கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்தான், எங்களுக்குள் ஒரு புல்லுருவி கோடாரிக் காம்பு இருந்தமை தெரியவந்தது என்றும் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு இவரே காரணம் எனவும் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியா, ரஹ்மானியா பகுதியில், கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“விகிதாசார தேர்தல் முறையின் கீழ், 1989 க்கு பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போதும், 51 வீதமான வாக்குகளை பெற்றாலும் கூட பெரும்பான்மை ஆசனத்தை பெற முடியாது. விகிதாசர முறை என்பது பொதுவாக ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா அம்மையார் 63 வீதமான வாக்குகளை பெற்று, நாடாளுமன்றத் தேர்தலில் கூட 101 ஆசனங்களை பெற்று பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், 52 வீதமான வாக்குகளை பெற்றும் 3/2 பெரும்பான்மை பெற முடியாது போனது. ஆகக் குறைந்தது 80 – 90 வரையான ஆசனங்களையே பெறமுடியும். இதனுடன் இணைந்து ரணில் விக்ரமசிங்க யானையை பூனையாக மாற்றி செயற்பட்டாலும் இவரால் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள முடியாது. சொற்ப ஆசனங்களைக் கூட ரணிலால் பெற முடியாது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் இற்றைக்கு சிறுபான்மைக் கட்சிகள் கைகோர்த்துள்ளன. மலையக மக்கள் முண்ணனி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இணைந்து, அதிகூடிய ஆசனங்களைப் பெறலாம். தமிழ் தேசிய கூட்டமைப்பு 15 க்கும் குறையாத ஆசனங்களை பெறுகின்ற போது, இது வாய்ப்பாக அமையலாம்
பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்தில் பௌத்த, இந்து, முஸ்லிம் கலாசார அமைச்சு என்பன உருவாக்கம் பெற்றது. இப்படியாக சஜித் பிரேமதாஸ அவர்களுக்கும் பௌத்த மதகுருமார்களிடத்தில் பெரும் வரவேற்பு, ஆதரவு உள்ளது. சிறுபான்மைக் கட்சிகளின் ஒன்றிணைவால், நாட்டிலுள்ள அனைத்து இன மக்களுடைய அபிலாஷைகளையும் வெல்லக்கூடிய ஒரு வாய்ப்பாகவும், சுபீட்சமிக்க நாடாக மாற்றவும், இந்தத் தேர்தல் எமக்கு கை கொடுக்கும்” என்றார்.