Breaking
Sat. Jan 18th, 2025

அம்பாறை மாவட்ட அரசியல் களம் மிகவும் சூடாக சென்று கொண்டிருக்கின்றது. மரத்தின் கோட்டைக்குள் மயிலின் ஆட்டத்தை அவதானிக்க முடிகிறது. அம்பாறை மாவட்டத்தில் மயில் கட்சியினரின் அரசியல் செயற்பாடுகள் மிக தீவிரமாக காணப்படுகின்றன. இதற்கு பிரதான காரணம் மயிலுக்கு கிடைக்கக் கூடிய ஆசனத்தை / ஆசனங்களை நோக்கி சிறிய ஊர்களும் காய் நகர்த்தக் கூடிய சாதக நிலை உள்ளமையேயாகும். சிறிய ஊர் வேட்பாளர்களும் மிகத் தீவிரமாக வேலை செய்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

தற்போதைய கள நிலவரங்களின் படி மயிலில் வெற்றி பெற எதிர்பார்க்கப்படுபவரின் அதி கூடிய வாக்கு எண்ணிக்கை 15 000 அளவானதாக இருக்கும். சில வேளை 12 000 அளவானதாக கூட இருந்துவிடலாம் என சிலாகிக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. இதனை விட குறைவாகவும் இருந்துவிடலாம். இந்த எண்ணிக்கையை நோக்கி சிறிய ஊர்களும் காய் நகர்த்த முடியுமல்லவா? இதற்கு இன்னும் பல சாதகங்களும் உள்ளன. இதனை மு.காவுடன் ஒப்பிட்டு தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

இம் முறை மு.காவானது சஜித் தலைமையிலான ஐ.ம.சவில் போட்டியிடுவதால் 6 வேட்பாளர்களையே களமிறக்க முடிந்தது. இதனால் அதற்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள சிறிய ஊர்களுக்கு வாய்ப்பளிக்க முடியவில்லை. கடந்த தேர்தல்களில் அதுவுமில்லை, மூன்றே மூன்று வேட்பாளர்களையே களமிறக்கியிருந்தது. இம் முறை அ.இ.ம.காவது அம்பாறை மாவட்டத்தில் தனித்து கேட்பதால், அங்குள்ள மருதமுனை, இறக்காமம் போன்ற சிறிய ஊர்களுக்கும் வாய்ப்பளித்திருந்தது. பல்லிருப்பவன் தானே பங்கோடா திண்பது பற்றி சிந்திக்க வேண்டும். வாய்ப்பே அளிக்காமல் வெற்றி பற்றி கதைக்க முடியுமா? வாய்ப்பளித்த கட்சியினர் வெற்றி பற்றி சிந்திக்கின்றனர்.

இம் முறை மு.காவானது டெலிபோன் சின்னத்தில் களமிறங்கியுள்ளதால் மூன்று விருப்பு வாக்கையும் பயன்படுத்த நிர்ப்பந்தத்திலுள்ளது. அல்லாது போனால் அம்பாறையில் உள்ள ஐ.ம.சவில் சிங்கள வேட்பாளர் இலகுவாக வெற்றி பெற்றுவிடுவார். மு.காவின் வாக்கை 60 000 என கொண்டால், ( இதனை விட குறைவான வாக்கையே மு.கா பெற வாய்ப்புள்ளது ) அதில்180 000 விருப்பு வாக்குகளுள்ளன. இந்த எண்ணிக்கை அறுவர் இடையில் பிரிவதால் பெரும் எண்ணிக்கையான விருப்பு வாக்கு மு.காவினருக்கு கிடைக்கும் (அது சிங்கள வேட்பாளர்களை முந்த போதுமானதா என்பது சிந்திக்கத்தக்கது ). இந்த விருப்புவாக்குகள் வேட்பாளர்களுக்கிடையில் அனைவருக்கும் சமனாக பிரிகிறது என கொண்டால் ( வாய்ப்பில்லை ) ஒருவர் 30 000 வாக்கை எடுப்பார். இவ்விடத்தில் இந்தளவு சிந்தனை போதுமானது. இன்னும் ஆளமான சிந்தனைகள் தேவையில்லை.

