Breaking
Mon. Jan 13th, 2025

முசலிப் பிரதேசத்தின் பாலைக்குளி, கரடிக்குளி, சிலாவத்துறை, கொண்டச்சி, மறிச்சுக்கட்டி உள்ளிட்ட ஏனைய கிராம முக்கியஸ்தர்கள், சமூக நல இயக்கங்களின் பிரதிநிதிகள், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரான ரிஷாட் பதியுதீனை ஆதரித்து, நேற்று (03) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு… !

“20 வருட அகதி வாழ்க்கையின் பின்னர், வடக்கில் அமைதிச் சூழல் ஏற்பட்டதனால் மீளக்குடியேறும் ஆர்வத்திலும், எண்ணத்திலும் முசலிப் பிரதேசத்துக்கு நாங்கள் வந்த போது, இந்தப் பிரதேசம் இருந்த நிலைமை, அப்போது வந்த மனச்சாட்சியுள்ள ஒவ்வொருவருக்கும் நன்கு தெரியும்.

நாங்கள் வாழ்ந்த காணிகள் எல்லாம் காடுகள் மண்டிக்கிடந்தும், கட்டிடங்கள் மற்றும் பாடசாலைகள் தகர்ந்தும், இடிந்தும், உருக்குலைந்தும் கிடந்தன. முசலிப் பிரதேசத்திலுள்ள அத்தனை கிராமங்களும் ஒன்றுடனொன்று காடுகளால் பின்னப்பட்டு, அடையாளம் தெரியாமல் இருந்தன. மொத்தத்தில் இந்தப் பிரதேசம் இருளடைந்த பூமியாக, வெறிச்சோடிக் கிடந்தது.

எங்கே குடியேறுவது? எப்படிக் குடியேறுவது? எதிலிருந்து குடியேற்றத்தை ஆரம்பிப்பது? என்று எதுவுமே தெரியாது விழித்தவர்களாக நாமிருந்தோம். எங்கு பார்த்தாலும் போரின் அடையாளங்கள், அதன் எச்சசொச்சங்களான கண்ணிவெடிகள், நில வெடிகள் புதைக்கப்பட்ட சான்றுகள், மொத்தத்தில் நாம் வாழ்ந்த பிரதேசம் உயிர் அபாயத்தை எச்சரித்துக்கொண்டிருந்தது. எந்த நேரத்திலும் எதுவும் வெடிக்கலாம். இவ்வாறான கஷ்டங்களுக்கு மத்தியிலேதான் மீள்குடியேற்றத்தை தொடங்க வேண்டியிருந்தது.

சொந்த பூமியிலே மீளக்குடியேற வேண்டுமென்ற ஆசை மட்டுமே இருந்ததே தவிர அதற்கான கட்டுமானங்களோ, வாழ்க்கைக்கான எந்தவொரு அடிப்படை வசதிகளோ அப்போது இருக்கவில்லை. முன்னர் வாழ்ந்த இந்தப் பூமிக்கு மீளத்திரும்ப வேண்டுமென்று எங்களில் பலர் விரும்பியிருந்த போதும், அதற்கான சூழல் இருக்கவில்லை. இருபது வருடங்களுக்கு மேலாக, தென்னிலங்கை கிராமங்களுடன் பின்னிப்பிணைந்து, வாழ்ந்து பழக்கப்பட்ட வாழ்கையையும் உறவையும் விட்டு, ஒரேயடியாக இந்த மக்கள் எப்படி வருவது? என்ற நிலை.

அகதியாக வாழ்ந்த இடங்களில் விரும்பியோ விரும்பாமலோ வாழ்க்கைக்கு இடப்பட்ட அடித்தளங்கள், பிள்ளைகளின் கல்வி இதற்கு மத்தியிலேதான், சொந்த பூமிக்கு திரும்பி வாழ வேண்டுமென்ற ஆசையும் ஆதங்கமும் எங்களுக்கு ஏற்பட்டது.

எனினும், எஞ்சிய காலங்களில் எமது சொந்தக் கிராமங்களில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழமுடியுமா? என்ற ஏக்கமும் எங்களை வாட்டாமலில்லை. அதுமட்டுமின்றி, மீளக்குடியேற எத்தனிக்கும் பிரதேசங்களில் வாழ்வதற்கான முக்கிய தேவைகளான மின்சார வசதியில்லை, நீர் வசதியுமில்லை. வாழ்க்கைக்கு தேவையான எந்தவொரு அடிப்படை வசதிகளுமே இல்லாத, நம்பிக்கையற்ற சூழலில்தான் ஏதோவொரு உந்துதலில், பாரம்பரிய பூமியிலே வாழ்ந்தேயாக வேண்டுமென்ற ஒரே நோக்கில் குடியமர முன்வந்தோம்.

