Breaking
Wed. Nov 20th, 2024
உங்கள் அனைவருக்கும் என் இனிய ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும்..!
சமூக சேவைகளில் கடந்த காலங்களில் ஈடுபட்டு வந்த நான், அரசியலுக்குள் நுழைந்து இம்முறை பாராளுமன்றத் தேர்தலில், திகாமடுல்ல மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில், 10 ஆம் இலக்கத்தில் போட்டியிடுகின்றேன்.

இவ்வேளை, இறைவன் எனக்கு சமூக சேவைகளில் ஏற்படுத்தித் தந்த பொன்னான சில சந்தர்ப்பங்களை நினைவு மீட்டிப் பார்க்கிறேன்.
விடுதலை புலிகளினால் மூதூர் மக்கள் அகதியாக்கப்பட்ட போது, கிழக்கிலங்கை அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத் தலைவராக கடமையாற்றிய நான், எமது சக உறுப்பினர்களின் ஒத்தாசையில் மக்களை ஒன்றுதிரட்டி, அவ்வண் செயலுக்கெதிராக குரல் கொடுத்ததையும்,
முஸ்லிம்களுக்கெதிரான பெரும்பான்மை தீவிர போக்குடையவர்கள், தங்களது வக்கிரங்களை கட்டவிழ்த்த போது, அகில இலங்கை ரீதியில் உலமாக்களை ஒன்றுதிரட்டி, குத்பா உரை சம்பந்தமாகவும், எவ்வகையான குத்பா பிரசங்கங்கள் எமது சமூகத்தை பெரும்பான்மையினரின் நன்மதிப்பை பெறும்வகையில் இட்டுச்செல்லும் (மார்க்கத்தின் வரையறைக்குள்) போன்ற விடையங்களில், மூத்த அறிஞர்களை வரவழைத்து, பயிற்சி அளிக்கும் பாக்கியத்தையும் எனக்கு வழங்கியதை நன்றியுடன் நினைவுகூருகிறேன்.
எனது அரசியல் வாழ்க்கையில், அக்கரைப்பற்று மக்கள் எனக்கு வழங்கிய மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவர் என்ற அதிகாரத்தினூடாக, என்னால் இயன்றளவில் சபைக்கும், சமூகத்துக்கும் ஆரோக்கியமான விடயங்களில் ஆதரவு வழங்கியும், எதிர்ப்பு மற்றும் ஆலோசனை வழங்க வேண்டிய சந்தர்ப்பங்களில், அதனையும் இயன்றளவில் செய்த திருப்தியுடன் அங்கத்துவ இறுதி நாள் வரை பங்காற்றினேன்.
கடந்த காலங்களில் நான் சேர்ந்திருந்த அரசியல் கட்சிகள் அரசோடு இருந்திருந்தாலும் சரி அல்லது எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த சந்தர்ப்பங்களிலும் சரி, எமது சமூகத்துக்கு எதிராக பலதரப்பட்டவர்களால் அநீதிகள் இழைக்கப்பட்ட அனைத்து வேளைகளிலும், தனக்கிருந்த அதிகார எல்லைக்குள் அனைத்து விதமான தெளிவுபடுத்தல்கள், மாற்றுக்கருத்துடையவர்களுக்கான தெளிவுபடுத்தல்கள், எதிர்ப்பறிக்கைகள், சட்ட முன்னெடுப்புக்கள் என என்னால் முடிந்தளவில், எனது பங்களிப்பை பலதரப்பட்ட எதிர்ப்புகளுக்கும் , அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் இன்று வரை செய்து வருகிறேன்.
மேற்சொன்ன பங்களிப்புக்களை செய்யும் சந்நதர்ப்பங்களில், தான் சார்ந்த கட்சித் தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள், என்னை சார்ந்தவர்கள், உறவினர்கள் என யார் அச்சப்பட்டாலும் அல்லது எதிர்ப்பு தெரிவித்தாலும், இறைவன் எனக்கு அளித்திருக்கும் தலைமைத்துவ பண்புகள், தன்னம்பிக்கை, தைரியம் போன்றவற்றின் துணைகொண்டு, இறைவனின் திருப்தியை முன்னிலைப்படுத்தி, இன்றுவரை பணிபுரிகிறேன்.
எனது அரசியல் வாழ்கையில் நிறைய வீண் பழிகளையும், தாக்குதல்களையும் எனக்கெதிராக எதிர்க்கட்சியினர் செய்திருந்த போதிலும், அனைத்து கட்டங்களிலும் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பொறுமையை தந்த இறைவனை புகழ்ந்தேனே தவிர, அவர்களை பழிவாங்க வேண்டும் என்று எவ்வித நடவடிக்கைகளிலும் இன்று வரை இறங்கியதில்லை.
இறுதியாக, இன்னாள் வரை எனக்குக் கிடைத்த அதிகார இயலுமைக்குட்பட்ட வகையில், செய்த வாழ்வாதார உதவிகள், தொழில் வாய்ப்பு சம்பந்தமான உதவிகள், சமூகத்துகெதிரான அநீதிகளுக்கான குரல்கள் போன்ற பங்களிப்பை, அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கு, உங்களது ஆதரவை இந்த தேர்தலில் வேண்டிநிற்கிறேன்.
ஆகவே, இம்மாவட்டத்தில் களம்காணும் வேட்பாளர்களில் பாராளுமன்றம் சென்று, எம் சமூகத்துக்கு சேவை செய்ய நான் தகுதியானவன் என்று நீங்கள் கருதினால், உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கு வழங்குமாறு தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்.
ஹனீபா மதனி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 
இலக்கம் 10
திகாமடுல்ல மாவட்டம்

Related Post