இம் முறை மயில் தனித்து தேர்தல் கேட்பதால் விருப்பு வாக்கை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இம் முறை அதிகமான ஊர்கள், தங்களது ஊர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும் என வரிந்து கட்டிக்கொண்டு நிற்பதால் மயில் கட்சியில் விருப்பு வாக்கு பிரிவது மிகக் குறைவாக காணப்படும் என்றே எதிர்பார்க்க படுகிறது. இத் தேர்தலில் மயில் கட்சியின் வாக்கை 45 000 ( இதனை விட மயில் கட்சி அதிக வாக்கை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது ) என கொள்வோம். இதனை அனைத்து வேட்பாளர்களுக்குமிடையில் சமனாக பகிரும் போது ( 9 வேட்பாளர்களுக்கிடையில் ) 5000 வாக்கே வரும். இந்த எண்ணிக்கை விட இரு மடங்கு எண்ணிக்கையான வாக்கை யாராவது பெற்றால் கூட பத்தாயிரமேயாகும். நான் கூறுகின்ற இந்த விடயத்தை வைத்து சிந்தித்து பாருங்கள். சிறிய ஊரும் மயிலின் ஆசனத்தை சுவைக்க வாய்ப்புள்ளதல்லவா?

மரத்தில் களமிறங்கியுள்ளவர்களில் பொத்துவில் தவிசாளர் பாஸித் தவிர்ந்த ஏனையோர் மாவட்ட ரீதியான அரசியல் அதிகாரங்களை கொண்டிருந்தவர்கள். மாவட்ட ரீதியான அரசியல் அதிகாரத்தை வைத்து, மிக இலகுவாக மாவட்ட ரீதியான தனிப்பட்ட மக்கள் செல்வாக்கை நிலை நிறுத்த முடியும். இதனால் மரத்தில் வெற்றிவாகை சூட இருப்பவருக்கு பெருமளவான வெளியூர் வாக்குகளும் தேவை. பாசித் போன்ற மாவட்ட அதிகார பதவிகளை வகிக்காதவர்களால் வெளியூர் வாக்குகளை பெறுவது கடினம். இதனால் அவரின் தோல்வியை சாதாரணமாகவே ஊகிக்க முடியும். வெற்றியை நெருங்கவே இயலாது. இராஜாங்க அமைச்சராக இருந்த ஒருவருக்கு மாவட்ட ரீதியான செல்வாக்கை நிலை நிறுத்துவது மிக இலகுவானதல்லவா?

மயிலில் களமிறங்கியுள்ளதில் சம்மாந்துறை மாஹிர், கல்முனை ஜவாத் ஆகிய இருவர் மாத்திரமே மாகாண சபை உறுப்பினராக இருந்து மாவட்ட ரீதியான அதிகாரத்தில் இருந்தவர்கள். இவர்கள் இருவரும் மு.காவிலேயே குறித்த அதிகாரத்தை பெற்றிருந்தனர். இப்போது அவர்கள் மயில் கட்சியில் போட்டியிடுகின்றனர். இவர்களால் ஓடி, ஆடி மாவட்ட ரீதியாக குறித்த வாக்கை பெறக் கூடிய வாய்ப்பிருந்தாலும், முன்னர் போன்று பெருந்தொகை வாக்கை பெற முடியாது.

இம் முறை தே.காவுக்கு ஒரு ஆசனமேனும் கிடைக்க வாய்ப்பில்லை. ஒன்று கிடைக்கும் என ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், அது அதாவுல்லாஹ்வுக்கே கிடைக்கும். தே.காவில் பேட்டியிடும் வேட்பாளர்களுக்கு இடும் வாக்குகள் அதாவுல்லாஹ்வையே எம்.பியாக்கும். இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்பதால் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இவைகளை வைத்து நோக்கும் ஒருவர் அ.இ.ம.காவுக்கு கிடைக்கக் கூடிய ஆசனத்தை / ஆசனங்களை நோக்கி சிறிய ஊர்களும் காய் நகர்த்த முடியும் என்பதை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். இதனை அடிப்படையாக கொண்டே அ.இ.ம.காவின் தலைவர் றிஷாட் பதியுதீன் ஒரு ஊரின் வேட்பாளருக்கு, அவ் ஊரிலிருந்து 10 000 வாக்குகள் கிடைத்தாலே பா.உறுப்பினரை பெற முடியும் என கூறியிருந்தார். அவர் அரசியல் தந்திரி. அவருக்கு அரசியல் நன்கு தெரியும். அரசியல் தெரியாத சில அறிவிலிகள் தான் இதனை விமர்சித்து கொண்டிருக்கின்றனர்.

 

துறையூர் ஏ.கே. மிஸ்பாஹுல் ஹக்

Related Post