அந்த சந்தர்ப்பத்தில் எமக்கிருந்த அரசியல் பலம் “முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்” மாத்திரமே. மக்களை குடியேற்ற வேண்டுமென்ற அவரது நல்லெண்ணமும், ஆர்வமும் அகதி மக்களின் குடியேற்றத்துக்கு தூணாக அமைந்தது. அவருக்கிருந்த அதிகாரத்தின் மூலம் முடிந்த அத்தனையையும் செய்தார். வந்தவர்களுக்கு ஆரம்பத்தில் கொட்டில்களை அமைத்துக் கொடுத்தார். பின்னர் படிப்படியாக வீடுகள், பாடசாலைகள், கட்டிடங்கள் என்றெல்லாம் அவரது பணிகள் வியாபித்து நின்றன. மாடிக்கட்டிடங்களைக் கூட கட்டித்தந்தார். அப்போது இந்தப் பிரதேசத்தில் எங்குமே மின்சாரம் இருக்கவில்லை. நான்காம் கட்டை தொடக்கம் அரிப்பு வரையும், சிலாவத்துறை தொடக்கம் மறிச்சிக்கட்டி வரையும் உள்ளடங்கிய அத்தனை கிராமங்களிலும் ஓங்கி வளர்ந்திருந்த காடுகளையும், மண் புதர்களையும் துப்பரவாக்கியும், கட்டிட இடிபாடுகளை அகற்றியுமே, மக்கள் வாழக்கூடிய உகந்த சூழலை ஏற்படுத்தித் தந்தார். எங்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

அபிவிருத்திப் பணிகளை படிப்படியாகத் தொடங்கினார். வீடுகளைக் கட்டினார். இன்று பல்லாயிரக்கணக்கான வீடுகளாக அவை விரவி நிற்கின்றன. எவருமே நினைத்துப் பார்த்திராத வகையில், இறைவனை முன்னிறுத்தி, இந்தப் பணிகளைச் செய்ததனால் இறைவன் அவருக்கு உதவி வருகின்றான். அத்துடன், அவருக்கிருந்த அதிகாரமும் மற்றும் அரச உயர்மட்டத் தலைவர்கள், பல்வேறு நிறுவனங்களுடனான நெருக்கமான தொடர்புகளினாலும் இந்தக் கடினமான பணிகளையெல்லாம் எமக்குச் செய்தார்.

அதேபோன்று, அகதி மக்களாகிய நாங்கள், தென்னிலங்கையில் புத்தளம் உள்ளடங்கிய பல பிரதேசங்களில் கஷ்டப்பட்டதை உணர்ந்து, பல வழிகளிலும் எமக்கு உதவினார். புத்தளத்திலே வீடமைப்புத் திட்டங்களை உருவாக்கித் தந்தார். அந்தப் பிரதேசத்திலே ஆயிரக்கணக்கான வீடுகளைக் கட்டித்தந்தமை மாத்திரமின்றி, உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தித் தந்தவர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே..!

எங்கள் மாணவர்களின் கல்வித் தேவைக்காக அவர் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதவை. இது மாத்திரமின்றி, மக்களின் வாழ்வியல் தேவைக்காக அவர் தொடர்ந்தும் உதவி வருகின்றார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன, மத பேதமில்லாமல், இந்தப் பிரதேசத்தில், தன்னால் முடிந்த அத்தனையையும் செய்திருக்கின்றார். முஸ்லிம் பிரதேசங்களுக்கு மாத்திரமின்றி முசலிப் பிரதேசத்திலுள்ள தமிழ் கிராமங்களுக்கும், சிங்கள கம்மானவுக்கும் அவர் இயலுமான உதவிகளை மேற்கொண்டிருக்கின்றார். நாங்கள் எமது பூர்வீகக் காணிகளில் குடியேறிய போதும், இனவாதிகளும், கடும்போக்காளர்களும், அவர் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களும் ‘வில்பத்துவை அழித்து, எம்மைக் குடியேற்றியதாக’ பொய்களை பரப்பி வருகின்றனர். சமூகத்துக்காக பணியாற்றிய, பணியாற்றிக் கொண்டிருக்கின்ற அவரின் குரல்வளையை நசுக்குவதன் மூலம், இனவாதத்தை இன்னொருவகையில் வெளிக்காட்டுகின்றனர்.

யார் என்னதான் சொன்னாலும், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது நாங்கள் கொண்ட நம்பிக்கையும், அன்பும் குறையப் போவதில்லை. கடந்தகாலங்களில் தொடர்ந்தேர்ச்சியாக அவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பியது போல், இம்முறையும் அவரே எங்கள் பிரதிநிதி என்பதை வாக்குகளின் மூலம் நிரூபிப்போம்.”

Related Post