Breaking
Mon. Jan 13th, 2025

சமூகத்துக்கான தேவைகளை ஆட்சியாளர்களின் கால்களில் விழுந்து பெறும் நிலைமையை மாற்றி, எமது காலடிக்குக் கொண்டுவரும் சமூகப் பலத்தை அதிகரிக்க ஒன்றுபட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பொதுத்தேர்தல் வேட்பாளர் முஹம்மட் நஸீரை ஆதரித்து, நமுவாவ கிராமத்தில் நேற்று மாலை (22) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல், சமூக எதிரிகளுக்குப் பாடம்புகட்டும் சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. ஆட்சியாளர்கள் எங்களை நோக்கி விரல் நீட்டி இனவாதி என்கின்றனர். இல்லாத காரணங்களை இட்டுக்கட்டி என்னைக் கைது செய்யத் துடிக்கின்றனர். வவுனியாவில் சிங்கள சகோதரரை மாகாண சபைக்கு எமது கட்சியே அனுப்பியது. மன்னாரில் கிறிஸ்தவ உடன்பிறப்பை பிரதேச சபை தவிசாளராக்கியதும் எமது கட்சியே. முல்லைத்தீவில் தமிழ் சகோதரர் ஒருவரைத் தவிசாளராக்கி, சமூக ஒற்றுமையை உறுதிப்படுத்தியதும் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தான். இனவாத அரசு இவற்றையெல்லாம் மறைத்துத்தான் எங்கள் மீது இனவாத முத்திரை குத்தப்பார்க்கிறது.

சுமார் 90,000 முஸ்லிம் வாக்காளர்கள் உள்ள குருநாகல் மாவட்டத்தில், இரண்டு முஸ்லிம் எம்.பிக்களைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. இந்நிலையில் எமது சமூகத்துக்கு எதிரான இனவாத சக்திகளுக்கு ஆதரவு தேடவும் சிலர் முயற்சிக்கின்றனர். கட்சி அரசியல் செய்யும் தேர்தல் இதுவல்ல என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கட்சியோ, கொடியோ அல்லது நிறமோ இன்று எமக்கு முக்கியமில்லை. சிருபான்மை சமூகத்தின் இருப்புக்கான, வாழ்வுக்கான தேர்தலிது. எனவே, ஒரு வாக்குகளையேனும் நாம் தவறவிடாமல், தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிடும் நஸீர் மற்றும் ஐவஹர்ஷாவுக்கு அளிக்க வேண்டும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான நான் கூறுகிறேன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஐவஹர்ஷாவுக்கும் ஒரு வாக்கை அளியுங்கள். இனவாதிகளின் வெறியாட்டங்களில் நமது கிராமங்களைப் பாதுகாக்க, முன்னின்று தடுத்து நிறுத்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் அவசியம். எமது பள்ளிவாசல்களை உடைத்து, கடைகளை எரித்து, வீடுகளைத் தரைமட்டமாக்கிய காடைத்தனங்களுக்கு நாம் தக்க பதிலடி வழங்குவதற்கு, தற்போது காலம் கனிந்து வந்துள்ளதாகவே நான் கருதுகிறேன்” இவ்வாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

Related Post