Breaking
Tue. Jan 14th, 2025

கொழும்பில் வர்த்தக சங்கமொன்றுக்கு தலைவராகுவதும், சிறந்த வர்த்தகருக்கான ஜனாதிபதி விருதை பெறுவதும் அவ்வளவு இலேசான விடையங்களல்ல. அரச நிறுவனங்களுடன் இருக்கும் வர்த்தக ரீதியான தொடர்பு சாதாரணமானது. தமது வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்குடன், அரசின் உச்ச அதிகாரங்களை அணுகுவார்கள். அவர்கள் அமைச்சர்களாகவும், அமைச்சின் செயலாளர்களாகவும், அதைவிட அதிகாரம் கூடியோராகவும் இருக்கலாம்.

தனியார் வர்த்தகத்தை மேம்படுத்துமுகமாக, நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட வகையில் அமைச்சர்கள், செயலாளர்கள் உதவுவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை. நாம் உதவி செய்வோர், எந்தக் நிமிடம் தற்கொலை குண்டுதாரியாக மாறுவார் என எவராலும் சாஸ்திரம் பார்க்க முடியாது.

ஸஹரான் தவிர்ந்த ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அத்தனைபேரும், அளுத்கம அட்டூழியத்தினாலும், அதன் பின்னரான இஸ்லாமோபோபியாவினாலும் பயங்கரவாதிகளாக மாறினார்களே தவிர, அதற்கு முன்னர் வர்த்தகர்களாகவும், ஏனைய தொழில் துறை சார்ந்தோராகவுமே இருந்துள்ளதாக, இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் ஊர்ஜிதம் செய்கின்றன.

ஈஸ்டர் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் அன்றைய நாள் வரை, ஒரு சிறந்த வர்த்தகராகவே அறியப்பட்டவர். அவரின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அன்றைய ஜனாதிபதியின் செயலாளர் உதவி செய்துள்ளார். இன்னும் பலர் உதவி செய்திருக்கலாம். தொலைபேசிகளில் உரையாடியிருக்கலாம். திருமண நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருக்கலாம். இவை எதுவுமே குற்றமல்ல.

வில்பத்துக் காட்டை அழிப்பதாக, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மீது இனவாதிகள் குற்றஞ்சாட்டி, கூக்குரலிட்டார்கள். “அப்படி எவரும் வில்பத்துக் காட்டை அழிக்கவில்லை” என்று வனபரிபாலன அதிகார சபை அறிவித்தது.

“அதில் ஊழல் செய்தார், இதில் ஊழல் செய்தார்” எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. இற்றைவரையில் ஒன்றையும் நிரூபிக்க முடியாமல் போய்விட்டது.

“முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், ஈஸ்தர் தாக்குதலுக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தவொரு தொடர்பும் இல்லை” என்று பாராளுமன்ற தெரிவுக்குழு அறிவித்தது.

யார் என்ன சொன்னாலும், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விடுவதாக இல்லை. அவரை கசக்கிப் பிழிந்து, இம்சிப்பதிலேயே இனவாத அரசியல் ஆர்வமாயிருக்கின்றது. ரிஷாட்டை விற்றே சிங்கள இனவாத வாக்குகளை வாங்கலாம் என்பது அவர்களின் வியூகம். வங்குரோத்து அரசியலில் அதி உச்சம் இது.

போதாக்குறைக்கு ‘இவையெல்லாம் ரிஷாட்டின் தனிப்பட்ட விடயம்’ என நம்மில் ஒரு கேவலமான கூட்டம் சொல்கிறது.

எது தனிப்பட்ட விடையம்?

அளுத்கமையில் அட்டூழியம் செய்து, தொடர் அநியாயம் செய்ய அனுமதித்த ஆட்சியை வீழ்த்துவதற்கு, மக்கள் ஆணையைப் பெற்றுக்கொடுத்தது தனிப்பட்ட விடயமா?

நாட்டின் அரசியலமைப்புக்கு மாற்றமாக நடைபெற்ற 52 நாள் ஆட்சியை அங்கீகரித்து, தமக்கும் தனது கட்சிக்கும் மக்கள் வழங்கிய ஆணையை துஷ்பிரயோகம் செய்யாமல், நாட்டின் அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டு, இனவாதிகளின் கோபத்தை சம்பாதித்தது தனிப்பட்ட விடயமா?

ரிஷாத் இம்சிக்கப்படுகின்றார் என்றால் அதன் அர்த்தம், முஸ்லிம் சமூகத்தின் வாக்குத் தேர்வு சவாலுக்குள்ளாகிறது என்பதே.

ஒரு செய்தியை தெளிவாக சொல்லுவோம். அதை ஒன்றுபட்டும் சொல்லுவோம்!

“ரிஷாட்டும் அடிபணியமாட்டார். நாமும் அடிபணியமாட்டோம்!
சரணாகதி அரசியலுக்கு சம்மதிக்கமாட்டோம்” என்று உரத்துச்சொல்லுவோம்

 

-வஃபா பாறுக்-

Related Post