Breaking
Thu. Jan 16th, 2025

பயங்கரவாத நடவடிக்கையுடன் முஸ்லிம்களை வேண்டுமென்றே முடிச்சுப்போட்டு, தமது அரசியல் இருப்பை தக்கவைப்பதும் அதிகாரங்களை நிலைப்படுத்துவதுமே ஆளும் அரசியல்வாதிகள் சிலரின் திட்டமெனவும், பயங்கரவாதம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் இந்த குரோத சக்திகளிடம் அறவே இருந்ததில்லை எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் ஜவாத் அவர்களை ஆதரித்து, நேற்று மாலை (22) கல்முனையில் இடம்பெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“நமது சமூகத்தினர் எந்தவொரு காலத்திலும் பயங்கரவாதத்துக்கும், தீவிரவாதத்துக்கும் துணைபோனவர்கள் அல்லர். கடந்தகாலங்களிலும் எம்மை அடித்தார்கள். கொடுமைப்படுத்தினார்கள். அபகரிக்க வேண்டியதை அபகரித்தார்கள். நெருக்குவாரங்களை தந்தார்கள். தொழுகையில் சுஜூதில் சுட்டுக்கொன்றார்கள். இவ்வாறான நிலையிலும், எந்த சந்தர்ப்பத்திலும் நாம் ஆயுதம் தூக்கவில்லை. அரசுக்கு எதிராக இயங்கவில்லை. ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதுமில்லை.

சஹ்ரான் என்ற கயவனின் படுபயங்கரமான தாக்குதலால் நமது சமூகம் தலைகுனிந்தது. அந்த நிமிடத்திலிருந்தே பேதமைகள் அனைத்தையும் மறந்து, ஒன்றுபட்டு பயங்கரவாதத்தை ஒழிக்க உதவினோம். நமது ஒத்துழைப்பால் சஹ்ரானின் கூட்டம் அழிந்தது. அவர்களின் வலையமைப்பு சிதைந்துபோனது. முன்னாள் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்கவின், நமது சமூகத்தைப் பற்றிய பாராட்டு இதற்குப் பிரதான சான்றாகும்.

தற்போதைய அரசானது பதவிக்கு வந்த பின்னரும் அமைச்சர்கள் சிலர், இன்னும் எமது சமூகத்தைப் பற்றி இழிவாகவே பேசுகின்றனர். அத்தகையவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது, அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் கூப்பாடு போட்டனர். குறிப்பாக நான் உட்பட சில அரசியல்வாதிகளுடன், சஹ்ரானை தொடர்புபடுத்தி குற்றஞ்சாட்டினர். எந்தக் குற்றமும் செய்யாத எங்களின் மீது சேறுபூசினர்.

தடுப்புக்காவலிலுள்ள எனது சகோதரர் மீது இப்போது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தத் தொடங்கியுள்ளனர். சஹ்ரானின் நடவடிக்கைகளுக்கு அவர் வாகனம் வழங்கியதாகவும், பணம் கொடுத்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த பேச்சாளர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட மறுதினம், நான் எனது சகோதரரை பார்வையிட சென்றிருந்தேன். “அப்பட்டமான பொய்களை என் மீது சுமத்துகின்றனர். சஹ்ரானை வாழ்நாளில் நான் கண்டதே இல்லை” என்று என்னிடம் சகோதரர் கூறினார். இதுபற்றி ஊடகவியலாளர்கள் என்னிடம் கேள்வியெழுப்பினர். “எனது சகோதரர் உதவிகள் செய்திருந்தால் ஆதாரங்களுடன் நிரூபிக்கட்டும். அதுவும், நீதிமன்றத்தில் அதனை தெரிவிப்பதே தர்மம் ஆகும்” என்று பதிலளித்தேன்.

சிங்கள மக்களின் வாக்குகளை அரசுக்கு பெற்றுக்கொடுக்கும் மோசமான அரசியல் வியாபாரம் தற்போது இடம்பெறுகின்றது. ஊடகப் பேச்சாளரும் இந்த மோசமான கலாசாரத்துக்குள் தள்ளப்பட்டுவிட்டார்.

இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் மோசமாக தூசிப்பதையே தமது முழு மூச்சாகவும், தமது முழுநேர தொழிலாகவும் கொண்டிருக்கும் தேரர் ஒருவர், அண்மையில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியம் படுபயங்கரமானது. இஸ்லாமிய மார்க்கப் பணிகளில் உழைக்கும் ஆன்மீக இயக்கங்களையும், சமூகப் பணிகளில் ஈடுபடும் தலைவர்களையும் மிகக் கீழ்த்தரமான முறையில் அவர் நிந்தித்திருக்கின்றார். சட்டரீதியற்ற பொலிஸ்காரனாக தன்னை அடையாளப்படுத்தும் இந்த தேரரின் கருத்துக்கள், பெரும்பான்மையின சமூகங்களின் மனங்களில் நம்மைப்பற்றிய நச்சுக் கருத்துக்களையே விதைக்கும். இதன்மூலம் இரண்டு இனங்களையும் மோதவிடும் சூழ்ச்சியே அவரின் பிரதான இலக்கு.

எனவேதான், ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுபற்றிய ஒரு வேண்டுதலை சமர்ப்பித்தேன். “குறித்த தேரர் சுட்டுவிரல் நீட்டும் இயக்கங்கள் அனைத்தையும் விசாரணைக்கு அழையுங்கள். அவர்களின் கருத்துக்களைக் கேளுங்கள். அதனை ஊடகங்கள் வாயிலாக பிரசித்தப்படுத்துங்கள்” என்று பிரஸ்தாபித்தேன்.

இவ்வாறான நயவஞ்சகத்தனமான நச்சுக்கருத்துக்கள் எதிர்காலத்தில் ஆவணப்படுத்தப்பட்டால், நமது சமூகத்தைப் பற்றிய பிழையான புரிதலுக்கும், சமூகத்தின் மீதான நிரந்தர கறைகளுக்கும் இது வழிவகுக்குமென அஞ்சியதனாலேயே இவ்வாறு கூறினேன்.

திகாமடுல்ல மாவட்ட மண்ணுக்கு தற்போதைய சூழலில், எத்தகையவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக வரவேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ‘பாரம்பரியமாகவும், காலாகாலமாக பழக்கப்பட்ட கட்சிகளுக்கும் கடந்தகாலங்களில் வாக்களித்துவிட்டோம்’ என்பதற்காக, தொடர்ந்தும் அவற்றுக்கு வாக்குகளை வழங்க வேண்டும் என்ற நியதியில்லை. இந்த நெருக்கடியான சூழலில் சவால்களுக்கு முகங்கொடுத்து, சமுதாய நலனுக்கு தோள் கொடுப்பவர்களை நீங்கள் அடையாளங்கண்டு புள்ளடியிடுங்கள்.

கல்முனை மக்கள் மயில் கட்சிக்கு இம்முறை அந்த சந்தர்ப்பத்தை தரவேண்டும். இந்த மாவட்டத்தில், நமது வெற்றியில் நீங்களும் பங்காளர்களாக மாறவேண்டும். கல்முனை மண்ணில் பிறந்த, இந்த மண்ணில் வாழ்கின்ற, உங்கள் இன்ப துன்பங்களில் பங்குகொள்கின்ற வேட்பாளர் ஜவாத்துக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். அவர் எமது கட்சியில் எந்தவொரு எதிர்பார்ப்புமின்றியே இணைந்துகொண்டவர். அவரிடம் அரிய பண்புகளைக் கண்டேன். அவரது துணிவையும் நேர்மையையும் நாம் மெச்சுகின்றோம்“ என்று கூறினார்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் செயலாளர் சுபைர்தீன், பொருளாளர் ஹுசைன் பைலா மற்றும் வேட்பாளர்களான ஜவாத், ஹனீபா மதனி, சட்டத்தரணி கபூர், தாஹிர், நௌபர் மௌலவி உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

Related Post