திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் எச்.தாலிப் அலி ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில், இன்று (20) தம்பலகாமம் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்ற தவிசாளர் தெரிவின் போது, சக உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் ஏகமானதாக தாலிப் அலி தெரிவானார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உப தவிசாளர் ஏ.ஜீ.சம்பிக்க பண்டார முன்மொழிய, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் எம்.ஐ.றிகாஸ் வழிமொழிந்து, ஏகமானதாக தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட தாலிப் அலி, இதற்கு முன்னர் மூன்று முறை தவிசாளராக தம்பலகாமம் பிரதேச சபையில் கடமையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. முன்னர் தவிசாளராக எஸ்.எம்.சுபியான் கடமையாற்றியுள்ளதுடன், இரு வருடங்களின் பின் ஒப்பந்தத்தின் பிரகாரம் புதிய தவிசாளர் பதவிப் பிரமாணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக தவிசாளர் உட்பட 16 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சபையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் சபைக்கு சமூகமளிக்கவில்லை. குறித்த சபை அமர்வு நிகழ்வில், உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தென்னக்கோன், தம்பலகாமம் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.நிர்மலநாதன் உட்பட பலர் பங்கேற்றார்கள்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த புதிய தவிசாளர் எச். தாலிப் அலி,
“மூவின மக்களுக்குமான ஒருமித்த சேவையாக, எமது சேவைகள் தொடரும். சமூக அபிவிருத்தி, பிரதேச அபிவிருத்தி என மக்களுடைய விடயங்களுக்கு முன்னுரிமையளித்து செயற்படுவோம். இதற்காக ஏனைய சக உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என எதிர்பார்ப்பதுடன், என்னை தவிசாளராக ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டமைக்கு நன்றிகளையும் தெரிவிக்கிறேன்” என்றார்.