Breaking
Mon. Jan 13th, 2025

யாரினது கதைகளையும் கேட்டு அரசியல் செய்யும் நோக்கம் எனக்கு ஒரு போதும் கிடையாது என்று மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

சம்மான்கார குடும்ப தலைவர்களுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரான அமீர் அலிக்கும் இடையிலான சந்திப்பு, எம்.எம்.இர்ஸாத் தலைமையில் வாழைச்சேனையில் இடம்பெற்றது.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அவர் மேலும் கூறியதாவது,

“அமீர் அலி ஆட்களின் கதை கேட்கின்றார்” என்று தேர்தல்கள் வரும்போது ஒரு கதை வளம் வருவது வழமை. அது தவறானதாகும். நான் அரசியல்வாதி என்ற வகையில், என்னிடம் படித்தவர், பாமரர், ஏழை, பணக்காரன் என்று அனைவரும் வருவார்கள். அதில் சிலர் அவர்களுக்கு பிடிக்காதவர்களைப் பற்றி பல குற்றச்சாட்டுக்களை முன்வைப்பார்கள் அது வழமை.

ஆனால், அவ்வாறான குற்றச்சாட்டுக்களை நான் ஏற்றுக்கொள்வதில்லை. “அமீர் அலி ஏதும் கேட்டுப் போனால் ஏசுவார்” என்று சொல்வார்கள். அப்படிப்பட்டவர்களிடம் “நீங்கள் ஏதும் கேட்டுப் போய் ஏசினாரா?” என்று கேட்டால் “இல்லை, கேள்விப்பட்டேன்” என்று கூறுவார்கள். என்னைப் பற்றி விமர்சனம் செய்பவர்கள் இரண்டு வகைப்படும். ஒன்று என்னிடம் அதிகமான உதவிகளைப் பெற்றுக்கொண்டு, எனது எதிர்க்கட்சிகளிடம் அனுபவிப்பதற்காக சென்றவர்கள். இரண்டாவது சாரார், நான் அரசியலில் வந்ததிலிருந்து எனக்கு ஒருதரமேனும் வாக்கு அளிக்காதவர்களாக இருப்பார்கள். இவ்விரண்டு சாராரும் தான் எனக்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவர்கள்.

“எங்களுக்கு அமீர் அலி என்ன செய்தார்?” என்று சிலர் தேர்தல் காலம் வந்தால் கேட்பதும் ஒரு வழமை எமது பிரதேசத்தில் இருக்கின்றது. அவ்வாறு தெரிவிப்பவர்கள் கூட, எனது அரசியல் காலத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஏதாவது ஒரு உதவி, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள். அவ்வாறானவர்கள்தான் இப்படி விதண்டாவாதங்களை கதைத்துக்கொண்டு இருப்பவர்களாகும்.

எனது அரசியல் காலத்தில், எமது பிரதேசத்தில், புதிய ஆரம்பப் பாடசாலைகள் அரம்பிக்கப்பட்டதும், பிரதேசத்தில் வீதிகள் மற்றும் வடிகான்கள் போடப்பட்டதும், வீட்டுத் திட்டம் போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ததும் அரசியலில் அபிவிருத்தி தான். இது போன்று என்னால், எமது மக்களுக்கு தனிப்பட்ட ரீதியிலும், பொதுவான வேலைத்திட்டமாகவும் பல மில்லியன் ரூபாய்க்களுக்கான வேலைத்திட்டங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

என்னை சந்திப்பதற்கு யாரும் ஏஜெண்டுகளை நாடி வரவேண்டிய தேவையில்லை. நான் ஊரில் நிற்கும் நாட்களில், நேரில் வந்து சந்திக்கலாம். அல்லது அவசரத் தேவை என்றால் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு கதைக்கலாம். அவ்வாறு எவராவது தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னிடம் கதைக்க முடியாமல் போனதாக இருக்க முடியாது.

எனவே, என்னிடம் வராமல், என்னைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளமால் “யாரோ சொன்னார், எங்கோ அமீர் அலி அப்படி பேசியதாம்” என்று கதைத்துக்கொண்டு இருக்காமல், என்னோடு சேர்ந்து வேலை செய்யுங்கள். மாவட்டத்தின் அபிவிருத்தியும், மாவட்டத்தின் கல்வியும் எமது உரிமைகளையும் வென்றெடுப்போம்” என்று கூறினார்.

Related Post