Breaking
Thu. Jan 16th, 2025
சிறுபான்மை சமூகத்துக்காக குரல் கொடுக்கக்கூடிய, நில அளவை, காணி அபகரிப்பு போன்ற எமது உரிமைகளுக்காக போராடக்கூடிய ஒரு பிரதிநிதியை, இந்த மண்ணுக்கு தெரிவுசெய்ய வேண்டுமென முன்னாள் பிரதி அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஃறூப் தெரிவித்தார்.
தோப்பூர் – ஆஸாத் நகர் பகுதியில், நேற்று (20)மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர்  இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“இன ஒற்றுமையை வலியுறுத்தக்கூடியதும் தமிழ், முஸ்லிம்கள் என்ற பாகுபாடின்றி சேவையாற்றக்கூடியதுமான ஒரு பிரதிநிதியை, இம்முறை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். ஓடி ஒழிகின்றவர்களை அனுப்பி பிரயோசனம் கிடையாது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நீதியானவர், குற்றமற்றவர் என்று நிரூபணம் செய்தும் கூட, பல மணி நேரம் விசாரணைகள் இடம்பெறுகிறது. அவரது குடும்பத்தையும் விசாரணைக்குட்படுத்துகிறார்கள்.  ஒட்டுமொத்த சமூகத்தையும் பழிவாங்க நினைக்கிறார்கள்.
தொல்லைப்படுத்தும் இவர்களுக்கான பாடமாக, மாபெரும் வெற்றியை இம்முறை திருமலை மண் ஊடாக எடுத்துக்காட்ட வேண்டும். திருகோணமலையில் தமிழ், முஸ்லிம்களிலிருந்து ஒரு பயங்கரவாதியை கூட கைது செய்ய முடியாது. அவ்வ்வாறு ஒரு பயங்கரவாதியும் இங்கு இல்லை என சவால் விட்டவன் நான். இருந்த போதிலும், சஹ்ரான் எனும் பயங்கரவாதியுடன் தோப்பூர் ஹாஜா முகைதீனை அப்பட்டமாக வீண் பழி சுமத்தி, அண்மையில் கைது செய்துள்ளார்கள்.
இந்த நிலையில், ஞானசார தேரர், “வடக்கு, கிழக்கு உட்பட ஒன்பது மாகாணங்களிலும் வாழும் தமிழ்,  முஸ்லிம்களின் காணி, அவர்களுக்குச் சொந்தமில்லை” என்று கூறுகின்றார். இவ்வாறானவர்களுக்கு நாடாளுமன்றில் தகுந்த பதிலளிக்கக் கூடிய, எமது உரிமைகளை வென்றெடுக்கக் கூடியதுமான தலைமைகளை நாடாளுமன்றுக்கு அனுப்ப வேண்டும்.
விமல் வீரவன்ச, எஸ்.பி. திசாநாயக்க, கெஹெலிய, ரத்ன தேரர், ஞானசார தேரர், விஜேதாச போன்றோர் இனவாதத்தை கக்குகின்றனர். துவேச பேச்சுக்களை பேசி, எப்படியாவது இந்த மண்ணிலிருந்து சிறுபான்மை சமூகத்தை நீக்கவேண்டும் என்று பாடுபடுகின்றனர். கடைசியாக முஸ்லிம் பிரதிநிதிகளின் வெட்டுப்புள்ளி முறைமை, 12 வீதமாக உயர்த்தப்பட வேண்டுமென்று விஜேதாச ராஜபக்ஷ ஒரு பிரேரணையையும் கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனவே, எமது உரிமைகளை விட்டுக்கொடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது. ‘தொல்பொருள் ஆராய்ச்சி’ என்ற போர்வையில், சிறுபான்மை சமூகத்தை அடக்கி ஒடுக்க நினைக்கும் இவர்களின் எண்ணங்கள் வெற்றியளிக்காத வகையில், நாம் சிந்தித்து செயலாற்றுவோம்” என்றார்.

Related Post