அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை, இந்தத் தேர்தல் காலத்தில் அடிக்கடி விசாரணைகளுக்கு அழைப்பது மற்றும் கைது செய்ய முனைவது போன்ற நெருக்குதல்களை ஆளுந்தரப்பிலிருந்து மேற்கொள்வதானது, பெரும் மனவேதனை அளிப்பதாக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் திருகோணமலை தொகுதி அமைப்பாளருமான ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (20) கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
“வடக்கு, கிழக்கில் அதிக ஆசனங்களை பெறுவதற்கு தொடர்ச்சியான முயற்சிகள் இடம்பெறும் போது, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய முற்படுகிறார்கள்.
“மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் குற்றமற்றவர்” என பொலிஸ் மா அதிபரினால், பாராளுமன்றத்துக்கு அறிக்கை முன்வைக்கப்பட்டிருந்த போதும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, வீண்பழி சுமத்தி, விசாரணைகள் என்ற போர்வையில், அவரை நெருக்குதலுக்குட்படுத்துகின்றனர். தேர்தல் காலங்களில் இடம்பெறும் இவ்வாறன பொருத்தமற்ற செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
‘தொல்பொருள் செயலணி’ என்ற குறித்த செயலணியில் தமிழ், முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த எவரும் நியமிக்கப்படாமை, சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தமிழ், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் குறித்த செயலணியில் உள்வங்கப்பட்டால், கிழக்கில் சுபீட்சமான எதிர்காலத்தை காணமுடியும். காணி அபகரிப்பு, சிறுபான்மை இனத்தின் இருப்புக்களை பாதுகாக்க புதிய வியூகங்களை நாம் கையாள வேண்டியுள்ளது. இவ்வாறானதொரு நிலையில், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், சிறுபான்மைச் சமூகத்தின் இருப்பு பெரும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது” என்றார்.