாஹ் ஹனீபா மதனி அவர்கள் பாராளுமன்ற பிரதிநிதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் எத்தகைய சவால்களையும் முகங்கொண்டு தன் சமூகத்துக்காக அதிகம் சாதித்துக்காட்டுவார் என்பதே எனது ஆழமான நம்பிக்கையாகும்.

அல்லாஹ்வே எதற்கும் போதுமானவன். அவரது வெற்றிக்கு எமது வாழ்த்துக்கள்.

இவ்வண்ணம்,

ஆலோசகர் MWRAF (றெப்f),
அஷ் ஷெய்க் F.M.S.A அன்சார் மெளலானா (நளீமி) M.A. விரிவுரையாளர்,
மருதமுனை

Related Post